6.0 பாட முன்னுரை

குவலயக் கிராமம் (Global Village) என்ற அளவில் உலகம் சுருங்கிவிட்டது. தகவல் தொடர்பு வசதிகள் நன்கு பெருகியுள்ளன. உலகின் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் அம்மொழிகளைக் கற்பதனால் பெறப்பட்ட அறிவுச் செல்வங்களை அவரவர் தம்முடைய தாய்மொழியில் தருவதற்கும் பலர் முற்படுகின்றனர். மனித மொழிபெயர்ப்புப் போல இன்னும் விரைவாக மொழிபெயர்க்க இயந்திரங்களைக் கொண்டு மொழிபெயர்க்கவும் தற்காலத்தில் முற்படுகின்றனர். தகவல்களைப் பெறவும், பரிமாறவும், கருத்தளிப்புகள் வழங்கவும் பயன்படுகின்ற அழைப்பு மையங்கள் (Call centers) வழி பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்ற நிலையில் பணியாளர்களுக்கான முக்கிய தகுதியே அமெரிக்க ஆங்கிலமோ, இங்கிலாந்து ஆங்கிலமோ அறிந்திருக்க வேண்டும் என்பதுதான். ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருத்தல் தேவையான ஒன்றாகி விட்டது.

மொழிபெயர்ப்புகள் அறிவுப்பரவல் காரணமாகப் பெருமளவில் உருவாகியுள்ளன. ஆயினும் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் அல்லது ஒரு படைப்பு முழுநிறைவுடையதாக இருப்பதில்லை. சில நேரம் மாறுபட்ட பொருளை ஏற்படுத்தி மொழிபெயர்ப்பாளனின் அறியாமையை வெளிப்படுத்திவிடுகிறது. மொழிபெயர்ப்பாளர் இருமொழி அறிவை முழுமையாகப் பெறாமலும், மொழி அமைப்பின் அடிப்படைகளை அறியாமலும் செய்கின்ற மொழிபெயர்ப்புகள் தவறானவையாக அமைந்து விடுகின்றன.

இலக்கிய மொழிபெயர்ப்பாக இருந்தாலும், அறிவியல் மொழிபெயர்ப்பாக இருந்தாலும், கலைச் சொற்களை உருவாக்குவதாக இருந்தாலும் மொழிபெயர்ப்பின் போது ஏற்படும் சிக்கல்களை எடுத்துக் கூறும் விதத்திலும், அத்தகைய சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உரிய ஆலோசனைகளைக் கூறி விளக்கும் விதத்திலும் இந்தப் பாடம் அமைகிறது.