4.3 சமய வளர்ச்சியில் மொழிபெயர்ப்புகள்

தமிழகத்தினைப் பொறுத்தவரையில் பிறமொழியினரால் அறிமுகம் செய்யப்பட்ட சமயக் கருத்துகள், மொழிபெயர்ப்பின் வழியே ஆழமாகப் பரவின. பௌத்தமும் சமணமும், தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தமையினால், தமிழுக்குச் சமயத் தத்துவம் அறிமுகமானது. இறையியல் பற்றிய புதிய கருத்தாக்கம் மக்களிடையே பரவிட மொழிபெயர்ப்புகள் மூலம் சமயத் துறவியர் முயன்றனர். வைதிக சமயம், வடமொழியிலுள்ள வேதம், ஆகமம் முதலியவற்றைப் பிறர் அறியக்கூடாது என்று தடை விதித்திருந்தது. எனவே அவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கிலிருந்தது; தமிழரிடையே பெரிதும் வழக்கில் இல்லை.

இஸ்லாம், கிறிஸ்தவ சமயக் கருத்துகள் கடந்த இருநூறு ஆண்டுகளாகத் தமிழில் விரிவாக மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

4.3.1 பௌத்த சமய மொழிபெயர்ப்புகள்

மணிமேகலை

சீத்தலைச் சாத்தனார் எழுதிய தமிழ்க் காப்பியமான மணி மேகலையில் பாலி மொழியிலுள்ள புத்த சாதகக் கதைகள் தமிழாக்கப்பட்டு மணிமேகலை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அறுவகை சமயத் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் மணிமேகலையில் இடம் பெற்றுள்ளது. இது பிற மொழியிலுள்ள சமயக் கோட்பாட்டினைத் தழுவியெழுதப்பட்டதாகும்.

நாதகுத்தனார் எழுதிய குண்டலகேசி என்ற காப்பியம், பாலி மொழியில் எழுதப்பட்ட ‘தேரிகாதை’ என்ற நூலில் இடம்பெற்ற கதையினை மூலமாகக் கொண்டது ஆகும்.

பௌத்த சமயக் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் ‘சித்தாந்த கொள்கை’ என்ற நூலின் சில பகுதிகள் மட்டும் தற்சமயம் கிடைக்கின்றன.

புத்தருக்குத் தொண்டு செய்த ‘விம்பசாரன்’ என்ற மன்னரின் வரலாற்றினைக் கூறும் ‘விம்பசார கதை’ தழுவல் நூல் ஆகும்.

தற்காலத்தில புத்தரின் போதனைகள், தம்ம பதம், புத்த ஜாதகக் கதைகள், ஜென் புத்த சமயக் கோட்பாடுகள், ஜென் புத்தக் கதைகள் முதலியன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

4.3.2 சமண சமய மொழிபெயர்ப்புகள்

சமண சமயம் இன்றளவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருவதனால், சமண சமய நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஐம்பெருங்காப்பியங்களில் இடம் பெற்றுள்ள சீவக சிந்தாமணி, நீலகேசி ஆகிய இரு நூல்களும் சமண சமயப் பின்புலம் உடையனவாகும்.

கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி என்ற காப்பியம், சமஸ்கிருத மொழியிலுள்ள க்ஷத்திர சூடாமணி என்ற நூலின் தழுவலாகும்.

புஷ்பதந்தா வடமொழியில் எழுதிய ‘யசோதர காவியம்’ என்ற நூலின் தழுவலே தமிழிலுள்ள யசோதர காப்பியம் ஆகும்.

இவை தவிர சமண சமயத்தின் கருத்துகள் பிற மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டு இப்பொழுதும் நூலாக்கப்படுகின்றன.

4.3.3 வைதிக சமய மொழிபெயர்ப்புகள்

வைதிக சமய நூல்கள் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தான் அதிக அளவில் தமிழாக்கப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து அதிகாரத்தினைக் கைப்பற்றியவுடன், ஏற்கனவே இந்தியாவில் நிலவிய சனாதன வருணாசிரம முறை ஆட்டங்கண்டது. சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற சமயங்களை நாடத் தொடங்கினர். இந்நிலையை மாற்றி அமைத்திட வைதிக சமயத்தில் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்ததுடன், மறுமலர்ச்சிப் போக்கினுக்கு ஆதரவான சமய நூல்களும் தமிழில் வெளியிடப்பட்டன. வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், பாகவதம், புராணம் போன்றவை பெரிய அளவில் தமிழாக்கப்பட்டன.

