2.2 தமிழும் அறிவியலும்

சிற்பம்

உலோகச் சிலை

தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்கள் உறுதி செய்கின்றன. மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சிற்பவியல், நீர் மேலாண்மை, கட்டடவியல் போன்ற அறிவியல் துறைகளின் பயன்பாடுகள் பற்றிய செய்திகளை இலக்கியப் படைப்புகள், வரலாற்று ஆவணங்கள் மூலம் அறியமுடிகின்றது. அவை பண்டைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓலைச் சுவடிகளில் வெடிமருந்து தொழில்நுட்பம், கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய மரபு அறிவியல் குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு.

2.2.1 அறிவியல் தமிழ் - தோற்றம்

ஐரோப்பியரின் இந்திய வருகைக்குப் பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வெளியான அறிவியல் நூல்கள், இதழ்களைப் போன்று தமிழிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அறிவியல் தமிழுக்கு ஆதாரமாகும். தொழிற்புரட்சியின் காரணமாக ஐரோப்பாவெங்கும் பரவிய அறிவியல் சிந்தனைகளின் வீச்சு, தமிழ்நாட்டிலும் பரவியதன் விளைவுதான் தமிழில் அறிவியல் நூல்களின் வெளிப்பாடு, தொடக்கத்தில் தமிழ் அறிவியல் நூல்கள், ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் நூல்களைத் தழுவியோ, மொழிபெயர்த்தோ வெளியிடப்பட்டன. இத்தகைய நூல்களுக்கு அன்று பெரிய அளவில் வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் ஆங்கிலேயர் ‘மெக்காலே’ கல்வி முறையினைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தபோது, சூழலில் மாற்றம் ஏற்பட்டது. தமிழின் மூலம் அறிவியல் பாடங்களைக் கற்கும் நிலை ஏற்பட்டபோது, அறிவியல் மொழிபெயர்ப்புகள் பெரிய அளவில் உதவின.

2.2.2 மொழிபெயர்ப்புகளின் தேவைகள்

இந்திய நாட்டின் முன்னேற்றம் என்பது, இன்று, முழுமையாக அறிவியல், தொழில்நுட்பவியலைச் சார்ந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சியும், மாறிவரும் புதிய உலகின் போக்குகளை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. மேலைநாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் அறிவியல் துறைகளில் நாளும் விரிவடையும் இடைவெளியைக் குறைத்திடல் வேண்டும். தமிழ்மொழியை அண்மைக் காலத்தியதாக ஆக்க வேண்டுமெனில், தொடக்கநிலையில் மொழிபெயர்ப்புகள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் வாழ்க்கை வளம் அடையும்.

அறிவியல் நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் என்பது தொடரும் பணியாகும். இதன்மூலம் அறிவியல் மரபு தமிழில் உருவாகும்; அறிவியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வளமுடையதாகத் தமிழ்மொழி வளமடையும். பின்னர்த் துறைசார்ந்த இதழ்கள் தமிழில் வெளிவரும் நிலைமை ஏற்படும்.

2.2.3 மொழிபெயர்ப்புகளின் தன்மைகள்

ஒப்பீட்டளவில் அறிவியல் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழி பெயர்ப்பிலிருந்து மாறுபட்டது. அறிவியல் மொழிபெயர்ப்பில் உணர்ச்சி, சந்தம், ஒலிநயம், அலங்காரச் சொற்கள், ஆரவாரமான தொடர்கள் போன்றவற்றுக்கு இடமில்லை. அதே சமயம் கலைச்சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கருத்துகளுக்குத்தான் முதலிடம் தருதல் வேண்டும்; மொழிநடை கருத்தினை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டும் அமைந்திடல் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர், மூல மொழியிலுள்ள அறிவியல் கருத்துகள் பற்றிய செறிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் வல்லுநர் மூலமொழியில் எத்தகைய குறிக்கோள் அல்லது கருதுகோளினை வலியுறுத்த விரும்பினாரோ, அதனைப் பெறுமொழியிலும் கொண்டு வருமாறு மொழி பெயர்ப்பு அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் ஆகும்.

2.2.4 மொழிபெயர்ப்புகளின் நெறிமுறைகள்

சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குப் பின்வரும் நெறிமுறைகள் முக்கியமானவை ஆகும்.

  1. வழக்கிலுள்ள சொற்களைக் கொண்டு புதிய சொல்லாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

  2. பொருள் மயக்கம் தரும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

  3. கூட்டுச் சொற்கள், புணர்மொழி, அடுக்குத் தொடர்கள் ஆகியவற்றைத் தவிர்த்திடல் நல்லது.

  4. இடுகுறிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

  5. கருத்துப் புலப்பாடு சீராக இருக்க வேண்டும்.

  6. தொடர்கள் இணைப்பில் கருத்துச் செறிவு, தெளிவு தேவை.

  7. குறியீடுகள், சமன்பாடுகள், வாய்பாடுகள் போன்றவற்றை உலக அளவில் பயன்படுத்தும் முறையிலே தமிழிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

2.2.5 மொழிபெயர்ப்புகளின் வாசகர்கள்

அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்திடும் மொழி பெயர்ப்பாளர், பெறுமொழி வாசகர்கள் பற்றிய புரிதலுடன் தம் பணியைத் தொடங்க வேண்டும். வாசகர்களைப் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. கற்றுத்துறை போகிய அறிவியல் வல்லுநர்கள்

  2. ஆய்வு மாணவர்கள் / மாணவர்கள்

  3. பொது மக்கள்

பொதுமக்கள் அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மொழிபெயர்க்கப்படும் நூல்கள், எளிய நடையுடனும் விளக்கப் படங்களுடனும், படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும் இருத்தல் அவசியம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

நான்காவது தமிழ் என்று அழைக்கப்படுவது யாது?

2.

வரும் பத்தாண்டுகளில் அறிவியல் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?

3.

கி.பி.2000இல் வெளியான இதழ்களின் (Journals) எண்ணிக்கை யாது?

4.

தொடக்கக் காலத்தில் தமிழில் அறிவியல் நூல்கள் எவ்வாறு வெளியாயின?