செந்தமிழின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்கள்
ஐந்தையும் ஒருசேரத் தொகுத்து ஐம்பெருங்காப்பியங்கள் என்று
வழங்கும் வழக்காற்றினை நீங்கள் அறிவீர்கள். அதற்கு ஒப்ப,
பெருங்காப்பிய இலக்கணங்களுள் சில குறைந்து
அமைந்த
பண்டைய
நூல்களுள் (தொடர்நிலைச் செய்யுட்களுள்) சூளாமணி,
யசோதர
காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம்,
நீலகேசி
ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று கூறும் வழக்கு
உண்டாயிற்று.
 |
சூளாமணி |
ஐஞ்சிறு காப்பியத் தொகுதியுள் சூளாமணி பெருங்காப்பிய
இலக்கணங்கள் பொருந்தியிருப்பினும் என்ன காரணத்தினால்
சிறு
காப்பியப் பிரிவில் சேர்த்து வழங்கினார்கள் என்று தெரியவில்லை.
சிந்தாமணி,
இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையால்
நோக்குங்கால் தலைசிறந்த காவியம் என்றாலும் சூளாமணியின்
பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை எனலாம். சீர்மை
பொருந்திய சூளாமணியைப் பற்றிய சில செய்திகளையும் அது
சமண
சமயக் கருத்துகளைக்
கதையின் ஊடே சொல்லிச்செல்வதையும் காண
முற்படுவோம்.
 |
நூலாசிரியரும் காலமும் |
சூளாமணிக் காப்பியத்தை இயற்றியவர் தோலாமொழித்
தேவர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்தே
(24 தீர்த்தங்கரர்களுள்
ஒருவர்) பெரிதும் ஈடுபாடு உடையவர் என்பதும் கார்வெட்டியரசன்
விசயன் காலத்தில் இருந்தவரென்பதும் அவ்விசயன்
வேண்டுகோளின் படி இந்நூலை இயற்றினார்
என்பதும் சூளாமணிச்
செய்யுள்
ஒன்றின் மூலம் அறியலாம். பெரும்பான்மையான தமிழ்
நூல்களின்
காலத்தை உறுதியாகக் கூற இயலாததைப் போலவே
இதன்
காலத்தையும் திட்டமாகக்
கூற முடியவில்லை. சிலர் ஒன்பதாம்
நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சிலர் அல்ல
என்றும் கூறுவர்.
 |
சூளாமணியின் முதல்நூல் |
ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில்
கூறப்பட்ட பழைய கதையொன்றினைப் பொருளாகக் கொண்டு
எழுந்த
நூல் சூளாமணி என்றும், அருகக் கடவுளால் அருளிச்
செய்யப்பட்ட
மகாபுராணமே இதற்கு முதல் நூல் என்றும் கூறுவர்.
மேலும்
மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள ஸ்ரீபுராணம் தான்
முதல்
நூல் என்றும் கூறுவர்.
அப்புராணத்தின்கண் பதினோராம்
தீர்த்தங்கரராகிய சிரேயாம்ச சுவாமி புராணத்தின்கண் இக்கதை
கூறப்பட்டுள்ளது. இக்கதையே தோலாமொழித் தேவர்க்குக்
காப்பியப் பொருளாயிற்று.
 |
அருகக் கடவுளின் சிறப்பு |
இறைவனுடைய
சிறப்புகள் காப்பியப் பாத்திரங்கள் மூலம்
போற்றப் படுகின்றன. மன்னன் சுவலனசடி
கீழ்வருமாறு இறைவனைப் பாராட்டுகிறான்: எந்த அணிகலன்களையும் அணியாமலே
இயற்கை யொளி விளங்கப் பெறுபவன்.
வரம்பிலா
ஞானத்தைப் பெற்றவன். கடையிலா
அறிவுடையவன். பகைமைக் குணம் தோன்றுகின்ற
கூரிய படைக்கலன்கள் எதுவும் அமையப்பெறாத
வடிவத்தை
உடையவன். தருமச் சக்கரத்தை
உடையவன். ஸ்ரீவத்சம் என்னும்
மறுவை (மச்சம்)
அணிந்தவன்.
