மொழிபெயர்ப்புகள் வழியாக உருவாக்கப்பட்டு, இன்று
நிலைப்படுத்தப்பட்டு வருகின்ற சட்டத்தமிழ் இன்று தனித்துவம்
மிக்க துறையாக வளர்ந்து வருகின்றது. மக்களிடையே கல்வி
அறிவு அகலமாகவும் ஆழமாகவும் பரவிவரும் வேளையில்,
சட்டத்தமிழின் தேவைகள் முன்னெப்போதையும்விட இன்று
அதிகரித்துள்ளன.
பொதுமக்கள்
நோக்கு, நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் நோக்கு
ஆகிய இருபெரும் நிலைகளில் சட்டத் தமிழ் இன்று ஏற்றம்
பெற்றுள்ளது. ‘சட்டம்’ என்பது வறண்ட சொற்களின் தொகுப்பு
என்ற அணுகுமுறையிலிருந்து மாறி, மக்கள் வாழ்வின் ஆதாரம்
என்ற நிலையில், உயிரோட்டம் மிக்கதாக மொழிபெயர்க்கப்பட
வேண்டியது அவசியமாகும்.
சட்டத்தமிழ்,
பிற துறைத் தமிழைவிட முற்றிலும் மாறுபட்டது.
சட்டத்தில் மொழியைக் கையாளும்போது அச்சட்ட வாசகங்கள்
ஆணைகளாகவும் கருத்துரைகளாகவும் வாக்குமூலங்களாகவும்
சமுதாயத்தினை நிலைப்படுத்தும் வல்லமை மிக்கனவாகப்
பெரும்பாலும் இசைந்து கொடுக்கின்றன. சட்ட வழக்குகளில்
பெரும்பான்மையானவை முற்கோள்களுடனும் (Precedents),
மேற்கோள்களுடனும் (References) பயன்படுத்தப்படுகின்றன.
சட்டத்துறையில் IPC, CPC, SITA போன்ற ஆங்கில மொழிக்கூறுகளும் 144,302 போன்ற எண்களும் உண்டு. எனவே சட்டத்
தமிழுக்கு ஏற்ற மரபுகளை மொழிபெயர்ப்பில் உருவாக்கிட
வேண்டும். இத்தகைய முயற்சிக்குப் பிற
துறையினரின்
ஒத்துழைப்பு அவசியம் ஆகும். |