6.1 மொழிபெயர்ப்பாளர்
மொழிபெயர்ப்பாளர் என்பவர் மொழிக்கும், மக்களுக்கும்,
மனிதத் தன்மைக்கும் ஆக்கம் சேர்ப்பவர். தன்னை
வெளிப்படுத்தாமல் மூலத்தின் பெருமைகளை எடுத்துரைப்பவர்.
அறிவுச் செல்வங்கள் பலவற்றைப் பரவலாகப் பலர் நுகர வழி
செய்பவர். ஆகவே மொழிபெயர்ப்பாளருக்கும்,
மொழிபெயர்ப்புத் துறைக்கும் ஒரு தனித்தகுதி உண்டு.
உள்ளத்தில் எழும் உந்துதல் காரணமாக இத்துறையில் பங்கு
கொள்பவர்களும், திறமை காரணமாக இத்துறையில்
பணியாற்றுபவர்களும் இதனை மனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே ஒரு மொழிபெயர்ப்பாளரின் அடிப்படைகளாக
அமைவன பற்றி அறிந்து கொள்வோம். இத்தகுதிகள்
அமைந்துவிட்டால் மொழிபெயர்ப்பாளர் தங்கள்
மொழிபெயர்ப்பின் போது எழும் சிக்கல்கள் பலவற்றைத்
தவிர்த்துக் கொள்ளலாம்.
6.1.1 இருமொழி அறிவு
ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு, மொழிபெயர்ப்பில்
தொடர்புடைய இருமொழிகளிலும், அதாவது மூலமொழி,
பெறுமொழி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்த, அகன்ற புலமை
இருத்தல் வேண்டும். இரு மொழிகளிலும் சொற்களின் நேரடி
பொருள் வழக்குகள், சிறப்பு வழக்குகள் (idioms), உவம,
உருவக வழக்குகள், உணர்வுப் பொருள் வழக்குகள், விலக்குச்
சொற்கள்/ தொடர்கள், மொழியின் கட்டமைப்பு விதிகள்,
சொல்லாக்க வடிவமைவுகள், ஒலிமரபுகள் ஆகிய அனைத்திலும்
தேர்ச்சியும், பயிற்சியும் இருத்தல் வேண்டும். இருமொழி பேசும்
மக்களின் பண்பாட்டுப் பின்புலம், பண்பாட்டு வழக்குகள்
ஆகியவை பற்றிய அறிவும் தேவைப்படுகிறது.
• அறிவுத்துறையில் புலமை
மொழிபெயர்ப்பாளருக்கு, தான் மொழிபெயர்க்கத் தேர்ந்து
கொண்ட அறிவுத்துறையில் ஆழ்ந்த அறிவும் பிடிப்பும்
வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாகும். இருமொழிப்
புலமை மட்டும் கொண்டு ஒரு துறை சார்ந்த அறிவுக்
கருவூலத்தை மொழிபெயர்த்துவிட முடியாது. அது போலவே
துறைப்புலமை மட்டுமே கொண்டு ஒருவர் மொழிபெயர்க்கத்
துணிந்துவிடக் கூடாது. இருமொழிப் புலமையும், துறைப்புலமையும் இணைந்து செயல்பட வேண்டும். இப்புலமை
அறிவியல்துறை சார்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு
அடிப்படையான ஒரு தகுதியாகும்.
• மிகையும் குறையும் வேண்டாம்
மொழிபெயர்ப்பாளருக்கு அவர் மொழிபெயர்க்கும்
துறையில் மிகுதியான புலமை இருக்கும்போது, மூலத்தின்
செய்தியைக் காட்டிலும் அதிகமான செய்திகளை,
பெறுமொழியில் தன்னையறியாமலேயே விளக்கமாகத்
தந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் அது மொழிபெயர்ப்பின்
வரன்முறைகளை மீறுவதாகும். பிறருக்குப் பயன்படும் வகையில்
அவர் தன் புலமையை வழங்க வேறு களங்கள் உண்டு.
அல்லது தனி நூலாகவும் வெளியிட்டுக் கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பு அதற்கேற்ற களம் அல்ல. இங்கு மூலத்தின்
செய்திகள் மிகாமலும், குன்றாமலும் பெறுமொழியில் தரப்பட
வேண்டும். ‘மூலத்தை’ மாற்றியும், சிதைத்தும், சில பகுதிகளை
விடுத்தும் செய்யப்படும் மொழிபெயர்ப்பு அவற்றை ஆக்கிய
மறைந்த மாமேதைகளுக்குச் செய்யும் மரியாதைக்
கேடு
என்ற டிரைடனின் கூற்று கவனிக்கத் தக்கது.
மூலத்தின்
செய்தியைக் காட்டிலும் கூடுதலாகவோ
குறைவாகவோ
பெறுமொழியில் தரக்கூடாது.
6.1.2 கலைச் சொல்லாக்கம்
தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிப் பேசும்போது,
கலைச்சொல்லாக்கப் பணியைச் செய்வதற்கு முதலில்
ஒருவருக்கு அம்மொழியின் மீது இயல்பான அன்புணர்வு
அமைந்திருத்தல் வேண்டும். சில மொழிபெயர்ப்பாளர் மூலச்
சொல்லை அப்படியே கையாண்டால்தான் பொருளை மிகத்
தெளிவாகவும், ஆற்றலோடும் புலப்படுத்த முடியும் என்று
நம்புகிறார்கள். மேலும் மூலமொழிச் சொற்களைக் கையாளுவது
பெருமைக்குரிய ஒன்று என்று கருதுவதும் உண்டு. வேறுசிலர்
எக்காரணம் கொண்டும் மூலமொழிச் சொற்களைப்
பயன்படுத்தவே கூடாது என்று கருதுகிறார்கள். மூலமொழியில்
உள்ள எல்லாச் சொற்களுக்கும் - உலகு
தழுவிய
(International) குறியீடுகள் உட்பட - பெறுமொழியில்
புதுமையாக்கம் காண வேண்டும் என்பதில் உறுதியாக
இருக்கிறார்கள். இவ்விரு சாராரின் போக்கும், பெறுமொழிக்கு,
இயல்பான எளிய மொழிபெயர்ப்புக்கு
இடையூறாக
அமைகின்றன. கலைச்சொல்லாக்கம், பெறுமொழியாளர்க்கு
எளிதில் புரியக் கூடியதாக இருக்க வேண்டும்.
