6.2 இலக்கிய மொழிபெயர்ப்புகள்
இலக்கியம் ஒரு சாராரின் பண்பாட்டை, பழக்க
வழக்கங்களைப் பிரதிபலிப்பதாக
அமைகிறது. அதனால்
இலக்கியத்தை மொழிபெயர்த்தல் என்பது ஒரு சமூக நிகழ்வாக
உள்ளது. ஆனால் இலக்கியத்தை மொழிபெயர்க்கின்றபோது
பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரே
மொழிக்குடும்பத்தைச் சார்ந்த (திராவிட மொழிகளான தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை) மொழியிலுள்ள
இலக்கியங்களை மொழிபெயர்ப்பது என்பது எளிது.
ஏனென்றால் அவை பொதுவான பண்பாட்டுப்
பின்னணியினையும், மொழியியல் அமைப்பினையும்
கொண்டதாக விளங்குகின்றன. ஒப்புமை இல்லாத மொழிகளை
மொழிபெயர்ப்பதில் சிக்கல் இன்னும் அதிகமாகும். தமிழும்
ஆங்கிலமும் இருவேறு குடும்பத்தைச் சார்ந்த காரணத்தாலும்
வேறு பண்பாட்டைக் கொண்டதாலும் பல்வேறு நிலைகளிலே
சிக்கலைத் தோற்றுவிக்கின்றன.
இலக்கிய மொழிபெயர்ப்பில் எழுகின்ற சிக்கல்களைப்
பொதுவாக இரண்டு நிலைகளில் காணலாம். அவை,
(1) பொதுவாக எந்த மொழிக்குமான சிக்கல்கள்
(2) குறிப்பிட்ட மொழியில் ஏற்படும் சிக்கல்கள்
என்பன இவற்றை வடிவம், பொருள் என்ற இரு
நிலைகளில் அணுகலாம். வடிவம் என்பதில் சொற்றொடர்
அமைப்பு, சொல்லாட்சி முதலியன அமைந்து இன்னும் சில
சிக்கல்களை ஏற்படுத்தலாம். வாக்கிய அமைப்பில் கவிதை,
உரைநடை போன்றவற்றில் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
பல்வேறு வகையான உள்அமைப்பின் காரணமாக,
காப்பியம், விடுகதைகள், பழமொழிகள், கட்டுரை, புதினம்,
நாடகம் இவற்றிற்கிடையேயும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது. சொல்லாட்சியில் மொழி, நடை, போன்ற கூறுகளும்
பல்வேறு சிக்கலைத் தோற்றுவிக்கின்ற நிலை ஏற்படுகின்றது.
மொழியில் கூட இலக்கிய, கொச்சையான, மரபு சார்ந்த
வழக்குச் சொற்கள் சிக்கலைத் தோற்றுவிப்பது இயல்பானது.
சிலேடை, ஒலிக்குறிப்பு, இரட்டைக் கிளவி, ஆகுபெயர்,
அடுக்குத் தொடர் போன்றவையும் சிக்கலைத்
தோற்றுவிக்கின்றன.
பொதுவாக எல்லா மொழிகளிலும் ஏற்படுகின்ற
சிக்கல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
• சொல்லும் பொருளும்
ஒரே சொல் பல பொருளைக் குறிக்கிறது. இந்நிலை
மொழிபெயர்ப்பாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு
குறிப்பிட்ட சொல் ஏற்படுத்துகின்ற பொருள் என்ன என்பதை
அறிந்து, அப்பொருளை மொழிபெயர்ப்பில் கொண்டுவர
முயற்சி செய்ய வேண்டும்.
சான்றாக: ‘கிழமைப்பட வாழ்’ என்ற ஆத்திசூடி
வரியில்,
கிழமை என்ற சொல் நாள், உரிமை, நட்பு ஆகிய பொருளை
உணர்த்துகின்றது. இவற்றில் நட்பு என்ற பொருளைத் தான்
ஆத்திசூடி குறிக்கிறது. இதனை ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கும்போது ''Live in
Friendship'' என்று
பெயர்க்கவேண்டியுள்ளது. அப்படிப் பெயர்த்தால்தான்
மூலநூல் கூறும் கருத்துகள் ஆங்கிலத்தில் தெளிவாக
விளக்கப்பட்டிருக்கும்.
சொற்களின் பொருத்தமான பொருளைக் கையாள
வேண்டும்.
• பழமொழி
மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களிலே, அதாவது
பேச்சு வழக்கில் பழமொழிகள் பெரும்பாலும் கலந்திருப்பது
காணலாம். ‘வாய்மொழியிலும் எழுத்துமொழியிலும்,
பழமொழி
மிகவும் முதன்மையான இடம்பெறுகிறது. பழமொழி அந்தந்த
மொழியில் பேசுகின்ற மக்களின் வாழ்க்கை அனுபவத்தின்
வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய
பயன்பாடுகளை
மொழிபெயர்ப்பது கடினம். இத்தகைய சூழ்நிலையில்
பெறுமொழியில் மூலமொழிப்
பழமொழிக்கு இணையான
பழமொழியைப் பயன்படுத்துவதில்
நிறைவடையலாம்.
