5.1 அகராதிகள்

சொற்களைப் பற்றிய ஆய்வும் சொற்களஞ்சிய உருவாக்கமும் பற்றிய கருத்தும் தொல்காப்பியத்தில் சுடடப்பட்டுள்ளன. காலப்போக்கில் சொற்றொகுதியின் தேவையை அறிந்து நிகண்டுகள் உருவாக்கப்பட்டன. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நிகண்டு ஆக்கம் தமிழ் அகராதிக்கலை வளர்ச்சியில் தொன்மையானது. நிகண்டுகளில் மிகவும் பழமையானது திவாகரம் ஆகும். பின்னர் உருவாக்கப்பட்ட நிகண்டுகள் எல்லாம் திவாகரத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பொதுவாக நிகண்டுகளில் ஒரு தலைப்புச் சொல்லின் கீழ் ஒரு பொருள் பன்மொழிகள் தொகுத்துத் தரப்பட்டிருக்கும். அதாவது, ஒரே பொருளைக் குறிப்பிடுகின்ற பல சொற்கள். எடுத்துக்காட்டாக, யானை. இதனைக் குறிப்பிடுவதற்கு, வேழம், கைம்மா, களிறு, மா, கரி போன்ற பல சொற்கள் தரப்படும். நிகண்டில் பொருண்மைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மேலும் அவற்றில் வழக்கிறந்த சொற்கள் அதிகமாக இருந்தன; இக்காலத் தமிழுக்குத் தேவைப்படும் சொற்கள் இல்லை. இந்நிலையில் சிதம்பர இரேவணச்சித்தர் 1594இல் தொகுத்துத் தந்துள்ள அகராதி நிகண்டு, சொற்களை அகராதி அடிப்படையில் தந்துள்ளது.

5.1.1 தமிழில் அகராதியின் தோற்றம்

சொற்களை அகர வரிசையில் தொகுத்துப் பொருள் தரும் முறையானது, இந்தியாவிற்கு வந்த மேலைநாட்டாரின் தொடர்பால் ஏற்பட்டதாகும். மேலைநாட்டினர் இந்தியாவுடன் அரசியல், வணிகத் தொடர்புடன், கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் தாய்மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்நிலையில் அவர்கள் இந்திய மொழிகளை அறிந்துகொள்ள, அம்மொழிகளின் இலக்கணத்தை மேலைநாட்டு மொழிகளில் எழுதினர். அப்பொழுது குறிப்பு நூல்களாக அகராதிகளைத் தயாரித்தனர். இதனால்தான் தொடக்க காலத்தில் அகராதிகள் பெரும்பாலும் மேலைநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளன.

கி.பி.1679ஆம் ஆண்டில் அந்தோணி பிரயோன்சா அடிகளார் போர்த்துகீசிய-தமிழ் அகராதியை உருவாக்கினார் வீரமா முனிவர் சதுரகராதியை 1732இல் வெளியிட்டார். மேலும் அவர் தமிழ்-லத்தீன் அகராதி, போர்த்துகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி ஆகியவற்றையும் வெளியிட்டார். இன்றுவரை தமிழில் நூற்றுக்கணக்கான அகராதிகள் வெளியாகியுள்ளன.

அறிவியல் வளர்ச்சி காரணமாகத் தமிழில் உருவாக்கப்பட்ட கலைச் சொற்களின் தொகுப்பான அகராதிகளும் ஆட்சிமொழி அகராதிகளும் பல்துறை சார்ந்த அகராதிகளும் இன்று அதிக அளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.