3.2 திருஞானசம்பந்தர்
E
தேவார மூவருள் திருஞானசம்பந்தரே முதலாமவர். இவர் சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் என்பவருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருமகனாக அவதரித்தவர். அந்தணர் குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் உதித்தவர். மூன்றாவது வயதில் உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பெற்று ஞானசம்பந்தரானவர். அக்காலை இவர் பாடிய பதிகமே ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்குவது. இவர் அழுகையால் வேதநெறி தழைத்தது. சைவத்துறைகள் விளக்கமுற்றன;

ஞானசம்பந்தர் வரலாறு
அடியார் மரபு உய்திபெற்றது. இவர் வாழ்வில் சிவன் அருளால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இறந்த வணிகனைச் ‘சடையாய்’ என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர் பெறச் செய்தார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றார். திருமறைக்காட்டில் வேதங்களால் பூசித்து அடைத்திருந்த கதவைத் திருநாவுக்கரசர் திறப்பித்தார். அம் மறைக்கதவை மீண்டும் மூடச் செய்தார் திருஞானசம்பந்தர்.

கோள்களால் சிவன் அடியார்களுக்குத் தீங்குவாராது என்று ‘வேயுறு தோளிபங்கன்’ என்ற பதிகம் பாடி நம்பிக்கை ஊட்டினார். மதுரையில் அனல் புனல் (வாதிடுவோர் தம் கொள்கைகளை ஒலையில் எழுதி நீரிலும் நெருப்பிலும் இடுவார்கள். அவற்றுள் அழியாமல் நிற்கும் ஒலைக்குரிய சமயம் உயர்ந்தது என ஏற்கப்படும்). வாதங்கள் செய்து சமணர்களை வெற்றிகொண்டார். ‘மட்டிட்ட புன்னையம் கானல்’ என்ற பதிகம் பாடி இறந்த பூம்பாவை என்ற பெண்ணின் எலும்பை மீண்டும் பெண் உருவம் கொள்ளச் செய்தார். ஆச்சாள்புரத்தில் சிவசோதியில் கலந்து மறைந்தார். இவர் மறைந்த நாள் ஒரு வைகாசி மூலம் என்பர். இவர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி.

3.2.1 முதல் திருமுறை

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களுள் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 384 பதிகங்கள். பாடல் தொகை 4158. இவற்றுள் முதல் திருமுறையுள் 136 பதிகங்களும் 1469 பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 96 தலங்கள் இத் திருமுறையில் தேவாரப் பாடல் பெற்றுச் சிறந்துள்ளன. 1. நட்டபாடை (22), 2 தக்கராகம் (24) 3.பழந்தக்கராகம்(8) 4. தக்கேசி(12) 5. குறிஞ்சி (24) 6. வியாழக்குறிஞ்சி (25) 7. மேகராகக் குறிஞ்சி (7) ஆகிய 7 பண்களும், ‘யாழ்மூரி’என்ற ஒரு பதிகமும் முதல் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. இத்திருமுறையுள்

விளையா ததோர் பரிசில் வரு
பசு,பாச வேதனை ஒண்
தளையாயின தவிர அருள் தலைவன்
(121)

(பசு - உயிர், பாசம் - ஆணவம், வேதனை - நல்வினை, தீவினை, தலைவன் -இறைவன்)

என்ற திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) பாடிய பதிகத்தில் சைவ சித்தாந்தக் குறிப்புகளை ஞானசம்பந்தர் பதிவு செய்துள்ளார்.

உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய மாயைத் தளைகள் நீங்குமாறு அருள்புரிபவனே இறைவன்.

திருவீழி மிழலைப் பதிகத்தில்,

வேறாய் உடன் ஆனான் இடம்
வீழிம் மிழலையே
(109)

எனப் பாடுகிறார். இறைவன் உயிரோடு ஒன்றியும் (கலந்தும்) உடனாகவும் (தான் மட்டுமே தனித்து) வேறாகவும் விளங்குவதாக, சைவ சித்தாந்தந்தம் கூறும்.

3.2.2 இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறையுள் 122 பதிகங்களும் 1331 தேவாரப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இவை 90 சிவத்தலங்களில் பாடப் பெற்றன. 1. இந்தளம் (34) 2. சீகா மரம்(14) 3. காந்தாரம் (24) 4.பியந்தைக் காந்தாரம் (14) 5. ஒட்டராகம் (16) 6. செவ்வழி (10) என ஆறு பண்கள் இரண்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. பல தலங்களின் பெயர்களையும் இணைத்துப் பாடிய திருக்ஷேத்திரக்கோவை, இராமாயணக் குறிப்புடைய 'கள்ளார்ந்த பூங்கொன்றை' என்று தொடங்கும் புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) பதிகம், ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகம்’, வேயுறு தோளிபங்கன், என்று தொடங்கும் 'கோளறு திருப்பதிகம்' முதலிய அரிய பெரிய பதிகங்கள் இரண்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர் பெறச் செய்து திருஞானசம்பந்தர் பாடிய திருமருகல் பதிகத்தின் முதற்பாடல்,

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
(1655)

(வெருவா = வெருவி , அஞ்சி)

என அகப் பொருள் குறிப்புடையதாய், செவிலிக் கூற்றாகப் பாடப்பட்டுள்ளது.

3.2.3 மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையுள் 126 பதிகங்களும், 1358 தேவாரப் பனுவல்களும் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் திருமுறையுள் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 84 ஆகும். இத்திருமுறையுள் ‘காந்தார பஞ்சமம் (23) 2. கொல்லி (18) 3. கொல்லிக் கௌவாணம்(1) 4. கௌசிகம்(15) 5. பஞ்சமம் (10) 6. சாதாரி (33) 7. பழம் பஞ்சுரம் (17) 8.புறநீர்மை (6) 9. அந்தாளிக் குறிஞ்சி(2) முதலிய ஒன்பது பண்களில் பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாவடுதுறையில் சிவபெருமான் ஆயிரம் பொன் வழங்கிய போது திருஞானசம்பந்தர் பாடிய ‘இடரினும் தளரினும்’ என்று தொடங்கும் பதிகமும், ‘நமசிவாய’என்ற ஐந்தெழுத்தின் பெருமை பெறும்

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே

(3031)

(கூற்று = எமன்)

என்ற அரிய பாடலை முதலாகக் கொண்ட பஞ்சாக்கரத் திருப்பதிகமும் இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன.

3.2.4 புதிய யாப்பு வகை

மதுரையில் மங்கையரக்கரசியாருக்கு நம்பிக்கை ஊட்டிப் பாடிய பதிகம் ‘மானினேர் விழி மாதராய்’ என்ற தொடக்கம் கொண்டது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று தொடக்கம் கொண்டது நமச்சிவாயத் திருப்பதிகம். ‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ என்ற தொடக்கம் கொண்டது திருப்பாசுரம். திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றுள் இடம் பெறாது திருவிடைவாய் என்ற தலத்துக் கல்வெட்டிலிருந்து கண்டெடுத்து இணைக்கப் பெற்றது ‘மறியார் கரத்து எந்தை’ என்ற பதிகம். இவை யாவும் மூன்றாம் திருமுறைக்கு அணி சேர்ப்பன. திரு இருக்குக்குறள், திருவிராகம், திருமுக்கால், நாலடி மேல் வைப்பு, கூடற்சதுக்கம், ஈரடி, திரு இயமகம், மாலைமாற்று முதலிய புதிய யாப்புகளில் அமைந்த பதிகங்களையும் இத்திருமுறையில் காணலாம்.