அத்துவித ரச மஞ்சரி, ஆசார்ய ஹ்ருதய சாரசங்க்ரஹம், சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், ஆனந்த ரகஸ்யம், சுப்ர பாதம், ஹரி நாம சங்கீர்த்தனம், அபிராமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற வைதிக சமய நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகியுள்ளன.

இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் கடோபநிஷத்து முதலிய உபநிடதங்களில் சிலவும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

சைவ, வைணவ சமயத் தத்துவங்களும் தமிழில் விரிவான அளவில் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டில் தமிழ்த்திருமுறைகளின் அடிப்படையில் உருவானது. இதிற்காணும் ஆகமக் கருத்துகளை ஆழ்ந்து பயில்வதற்கென ஆகமங்களை மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர சைவம், வீரசைவம் பற்றிய சித்தாந்த விளக்கங்கள் தமிழாக்கப்பட்டுள்ளன.

· புராண மொழிபெயர்ப்புகள்

கி.பி.15-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் புராணங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டன. புராணம் என்பது உயர்வானது; புனிதமானது என்ற கருத்துச் சமய நம்பிக்கையுடையோரின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகும்.

கி.பி.16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிவீரராம பாண்டியர், கூர்ம புராணம், இலிங்க புராணம், கந்த புராணத்தின் பகுதியான காசிக் காண்டம் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். கந்த புராணத்தின் பிற பகுதிகளான பிரமோத காண்டத்தினை வரதுங்கராம பாண்டியரும் உபதேச காண்டத்தினைக் கோனேரியப்பரும் மொழிபெயர்த்துள்ளார்.

கி.பி.15-ஆம் நூற்றாண்டில் சூதசங்கிதை என்ற நூலினைப் பிரம கீதை என்ற பெயரில் தத்துவராயர் தமிழாக்கினார். அதே நூல் கி.பி.19- ஆம் நூற்றாண்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையினால் தமிழாக்கப் பட்டுள்ளது.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் மச்ச புராணம் வடமலையப்பராலும் பாகவத புராணம் செவ்வைச்சூடுவாராலும் தமிழ் வடிவம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அமைந்துள்ள ஊர்களைப் போற்றும் புராணங்கள்,தல புராணங்கள் ஆகும். அவை தமிழில் எழுதப்பட்டன. இத்தகைய புராணங்களை எழுதியவர்களில் பலர் தமிழும் வடமொழியும் நன்கு அறிந்தவர்கள். வடமொழியில் எழுதுவது சிறப்பு என்ற அன்றைய பொதுக் கருத்தினால் தமிழில் எழுதப்பட்ட புராணங்கள் பின்னர் வடமொழியில் தரப்பட்டன. அவ்வாறே வடமொழியில் எழுதப்பட்ட சில தல புராணங்கள் (இவை ‘மான்மியம்’ என்று பொதுவாகக் குறிக்கப்படும் இருநூற்றுக்கும் மேற்பட்ட புராணங்கள்) வடமொழியிலிருந்து தமிழாக்கப்பட்டதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது.

· பகவத்கீதை மொழிபெயர்ப்புகள்

மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள பகவத்கீதை, பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வைதிக சமயத்தின் புனித நூலாகக் கருதப்பட்ட ‘பகவத்கீதை’ இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லோருக்கும் பொதுவான செயலாக்கம் மிக்கதாக மாற்றமடைந்தது. இந்நூலுக்கு இன்று வரை சமய விற்பன்னர்கள் விளக்க உரை எழுதி வருகின்றனர்.

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆளவந்தார் பகவத்கீதையை, ‘கீதார்த்த சங்கிரகம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் வெளியான முதல் மொழிபெயர்ப்பு நூலாகும்.

கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை பகவத்கீதையை, பத்து மொழி பெயர்ப்பாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மொழிபெயர்த்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் பகவத்கீதை பாரதியார் உட்படப் பலரால் தமிழாக்கப்பட்டுள்ளது.

4.3.4 இஸ்லாமியச் சமய மொழிபெயர்ப்புகள்

சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘சோனகர்’ என்ற சொல் அரேபியரைக் குறிக்கிறது. தமிழகத்து மன்னர்களுடன் அரேபியர் குதிரை வாணிகம் நடத்தி வந்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டினுக்குப் பின்னர் முஸ்லிம்கள் அதிக அளவில் தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர், தமிழகத்தில் இஸ்லாம் பரவலாயிற்று. சூபி வழிபாட்டின் காரணமாக இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. அரபு மொழியின் மூலமாகவே இறைவனின் புகழ்பாடவும் வழிபடவும் வேண்டும் என்று கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமியரிடம் நம்பிக்கை இருந்து வந்தது. இதனால் இஸ்லாமியச் சமயக் கோட்பாடுகள் பெரிய அளவில் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் பீர் முகம்மது அப்பா, மஸ்தான் சாகிபு போன்ற சூபி வழி வந்தவர்கள் இஸ்லாமிய ஞான மார்க்கத்தினைப் பாடல் வடிவில் பாடியுள்ளனர்.

