4.2 பெரியபுராணம்

பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாகப் பெரியபுராணம் இயற்றப்பட்டுள்ளது. பெரியபுராணத்தின் முதல் நூல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்பது முன்னரும் கூறப்பட்டது. எனவே, சிவனடியார் வரலாறுகளைத் தொகுத்துத் தந்த சுந்தமூர்த்தி சுவாமிகளையே காப்பியத் தலைவராகச் சேக்கிழார் கொண்டுள்ளார். காப்பியத்தின் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றை விரித்துரைத்து, இடையிடையே அவரால் போற்றி வணங்கப்பட்ட அடியவர்கள் வரலாறுகளையும் விளக்கி உரைத்து, மிக நுட்பமாக இப்பெருங்காப்பியத்தைச் சேக்கிழார் படைத்தளித்துள்ளார். காப்பியக் கதை கயிலாயத்தில் தொடங்கி மீண்டும் கயிலாயத்தில் கொண்டு போய் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இவ் அமைப்பு சேக்கிழாரின் காப்பியப் புனைவிற்குச் சான்று கூறி நிற்கிறது.

4.2.1 காப்பியப் பகுப்பு

பெரியபுராணம் காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப முதற்காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிவைச் சேக்கிழார் ‘சருக்கம்’என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் 8 சருக்கங்களும் இடம் பெற்றுள்ளன. திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள 11 பாடல்களின் தொடக்கமே சருக்கங்களுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாகத் திருத்தொண்டத் தொகையின் முதற்பாடல் ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கியுள்ளதால், அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை விரித்துரைக்கும் பகுதிக்குத் ‘தில்லை வாழ் அந்தணர் சருக்கம்’என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதல் சருக்கமாகக் கயிலாய மலைச் சிறப்புரைக்கும் ‘திருமலைச் சருக்கத்'தையும் இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் சென்றடைந்த செய்திகளைக் கூறும் ‘வெள்ளானைச் சருக்க’த்தையும் அமைத்துக் கொண்டார்.

 • நூல் அமைப்பு

 •  

  4.2.2 யாப்பமைதி

  சேக்கிழாரின் பெரியபுராணம் முழுவதும் அக்காலத்தில் பெருவழக்கில் இருந்த யாப்பு முறைகளையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் பட்டியல் யாப்பமைதியைக் எடுத்துரைக்கும்.

  வ.எ
  யாப்பு வகை
  பாடல்
  தொகை
  1.
  2.
  3.
  4.
  5.
  6.
  7.
   
  அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
  எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
  எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
  தரவு /கொச்சகக் கலிப்பா
  கலி நிலைத் துறை
  கலி விருத்தம்
  வஞ்சி விருத்தம்
  1805
  75
  280
  1207
  545
  368
  6
    பாடல்கள்
  4286

  4.2.3 திருமலைச் சருக்கம்

  பெரியபுராணத்தின் முதற் பகுதியாகிய திருமலைச் சருக்கம்

  1. பாயிரம்
  2. திருமலைச் சிறப்பு
  3. திருநாட்டுச் சிறப்பு
  4. திருநகரச் சிறப்பு
  5. திருக்கூட்டச் சிறப்பு
  6. தடுத்தாட் கொண்டபுராணம்


  கயிலாய மலை

  என்ற ஆறு உட்பகுதிகளையும், 344 பாடல்களையும் கொண்டு நடையிடுகிறது. காப்புப்பகுதியில் முதல் இரண்டு பாடல்கள் தில்லைக் கூத்தனையும், மூன்றாவது பாடல் விநாயகனையும் வணங்குவதாக அமைந்துள்ளது.

   

  இங்கிதன் நாமம் கூறின்
      இவ்வுலகத்து முன்னாள்
  தங்கிருள் இரண்டில் மாக்கள்
      சிந்தையுள் சார்ந்து நின்ற
  பொங்கிய இருளை ஏனைப்
      புறஇருள் போக்குகின்ற
  செங்கதிரவன் போல் நீக்கும்
      திருத்தொண்டர் புராணம் என்பாம்
  (பெரியபுராணம் - 10)

  (நாமம்-பெயர், கதிரவன்-சூரியன்) என்னும் பாடல் இந்நூல் பெயரைப் பதிவு செய்கிறது.

