அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக இவ்வுலகிற்குக்
கிடைத்த அரிய பொழுதுபோக்கு ‘திரைப்படம்’ ஆகும்.
உலகமெங்கும் வாழும் பல்வேறு பிரிவினரும் தத்தம்
மொழிகளில் திரைப்படத்தினை ஆர்வமுடன் பார்க்கின்றனர்.
இந்தியாவில் பரந்துபட்ட மக்களுக்குக் கேளிக்கையினைத்
தருவதில் திரைப்படம் முதன்மையிடம் வகிக்கின்றது.
தமிழகத்தினைப் பொறுத்தவரையில் ஏனைய நிகழ்கலை
வடிவங்களான கூத்து, நாடகம், நாட்டுப்புற நடனங்கள்
போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டுத் திரைப்படம் செல்வாக்குச்
செலுத்துகிறது. ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு
கலைகளையும் உள்வாங்கிக் கொண்டு தயாரிக்கப்படும்
திரைப்படம், கண்ணையும் மனத்தையும் கவரும் வகையில்
வெளியிடப்படுகிறது. தமிழர்கள், தமிழில் தயாரிக்கப்படும்
திரைப்படங்களுடன் பிறமொழித் திரைப்படங்களையும் விரும்பிப்
பார்க்கின்றனர். பிறமொழித் திரைப்படங்களைக் கண்டு களித்திட
‘மொழி’ தடையாக உள்ளது. இந்நிலையில் பிறமொழித்
திரைப்படங்களைக் காண்பதற்குத் திரைப்பட மொழிபெயர்ப்புகள்
உதவுகின்றன. இத்தகைய திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றி
அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி
வடிவமைக்கப்பட்டுள்ளது.
|