• மொழி பற்றிய மனப்பான்மை
மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் மூலமொழியைப் பற்றியும்
அம்மொழியின் எடுத்துரைக்கும் திறம் அல்லது உரைமைத்திறன்
(Communicative potential) பற்றியும் மிகை உயர் எண்ணம்
கொண்டிருக்கின்றனர். இதனால் பெறுமொழியின்
கிளத்தும் திறன் அல்லது உரைமைத்திறனைக்
குறைத்து
மதிப்பிடுகின்றனர். தத்துவம், சமயம் சார்ந்த கருத்துகளையும்
(ideas) கருத்தாக்கங்களையும் (Concepts)
புலப்படுத்துவதற்குக் கிரேக்கத்துக்கு நிகரான மொழியே
இல்லை, சமஸ்கிருதத்திற்கு இணையான மொழியே இல்லை
என்று கருதுபவர்களை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
ஒருமொழிபெயர்ப்பாளர் பெறுமொழியின் கிளத்துத் திறனை
அல்லது உரைமைத் திறத்தை எக்காரணம் கொண்டும் குறைத்து
மதிப்பிடக் கூடாது.
• அறிவியல் பார்வை
மொழிபெயர்ப்பாளர் விருப்பு வெறுப்பு இன்றி
மொழிகளையும் மக்களையும், பண்பாட்டையும் மதிக்கும்
அறிவியல் பார்வை (Scientific look) உடையவராய்
இருத்தல் வேண்டும். திருந்தா மொழிக்கும் அதற்குரிய
தனிச்சிறப்புத் தன்மை உண்டு. தமக்குத் தெரிந்த மொழிகள்
தான் உயர்ந்தவை என்ற மனப்பான்மை ஒருபோதும் கூடாது.
எல்லா மொழிகளிலும் அவ்வவற்றிற்கு என்று பண்பாட்டுக்
கூறுகளும் வாழ்வியல் மதிப்புகளும் உள்ளன என்பதை உணர
வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மொழிகளின் தனிச்சிறப்புத்
தன்மைகளை மதிக்க வேண்டும்.
6.1.3 மொழிபெயர்ப்பியல் பற்றிய அறிவு
மொழிபெயர்ப்பின் இயல்புகள், அதில் கையாளப்படும்
உத்திகள், கோட்பாடுகள் முதலியன பற்றிய அறிவும்
மொழிபெயர்ப்பாளருக்கு இன்றிமையாதது ஆகும். முற்காலத்தில்
மொழிபெயர்ப்பு என்றால் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு
என்ற கருத்து நிலவியது. அடுத்த காலக்கட்டத்தில்
தொடர்களுக்கு முதன்மை தரப்பட்டது. பின்னர் பத்தி
பத்தியாகப் பார்க்க வேண்டும் என்று கருதப்பட்டது.
இம்முறைகள் அனைத்திலுமே மூலப்பகுதியின் முழுமை
அடையாமைக்கு வாய்ப்பு உண்டு. மொழிபெயர்ப்பு சிறக்க
வேண்டுமானால் மூலத்தின் அமைப்பினை முழுமையாக
மனத்தில் கொண்டு, பின் சூழ்நிலைக்கேற்ப மொழிபெயர்ப்பு
அலகுகளை (translation units) வகுத்துக் கொண்டு, பெறு
மொழிக்கு மாற்ற வேண்டும். இலக்கியத்தில் சொற்கள், சொல்
தொகுதிகள், இலக்கண உறவுகள், இவற்றின் பொருளோடு,
இவை கடந்த பொருளும் மொழிக்கு உண்டு. இந்த முழுமையை
மனத்தில் வாங்கி, பெறும் மொழியில் தர வேண்டும். அதற்கு
மொழிபெயர்ப்பு நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.
• மொழித்திறம்
ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மூலமொழியில் உள்ள
மொழித்திறத்தைக் காட்டிலும் பெறுமொழியில் மொழித்திறம்
இன்னும் கூடுதலாக இருத்தல் வேண்டும்.
ஏனென்றால்
மூலத்தின் பொருளையும், நயங்களையும் மயக்கமின்றிப் புரிந்து
கொண்டால் போதும். ஆனால் பெறுமொழியிலோ புரிந்து
கொண்ட பொருளைச் சுவை குன்றாமல் வடிவமைத்துத் தர
வேண்டும். எனவே, மொழிபெயர்ப்பில் பெறுமொழியில்
மொழித்திறம் மேலோங்கி இருக்க வேண்டும். மூலமொழியில்
புலமையுள்ள ஒருவர் தன் தாய்மொழியில் மொழிபெயர்ப்பதே
சிறப்பானதாகும். பன்மொழிப் புலமை இருப்பினும் மொழித்திறம்
மிகுந்து உள்ள தாய்மொழியில் பெயர்ப்பது சிறந்தது.
|