2.6 நம்பியாண்டார் நம்பி
E
பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கிய நம்பியாண்டார் நம்பிகள் பாடிய பத்துச் சிறு நூல்கள் இத்தொகுப்பின் நிறைவில் இடம்பெற்றுள்ளன.
 
இப்பத்து நூல்களுள் ஒன்று விநாயகர் மீதும், ஒன்று சிவன் மீதும், ஒன்று திருத்தொண்டத் தொகையின் விரிவாகவும், ஆறு நூல்கள் திருஞானசம்பந்தர் மீதும், பத்தாவது நூல் திருநாவுக்கரசர் மீதும் பாடப்பெற்றுள்ளன. கீழ்தரப் பெற்றுள்ள பட்டியல் அவர் பாடிய நூல்களின் பெயர்களை விளக்கும்.
 

நம்பியாண்டார்
நம்பி
 
  1. திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
  2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
  3. திருத்தொண்டர் திருவந்தாதி
  4. ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
  5. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
  6. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
  7. ஆளுடையபிள்ளையார் திருஉலாமாலை
  8. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
  9. ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
  10. திருநாவுக்கரசு நாயனார் திரு ஏகாதசமாலை
2.6.1 நம்பி - நூல்கள்
நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம் திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.

தமது நூல்களில் ஒன்றான திருச்சண்பை விருத்தத்துள்,

 

ஆறு தேறும் சடையான் அருள்மேவ
வீறு தேறும் தமிழால் வழிகண்டவன்
(திருச்சண்பை விருத்தம்)

எனவும் இவர் திருஞானசம்பந்தரைப் பெரிதும் போற்றி மகிழ்கிறவர். இவ்வாறான 40 பனுவல்களின் தொகுப்பாக இப்பதினொராம் திருமுறை அமைந்திருப்பதை இப்பாடம் விளக்கி நிறைகிறது. பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரியபுராணம் பற்றிய விரிவான செய்திகளைப் பின்வரும் பாடத்தில் (A0112) அறிந்து கொள்ளலாம்.