5.1 மொழிபெயர்ப்பும் விளைவுகளும்
மொழிபெயர்ப்புகளால் தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட
விளைவுகள், பல்வேறு துறைகளில் புதுமையையும் ஏற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளதை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
காணலாம்.
5.1.1 தமிழகச் சூழ்நிலைகள்
தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கான சூழ்நிலை
நெடுங்காலம் முன்பே தொடங்கிவிட்டது. தமிழர்கள் சுமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் வாழ்ந்த
பிறமொழி பேசும் மக்களுடனும் கடல் கடந்த நாடுகளில்
வாழும் பிறமொழி பேசும் மக்களுடனும் வணிகம், பண்பாட்டுத்
தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பண்டைத் தமிழரும்
கிரேக்கரும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்குச்
சான்றுகள் பல உள்ளன. ‘சேர நாட்டு மிளகு, பாண்டிய
நாட்டு
முத்து, சோழ நாட்டு ஆடை’
என்பன யவனர்
தமிழ்நாட்டிலிருந்து தம் நாட்டுக்கு
எடுத்துச் சென்ற
பொருட்களில்
சிலவாகும். யவனர் குடியிருப்புகள்
தமிழ்நாட்டில் இருந்தது; யவனர்
மதுவைத் தமிழ்நாட்டார்
அருந்தியது; யவன மல்லர்
தமிழக மன்னர்களுக்கு
மெய்க்காப்பாளர்களாக விளங்கியது; யவனர் காசு
தமிழ்நாட்டில்
புழங்கியது போன்ற அனைத்துச் செய்திகளும்
வரலாற்று
உண்மைகளாகும். எனவே கிறித்து பிறப்பதற்கு முன்பிருந்தே
பிறமொழி பேசும் மக்களுடன் கலந்து
கருத்துகளையும்
பொருட்களையும் பரிமாற்றம்
செய்யுமளவு பிறமொழி
அறிவுடையராகத் தமிழர் விளங்கினர்.
தமிழர் கிரேக்க மொழியை அறிந்திருந்தது போலவே
கிரேக்கரும் தமிழ்மொழியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் வணிக நோக்கிற்காகச் சொல்
அடிப்படையில் மொழிபெயர்ப்புத் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.
தமிழ் மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கோ அல்லது கிரேக்க
மொழியிலிருந்து தமிழ் மொழிக்கோ ஒரு முழுமையான நூலை
மொழிபெயர்த்ததாக அறிய முடியவில்லை. ஆனால் ''தமிழின் இனிமை கருதியோ அல்லது தமிழ் ஒலியைப் பதிவு செய்யக்
கருதியோ ஒரு கிரேக்க நாடகத்தின் ஒரு பகுதியில் தமிழ்ச்
சொற்களை வழங்கியும் அதற்குக் கிரேக்க மொழிபெயர்ப்பும்
தந்து எழுதியுள்ளனர்'' என்கிறார் கி.கருணாகரன் மொழி
வளர்ச்சி என்ற தமது நூலில்.
பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய இந்தியாவின்
பழைய மொழிகளோடு தமிழ்மொழி தொடர்பு கொண்டு
இருந்தது என்பதற்கு இலக்கிய வரலாற்றில் பல சான்றுகளைக்
காட்டலாம்.
கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து
இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள், தொடக்கத்தில்
வணிகத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உள்நாட்டு ஆட்சியில்
தலையிட்டனர்; கிறித்துவ சமயத்தைப் பரப்பும் முயற்சியிலும்
ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றவும்,
கிறித்தவ சமயத்தைப் பரப்பவும், ஐரோப்பியருக்குத் தமிழ்
உள்ளிட்ட பல இந்திய மொழிகளைக் கற்க வேண்டிய தேவை
ஏற்பட்டது. இதற்காக இருமொழி அறிந்த
மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு
துவிபாஷிகள் அல்லது துபாஷ் என்று பெயர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்விமுறை
நடைமுறைக்கு வந்தது. அதனால் ஆங்கில இலக்கியங்கள்
கற்கும் வழக்கம் ஏற்பட்டது. ஆங்கில இலக்கிய வகைமைகள்
அக்காலத்தில் ஆய்வு முயற்சியாகத் தமிழில்
மேற்கொள்ளப்பட்டன. சில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.
சில நூல்கள் தமிழில் தழுவி எழுதப்பட்டன.
|