இன்றைய உலகில் எல்லாமே சந்தைக்கான நுகர்வுப்
பொருட்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதனால்
வணிகத்தில் போட்டிகள் மலிந்துவிட்டன. பொருளின் தரம்
பற்றிய அக்கறையற்று, அந்தப் பொருள் வாழ்க்கை வாழ்ந்திட
ஆதாரமானது என்பது போன்ற புனைவுகள் தொடர்ந்து
கற்பிக்கப்படுகின்றன. நுகர்வுச் சங்கிலியில்
சிக்கிக்
கொண்டவர்கள் தொடர்ந்து கடன் அல்லது தவணை முறையில்
பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். இத்தகைய சந்தைப்
பண்பாட்டில் முக்கிய அம்சமாக விளம்பரங்கள் விளங்குகின்றன.
விளம்பரத்தின் மோசமான தன்மையைச் சமூகவியலாளர்
சுட்டிக்காட்டினாலும் விளம்பரம் இல்லாத உலகினைக் கற்பனை
கூடச் செய்ய இயலாது. தகவல் தொடர்பு ஊடகங்களின்
வழியாக விளம்பரம் மக்களைச் சென்று அடைகின்றது. தமிழில்
விளம்பரம் வெளிவந்தாலும், பெரும்பாலும் பன்னாட்டு
நிறுவனங்கள் மொழிபெயர்ப்புகள் மூலமாகவே, தமது
பொருட்களை விளம்பரப்படுத்துகின்றன. தற்காலத் தமிழ்
மொழியின் நடை அமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் விளம்பர
மொழிபெயர்ப்புகளின் பல்வேறு கூறுகளையும் எளிதில் அறிந்து
கொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி எழுதப்பட்டுள்ளது.
|