மொழிபெயர்ப்புக்கு ஏற்றதாயிருந்த பழந்தமிழ் நாட்டுச்
சூழலை விளக்குக.
தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கான
சூழ்நிலை நெடுங்காலம் முன்பே தொடங்கிவிட்டது. தமிழர்கள் சுமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் வாழ்ந்த பிறமொழி
பேசும் மக்களுடனும் கடல் கடந்த நாடுகளில் வாழும் பிறமொழி பேசும்
மக்களுடனும் வணிகம், பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.
பண்டைத் தமிழரும் கிரேக்கரும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. ‘சேர நாட்டு மிளகு, பாண்டிய
நாட்டு முத்து, சோழ நாட்டு ஆடை’ என்பன யவனர் தமிழ்நாட்டிலிருந்து
தம் நாட்டுக்கு எடுத்துச் சென்ற பொருட்களில் சிலவாகும். யவனர்
குடியிருப்புகள் தமிழ்நாட்டில் இருந்தன; யவனர் மதுவைத் தமிழ்நாட்டார்
அருந்தியது; யவன மல்லர் தமிழக மன்னர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக
விளங்கியது; யவனர் காசு தமிழ்நாட்டில் புழங்கியது போன்ற அனைத்துச்
செய்திகளும் வரலாற்று உண்மைகளாகும். எனவே கிறித்து பிறப்பதற்கு
முன்பிருந்தே பிறமொழி பேசும் மக்களுடன் கலந்து கருத்துகளையும்
பொருட்களையும் பரிமாற்றம் செய்யுமளவு பிறமொழி அறிவுடையராகத்
தமிழர் விளங்கினர்.
|