அப்பொழுதுதான் பெறுமொழியாளர்கள் அப்பழமொழியின்
உள்ளார்ந்த உயிரோட்டத்தை உணர முடியும்.
சான்றாக,
அத்தி பூத்தாற் போல என்ற தமிழ்ப் பழமொழி,
அரிதான நிலையினைக் குறிக்கின்ற பழமொழியாகும். இதனை
அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றபோது உணர்வினைக்
கொடுக்க முடியாது. அதற்கு இணையாக ‘As rare as hen’s
teeth’ என்ற இணையான ஆங்கிலப் பழமொழியைக்
கொடுப்பது நல்லது.
• மரபுச் சொற்கள்
மரபுச் சொற்கள் அந்தந்த மொழியின் மரபுப்படி
வெளிப்படுவன ஆகும். தமிழ் இலக்கியங்களில்
பெரும்பான்மையான மரபுச் சொற்கள் பயன்படுகின்றன.
இவையும் மொழிபெயர்ப்புப் பணியில் சிக்கலை
ஏற்படுத்துகின்றன. சான்றாக, தமிழில் ‘மந்தி’ என்று பெண்
குரங்கையும், ‘கடுவன்’ என்று ஆண் குரங்கையும் குறிக்கும்
மரபுச் சொற்களைப் பயன்படுத்துவோம். இவ்விரண்டு
சொற்களையும் ஆங்கிலத்தில் female monkey and male
monkey என்று பயன்படுத்த வேண்டிய சூழலில்
நாம்
உள்ளோம். ஆகவே மொழிபெயர்ப்பாளன் பெறுமொழியின்
மரபுச் சொற்களையும் தருமொழியின் மரபுச் சொற்களையும்
தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.
• வழக்குச் சொற்கள்
மரபுச் சொற்களைப் போன்றே வழக்குச் சொற்களும்
மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
வழக்குச் சொற்களை மொழிபெயர்ப்பாளர்களால் மொழிமாற்றம்
செய்ய முடிவதில்லை. மூலமொழியிலுள்ள சொற்களுக்கு
இணையான சொற்களைப் பெறுவதும்கூடக் கடினமான
செயலாகும். தமிழ் இலக்கியத்தில் வட்டார வழக்குகளைப்
பயன்படுத்துதல் என்பதை மு.வரதராசனாருக்குப் பின்னர் வந்த
படைப்பாளிகள் பின்பற்றியுள்ளார்கள். குறிப்பாகச் சிறுகதை
உலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளள புதுமைப்பித்தன்,
போன்றவர்களும், ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தன்
போன்றோரும், கரிசல் நடை நாயகன் கி.ராஜநாராயணன்
போன்றோரும், முற்போக்கு இலக்கியச் சிற்பிகளும் பெரும்பாலும்
வட்டார வழக்கில் உணர்வு ததும்ப எழுதுகின்றனர்.
அவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாக இருந்தால்,
வழக்குச் சொற்கள் நிறைந்த வாக்கியங்கள், பத்திகள் முதலியவற்றை
விலக்கி ஒரு எளிய நடையைப் பயன்படுத்தலாம்.
• பொருள்கோள்
கவிதையில் சொற்றொடர்கள் சில வேளைகளில்
பொருளில் தெளிவின்மையைத் தோற்றுவிக்கும். சொற்களின்
வரிசையினை மாற்றி அமைத்தால்தான் சரியான பொருளைத்
தெரிந்து கொள்ள அது வாய்ப்பாக அமையும். அதனால்
மொழிபெயர்க்கும்போது மூலத்தில் இருப்பது போன்றே
வாக்கிய அமைப்பை வைத்துக் கொள்வதா அல்லது
தெளிவிற்காக வரிசையினை மாற்றி அமைத்தல் நல்லதா? என்ற
கேள்வி எழுகிறது.
ஆகவே சொல்லின் பொருளுணர்ந்து தக்க சொல்
கொண்டு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்.
• விடுகதைகள்
விடுகதைகள் என்பது சொல்லும் அதனோடு சேர்ந்து
பொருளும் வருமாறு அமையும். இந்நிலை அமையாவிட்டால்
விடுகதைக்கு விடையளிப்பது கடினம். ஆனால் சொல்லையும்
பொருளையும் ஒரு சேர அமைக்கின்ற நிலையிலே அதனைப்
பெயர்க்க முடியாது.
விடுகதையினை விளக்கமாக மொழிபெயர்த்தால் அது
விடுகதையாக அமையாமல் நிகழ்ச்சி விளக்கமாக அமைந்து
விடும்.
இம்மாதிரியான நிலைகளை மொழிபெயர்க்க முடியாதவை
என்ற வகையிலும் அடக்கலாம்.
• சிலேடை
ஆங்கிலத்தில் Pun என்பது இங்குச் சிலேடையாக
வெளிப்படுகிறது. இருபொருள் தருகின்ற சொற்களே அவை
என்பது தெரிந்ததே. இவ்வாறு சிலேடையாக மொழிபெயர்ப்பில்
அமைவது கடினமானது.
