![]() |
இலக்கியங்கள் ஒரு காலகட்டத்தை விளக்குவதோடு அதைப்பற்றி விமர்சனமும் செய்கின்றன. அந்தந்தக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் அவ்வக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன. வாழ்விலிருந்து இலக்கியங்களும் இலக்கியங்களி லிருந்து வாழ்வும் மேன்மையடைகின்றன. கற்பனையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலக்கியங்கள் உண்மையை அறியச் சிறந்த ஆதாரங்களாக இருக்க முடியாது என்று சிலர் கருதினாலும் சூனியத்திலிருந்து எதுவும் பிறந்துவிட முடியாது. உண்மையின் அடிப்படையில், கற்பனையின் துணைகொண்டு சுவை பயக்க எழுதுவதே இலக்கியங்களாகின்றன. அதனால் அவையும் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் சாசனங்களாகின்றன என்பதை மறுக்க இயலாது. அதனால் ‘பழந்தமிழ் இலக்கியங்களில் சமணம்’ என்ற இப்பாடத்தில் சங்ககாலத்திற்கு முந்தியதான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் சமணம் இருந்ததற்கான சான்றுகளை அறிய முற்படுவோம். அத்துடன் அச்சமயம் தமிழுக்கு ஆற்றிய பணியையும் அறிந்து கொள்ளலாம். ‘பழந்தமிழ் இலக்கியங்கள்’
என்பதை ஒரு வசதிக்காகக்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான
படைப்புகள் என
வரையறை செய்து கொள்ளலாம். அவ்வகையில் தமிழக மக்களின்
வாழ்வியலை அறியக் கலங்கரை விளக்கமாக அமையும்
தொல்காப்பியம், சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
நூல்கள், பின்னர் தோன்றிய திருக்குறள் முதலான அறநூல்கள்,
அதன்பின் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகியவற்றையும் பழந்தமிழ் இலக்கியங்களாக எடுத்துக்கொள்ளலாம்.
|