1.1 சைவம் 
E

நமது இந்திய நாட்டில் விரிவாகப் பரவியுள்ள சில சமய நெறிகளில் சைவமும் ஒன்று ஆகும்.     வடக்கில் இமயமலையிலிருந்து தென்குமரி வரையிலும் மேற்கில் குஜராத்திலிருந்து கிழக்கே அஸ்ஸாம் மாநிலம் வரையிலும் மக்கள் சிவநெறியைப் பின்பற்றுகிறார்கள். மத்திய அமெரிக்காவில் அகழ்வாய்வில் (Excavation) கண்ட மாயன் (Mayan) நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் ஜாவா, பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் ஒரு காலத்தில் சிவ வழிபாடு உலகமெங்கும் பரவியிருந்ததைக் குறிப்பதாகக் கொள்ளலாம். சிந்து வெளியில் அகழ்வாய்வு செய்து அந்த நாகரிகத்தைப் பற்றி எழுதிய சர்.ஜான் மார்ஷல், ‘உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது’ என்று கூறுகிறார்.

• சிவ வழிபாடு

சிவ வழிபாடு என்பது சிவநெறி ஆகும். இதனைச் சைவநெறி என்றும் கூறலாம். சைவம் என்ற தொடர் சிவனோடு தொடர்புடையது என்னும் பொருளைத் தரும். ''சைவம் சிவனுடன் சம்பந்தமாவது'' (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார். எனவேதான் சிவநெறியை சைவநெறி என்றும் சைவ சமயம் என்றும் சுருக்கமாகச் சைவம் என்றும் குறிப்பிடுகிறோம். இந்தப் பாடத்தில் சிவநெறியோடு தொடர்புடைய செய்திகளைச் சைவம் என்ற பெயரில் காணப் போகிறோம்.