• தொடை நயமும் உறவுமுறைச் சொற்களும்
தமிழ்மொழிக்கே உரிய சில மரபுகள், வழக்குகள் உள்ளன.
அவற்றை மொழிபெயர்க்கும் போதும் மொழிபெயர்ப்பாளர்
பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியது உள்ளது.
தமிழில் உறவுமுறைச் சொற்கள் அதிக அளவில்
இலக்கியங்களில் வழங்கி வருவதைக் காண்கிறோம்.
இம்மாதிரியான உறவுமுறைச் சொற்களை மொழிபெயர்க்கும்
போது அதற்கு இணையான சொல்லையே பயன்படுத்த
வேண்டிய நிலையில் உள்ளோம். அதோடு தேவை ஏற்பட்டால்
அடிக்குறிப்பில் விளக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
• இரட்டைக் கிளவி
இரட்டைக் கிளவி என்ற சொற்றொடரானது தமிழுக்கே
உரியது. குடுகுடு கிழவன் என்ற தொடரில் குடுகுடு என்பது
பெயரடையாக அமைகின்றது. இப்பெயரடையானது, மிகவும்
வயதானவர் என்ற பொருளைத் தருகிறது. இதே போன்று ஒரு
புறநானூற்றுப்பாடலில் குழந்தையின் நடையை 'குறுகுறு நடந்து' என்று புலவர் வருணிக்கிறார். மொழிபெயர்ப்பில் நாம் அதன்
பொருளைக் கொடுக்கலாமே அன்றி, அந்தக் குறிப்பிட்ட
சொற்றொடரை அப்படியே மொழிபெயர்த்துத்தர இயலாது.
• அடுக்குத் தொடர்
தமிழ் இலக்கியத்தைப் பொருத்த அளவில், கவிஞன்
விரும்புகின்ற உணர்வைக் கொடுப்பதற்கும், தன் கருத்திற்கு
அழுத்தத்தைக் கொடுப்பதற்கும், அடுக்குத் தொடர் என்ற
உத்தியைக் கையாள்கிறான்.
சான்றாக,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
(குறள் - 29)
என்று அழுத்தம் கொடுப்பதற்காக அமைகின்றது.
ஆனால் இந்த உத்தியின் முக்கியப் பண்பானது
மொழிபெயர்ப்பில் விடுபட்டுப்போகிறது.
• குறிப்புப் பொருள்
தமிழர்களின் அகப்பாடல்கள் உள்ளுறை, இறைச்சி என்ற
குறிப்புப் பொருள்களின் கருவூலமாக விளங்குகின்றன. அதில்
புலவர்கள் குறியீடு, உவமை, உருவகம் முதலியவற்றைக்
குறிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள
குறிப்புப் பொருளை விளங்கிக் கொள்ளத் தனி விளக்கம்
தேவைப்படுகிறது. இவ்வாறு ஆகுபெயர், சித்திரக்கவி,
நிரோட்டகம் முதலியனவற்றிலும் மொழிபெயர்ப்பின்போது
அவற்றின் சிறப்பியல்புகள் சிதைந்து
விடுகின்றன.
தமிழ்க் காப்பியங்களில் - காண்டம், காதை, படலம்
அல்லது பருவம் என்பன உட்பிரிவைக் குறிக்கின்ற சொல்லாக
அமைகிறது. அதனை நாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்
போது, canto அல்லது section அல்லது part என்ற
சொல்லையே பயன்படுத்துகிறோம். மேற்கூறிய தமிழ்ப்
பகுப்புகளுக்கு இவை இணைகள் என்று சொல்ல முடியாது.
• கலைச் சொற்கள்
ஒவ்வொரு மொழி இலக்கியத்துக்கும் ஒவ்வொரு
தனித்தன்மை, சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் அவ்வாறே மொழிபெயர்ப்பது என்பது
இயலாத ஒன்று. அந்த வகையில் தமிழ் இலக்கியமானது,
தமிழர்களின் மரபுச் சொற்களை, பழக்க வழக்கங்களைத் தன்
கவிதையிலே கொண்டு அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில்
இம்மாதிரியான மரபுச் சொற்கள் மிகுதி.
சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள திணை, துறை,
அகம், புறம், தோழி, பாங்கன், பாணன், பாடினி, வெறியாட்டு,
அறத்தொடு நிற்றல் முதலியவற்றை அதே பொருளில்
மொழிபெயர்க்க முடிவதில்லை. இம்மாதிரியான நிலைகளில்
மொழிபெயர்ப்புப் பணியானது அடிக்குறிப்புகளில்
விளக்கப்படுதல் நலம். மரபினைப் புரிந்து கொண்டாலொழிய
வெளிநாட்டவர் தமிழரின் பழமையான இலக்கியத்தைப் புரிந்து
கொள்வது கடினம்.
இது போன்று பிறதுறைகளில் எழும் மொழிபெயர்ப்புச்
சிக்கல்களையும் காணலாம்.
|