5.4 இலக்கியம் சார்ந்த விளைவுகள்
இலக்கியங்கள், அவை தோன்றுகின்ற காலத்தின்
கண்ணாடி என்பார்கள். காலத்திற்கேற்ப இலக்கியங்களின்
பாடுபொருள், உருவம், அமைப்பு முதலியவற்றில் புதுமைகள்
தோன்றுவது இயற்கை. இத்தகைய புதுமைகளைக்
காலத்திற்கேற்ப வரவேற்க வேண்டும் என்பதற்கு நன்னூல்
என்ற இலக்கண நூல் வகை செய்கிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே
என்ற இலக்கண நூற்பா இலக்கணங்கள் காலத்திற்கேற்ப
மாற்றமும் புதுமையும் பெற்றுப் பொலிவடைய வழிவகை
செய்வதை இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
இத்தகைய புதுமைகளைத் தமிழ்மொழியும் ஏற்றுக்
கொண்டுள்ளது.
வடமொழி நூல்கள் மொழிபெயர்ப்பாகவோ,
தழுவலாகவோ தமிழில் இடம்பெற்ற போது தமிழில்
புதுவகைப் பாடுபொருள் தோன்றியுள்ளது. அவ்வாறே 19ஆம்
நூற்றாண்டில் ஆங்கிலம் வழியாக உலக இலக்கியங்களின்
வகையும் வடிவமும் தமிழ்மொழியின் இடையறாத வளர்ச்சியை
ஊக்குவித்தன.
5.4.1 முற்கால இலக்கிய வகையும் வடிவும்
மொழிபெயர்ப்பு அல்லது தழுவல், மூலமொழியின்
பாடுபொருள் நிலையில் அமைந்துள்ள சமூகப் பண்பாட்டுக்
கூறுகளை, பெறும் மொழியில் உள்ள வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்துகிறது.
தமிழில்
தோன்றியுள்ள
காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,
பெரியபுராணம் ஆகியன மட்டும் தமிழில்
மூலப்படைப்புகளாக அமைந்தன. மற்றவை யாவும் பிராகிருதம்,
சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாக அல்லது
தமிழாக்கங்களாக அமைந்துள்ளன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் பைசாசம் என்னும்
மொழியில், குணாட்டியர் எனும் புலவர் உதயணன்
சரித்திரத்தைப் பாடினார். பின்னர் துர்விநீதன் என்னும் அரசன்
அந்தக் கதையை வடமொழியில் பிருகத்கதா என்ற பெயரில்
இயற்றினான். இந்த வடமொழி நூலைத் தழுவியே கொங்கு
வேளிரின் பெருங்கதை அமைந்துள்ளது.
க்ஷத்திர சூடாமணி,
கத்தியசிந்தாமணி, ஜீவன்தார
சம்பு, ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களைத் தழுவியே
சீவக
சிந்தாமணி எழுதப்பட்டது. தோலாமொழித் தேவரின்
சூளாமணியும் வடமொழி நூல் ஒன்றின் தழுவலே ஆகும்.
சிறுகாப்பியங்களுள் யசோதர காவியம் என்ற காப்பியத்திற்கு
புஷ்பதந்த என்பார் சமஸ்கிருதத்தில்
இயற்றிய யசோதர
காவிய என்ற படைப்பே மூல நூலாகும்.
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கருநாடக நாட்டில்
தோன்றிய வீரசைவம் தழைத்து ஓங்கியது. அந்தச் சமய
குருமார்களில் ஒருவரான அல்லமாப் பிரபு என்பவரின் கதை
பிரபுலிங்க லீலா என்ற காப்பியமாகப் பதினான்காம்
நூற்றாண்டில் கன்னட மொழியில் இயற்றப்பட்டது. இதனை,
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச
சுவாமிகள், பிரபுலிங்க லீலை என்ற சிற்றிலக்கியமாகத்
தமிழாக்கம் செய்துள்ளார்.
மேற்கண்டவை சமண, பௌத்த, வீர சைவ சமயங்கள்
தழைத்தோங்குவதற்கான மொழிபெயர்ப்புகளாகவோ,
தழுவல்களாகவோ அமைந்தன எனலாம். இதனால் தமிழின்
பாடுபொருள் நிலையிலும் காப்பிய அமைப்பு நிலையிலும்
நிறைய மாற்றங்களும் ஏற்பட்டன.
|