5.3 அகராதி உருவாக்கத்தில் அரசியல்

சொல்லாக்கத்தின் போக்குகளை ஆராய்ந்தால் தேசிய வாதிகள், தமிழ்ப் பற்றாளர்கள், சொல்லாக்கத் துறை வல்லுநர்கள், மொழியியலாளர்கள் ஆகிய நான்கு பிரிவினரும் தத்தம் நோக்கில் பிரச்சினையை அணுகியுள்ளது புலப்படுகின்றது.

1930களில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசியவாதிகள், சமஸ்கிருத மொழிச் சொற்களைத் தமிழ் ஒலிபெயர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் எதிரொலியை 1932இல் சென்னை மாகாணத் தமிழக அரசாங்கம் வெளியிட்ட கலைச் சொற்கள் அகராதியில் காணவியலும். சமஸ்கிருதச் சொற்களை அகற்றிவிட்டு நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திச் சொல்லாக்க முயற்சியில், தமிழின் மீது பற்றுக் கொண்டோர் ஈடுபட்டனர். இதனால், 1936இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் கலைச் சொற்கள் அடங்கிய அகராதி வெளியிடப்பட்டது. இவ்வகராதியைத் தமிழக அரசு அங்கீகரித்து ஆணை பிறப்பித்தது. இவ்விரு அகராதிகளில் இடம் பெற்றிருந்த கலைச் சொற்களை ஒப்பிட்டு நோக்கினால், சொல்லாக்க வரலாற்றில் இடம் பெற்றிருந்த அரசியல் புலப்படும்.

ஆங்கிலக்
கலைச்சொற்கள்
1932-இல் அரசு
வெளியிட்ட கலைச்
சொற்கள்
சென்னை மாகாணத்
தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
கலைச் சொற்கள்
Electrolysis வித்யுத்விஸ்லேஷணம் மின்படுக்கை
Disinfectant பூதி நாசினி நச்சு நீக்கி
Lungs புப்புசம் நுரையீரல்
Duodenum பிரதாமாந்திரம் சிறுகுடல் அடி
Evaporation பரிசோஷணம் ஆவியாதல்
Leaflet பத்ரகம் சிற்றிலை
Marginal தாரலம்பனம் விளிம்பு ஒட்டிய

சொல்லாக்க அகராதித் தயாரிப்பில் ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கடந்த நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் அமைதியாக இருந்திருப்பின், இன்று தமிழ் தேக்க நிலை அடைந்து, வளங்குன்றி இருந்திருக்கும். சமஸ்கிருதத்தின் துணையின்றிப் பயிற்று மொழியாகத் தமிழ் இயங்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்காது.