  4.2.4 பெரியபுராணம் - பெயர்க்காரணம்

  காப்புப் பகுதியில் விநாயகர் வாழ்த்தில் ‘எடுக்கும் மாக்கதை’ என்ற ஒரு தொடர் வருகிறது. மா-என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பெரிய என்பது பொருள். எனவே, மாக்கதை என்ற தொடருக்குப் பெருங்கதை என்று பொருள் கொண்டிருக்கலாம். முன்னரே தமிழில் பெருங்கதை என்ற ஒரு நூல் இருப்பதால், இதனை வேறுபடுத்தி அறிவதற்குப் பெரியபுராணம் என்று இந்நூலை முன்னோர் அழைத்திருக்கலாம்.     அவையடக்கத்தில் ‘அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார்’ என்ற ஒரு தொடர் வருகிறது. ‘பெருமையர்’ என்ற சொல் பெருமை மிக்கவர், பெரியார் என அழைக்கப்பட்டு, பெருமை மிக்க அடியார் வரலாறு என்ற பொருளில் பெரியபுராணம் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். செயற்கரிய செயல் செய்தவர்களைத் திருவள்ளுவர் ‘பெரியார்’ என்கிறார். நாயன்மார் வரலாற்றில் பலரும் செயற்கரிய செயல் செய்தவரே ஆவர். சேக்கிழாரும் பல இடங்களில் அடியார் செயல்களைச் செயற்கரிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபற்றியும் பெரியபுராணம் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.

  4.2.5 திருமலைச் சிறப்பு

  திருமலைச் சிறப்பில், கயிலாய மலையின் இயற்கை எழிலும், சிவ பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கமும் (அமர்ந்திருக்கும் நிலை) சிறப்பிக்கப்பட்டுள்ளன. உபமன்யு முனிவர் சீடர்களுக்குச் சுந்தரர் வரலாறு உரைக்கும் போக்கில் காப்பியமும் இங்கேயே தொடங்கி விடுகிறது. காப்பிய நாயகர் பெருமையை,

   
  தம்பிரானைத் தன் உள்ளம் தழீ இயவன்
  நம்பி யாரூரன் நாம் தொழும் தன்மையன்
  (29)

  என்று உபமன்யு முனிவர் கூற்றாகச் சேக்கிழார் பதிவு செய்கிறார். கயிலையில் சுந்தரா காதல் வயப்பட, சிவபெருமான் அவரை நிலவுலகிற்குச் செல்லுமாறு பணித்தார். இதனால் தென் தமிழ்நாடு அடியவர் பெருமை அறிந்து மகிழும் பேறு பெற்றது என்கிறார் சேக்கிழார். இதனை அவர்,

    மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
  தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்
  போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்
  காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
  (35)

  எனக் காப்பிய நுட்பமும், நயமும் தோன்றக் குறித்துக் காட்டுகிறார்.

  4.2.6 திருக்கூட்டச் சிறப்பு

  முதற் சருக்கத்தில் இடம் பெற்றுள்ள திருக்கூட்டச்சிறப்பில் சைவ அடியார்களின் அளவற்ற பெருமைகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.     சைவ அடியார்கள் புறத்தூய்மையும், அகத் தூய்மையும் மிக்கவர்கள் என்பதை,
   

    பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
  (141)

  என்றும், அன்னார் இன்ப துன்பங்களால் பாதிப்பு அடையாமல், பொன் பொருள்களில் நாட்டம் இல்லாதவர்கள் என்பதனை

   

   
  கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
  ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
  கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
  வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
  (143)

  (ஆக்கம் = செல்வம் ; ஒக்கவே = ஒன்றாகவே, விறலின் = பெருமையின்) என்றும், அடியவர் தம் அகம் மற்றும் புறத்தூய்மைகளை,

   

    ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
  பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலர்
  ஈர அன்பினர் யாதுங் குறைவிலர்
  வீரம் என்னால் விளம்பும் தகையதோ
  (144)

  என்றும் சேக்கிழார் இனங்காட்டிப் பெருமை சேர்க்கிறார்.

  (ஆரம் = கழுத்தில் அணியும் அணிகலன், கண்டிகை = உருத்திராக்கம், பாரம் = சுமை, இங்கே கடமை)