புலவர் நாயகத்தினால் பாடப்பெற்ற ‘புதூகுஷ்ஷாம் என்கின்ற புராணம்’ என்ற நூல், அரபு மொழியில் எழுதப்பட்ட ‘புதூகுஷ்ஷாம்’ என்ற நூலின் தழுவலாகும்.

கடந்த நானூறு ஆண்டுகளாக இஸ்லாமியப் புலவர்கள் தமிழில் பாடிய போதும், அண்மையில் தான் இஸ்லாமியத் திருமறை தமிழாக்கப்பட்டது. 1943-ஆம் ஆண்டில் அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவியால் தர்ஜீமதுல் குர்ஆன்-பி-அல்தபின் பயான், அரபு மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டது. எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாகவி, ‘ரூஹீல் பயான்’ என்ற அரபு நூலின் தமிழாக்கத்தினை ஏழு பகுதிகளாக வெளியிட்டது, இஸ்லாமியச் சமய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.

தற்சமயம் இஸ்லாம் சமய நெறி குறித்த பல்வேறு நூல்கள் உருது, அரபு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்டு வருகின்றன.

4.3.5 கிறிஸ்தவச் சமய இலக்கியம்

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து வாணிகம் நடத்தியபோது, கிறிஸ்தவ சமயத்தினைப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் இந்தியாவைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்துவதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளையும் அம்மொழி பேசும் மக்களையும் பற்றி ஆராய்ந்தனர். தமிழ் போன்ற மொழிகளில் அச்சு எந்திரத்தின் உதவியுடன் பல்வேறு நூல்களை வெளியிட்டனர். இந்தியாவில் முதன் முதலாக அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கிறிஸ்தவ வேதோபதேசம் (Flas Sanctorum) என்ற நூல் 1577-இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலானது கிறிஸ்தவச் சமயக் கருத்தினைப் போதிக்கின்ற மொழிபெயர்ப்பு நூலாகும். கி.பி.17-ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவச் சமயக் கருத்துகள் அடங்கிய பல்வேறு நூல்கள் கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களால் வெளியிடப்பட்டன. கிறிஸ்தவச் சமயத்தின் பிரச்சாரத்தின் ஊடே தமிழில் லைச்சுவடியில் இருந்த பகுதிகள் தாளில் அச்சடிக்கப்பட்ட பிரதிகளாக மாற்றமடைந்தது. இது பெரிய மாற்றம் ஆகும்.

கி.பி.1774-இல் விவிலிய நூலின் புதிய ஏற்பாடு, ஜே.பி.பாப்ரிஷியஸ் என்பவரால் தமிழாக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்தது.

கி.பி.19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இரேனியஸ் ஐயர், புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு, ஜெபப்புத்தகம் போன்றவற்றைத் தமிழாக்கினார்.

ஜான் பன்யன் எழுதிய மோட்சப் பயணம் (The Pilgrim's Progress) என்ற நூலைத் தழுவி ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை 1894-இல் வெளியிட்டுள்ளார்.

மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் (Paradise Lost) என்ற நூலினை 1880-இல் பரதீக உத்தியான நாசம் என்ற பெயரில் சாமுவேல் யோவான் ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.

மில்டனின் பாரடைஸ் லாஸ்ட் நூலானது அ.வேதக்கண் மொழிபெயர்ப்பில் 1863-ஆம் ஆண்டு ‘ஆதி நந்தவனப் பிரளயம்’ என்ற பெயரிலும், வேதநாயகம் தாமஸ் மொழிபெயர்ப்பில் 1887-ஆம் ஆண்டு ‘பூங்காவனப் பிரளயம்’ என்ற பெயரிலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சமய வேத நூலான விவிலியம் தொடர்ந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவச் சமயக் கோட்பாடுகளின் தன்மைகளும், கிறிஸ்தவச் சமயப் பரப்புதல் குறித்தும் பிற மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் தற்சமயம் தமிழாக்கப்பட்டு வருகின்றன.