(இரதநூபுரச்
சருக்கம் : 182,183)
 |
சாரணர் போற்றுதல் |
சுவலனசடி மன்னன் இறைவனை வணங்கித் திரும்பும்
சமயத்தில் சாரணர் இருவர் விண்ணில் நின்றும் இறங்கித்
திருக்கோயிலை
வணங்கினர். “விண்ணவர்கள் போற்றுமாறு மணம்
பொருந்திய தாமரைமலர் மேல் சென்றருளியவன். யாம்
போற்றினாலும் மகிழ்வதில்லை. விருப்பு வெறுப்பு அற்றவன்.
எல்லோர்க்கும் ஒரே தன்மையாய் அருள் புரிபவன். மணம்
நிறைந்த தாமரைமேல் வான் வணங்கச் சென்றவன்”
(இரதநூபுரச்
சருக்கம் : 187-189) என்று இறைவனைப் போற்றுகின்றனர்.
 |
சுயம்பிரபை வணங்கிப் போற்றுதல் |
சுவலனசடியின் மகள் சுயம்பிரபை
இறைவனின்
குணங்களாகப் போற்றித் துதிக்கிறாள்: “ஆதியங்கடவுள், அறிதற்கரிய
மறைகளைத் தந்தருளியவன். மெய்யறிவுக்கு உரியவன். தாமரை
மலரின் மேல் சென்றருளியவன்,
காமனைக் கடிந்தவன், காலனைக்
காய்ந்தவன், திருவுறுமார்பினன், எல்லா உயிர்களுக்கும்
தண்ணளியைச் செய்தவன், அடியார்களின் துன்பங்களைத்
தீர்த்தருளினவன்” (இரதநூபுரச் சருக்கம்: 214-216) என்று
பாராட்டுகிறாள். துறவுச்சருக்கத்தில் பயாபதி மன்னன் அருகதேவனை மிகப்
பரவிப் போற்றுகிறான்
(1905-1912)
 |
சாரணர் தம் அறிவுரை |
மன்னன் சுவலனசடி, சாரணர் இருவரை வணங்குகிறான்.
அனைவர்க்கும் அறத்தைக் கூறுவதேதம் பணியாகக்
கொண்டிருக்கும்
சாரணர்
மன்னனுக்கும் அறவுரை கூறலாயினர்.
 |
பிறவிகளின் தொடர்ச்சி |
மெய்யுணர்வில்லாமை என்கிற வித்தினினின்று
உண்டாகி,
விடாது தொடர்ந்து வருவது பிறவிகள். அந்தப் பிறப்புகளின்
வரிசை
இவ்வளவு என்று எண்ண இயலாது. பழவினை செலுத்துதலால்
மீண்டும் பிறந்து, அதிலும் சில செயல்களைச் செய்து,
மீண்டும்
மீண்டும் பிறந்து துன்பப்படும் இயல்பின உயிர்கள். சார்பு
கிடைக்கும்
வரையில் மாறி மாறிப் பல பிறப்புகளில் பிறந்து
வருந்தும்.
(இரதநூபுரச் சருக்கம்
: 198-200)
 |
பிறவிப் பிணியைப் போக்கும் வழி |
தொடர்ந்து வரும் பிறவிப்பிணியை ஒழிக்கும் வழியாது
எனில் அருகக்கடவுளின் திருவடிகளை அடைதலே. அதற்குத்
துணையாக
இருப்பது மும்மணியே என விளக்குகிறார்.
மும்மணியைப்
(இரத்தினத் திரயம்) பற்றி ஏற்கனவே விளக்கம்
தந்திருப்பதை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
 |
துறவியை நாடல் |
பயாபதி மன்னன் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைத்
துதித்துப் பாடுகிறான். (துறவுச் சருக்கம் : 1905-1912)
பின்னர் ஒரு
துறவியைக் கண்டு வணங்குகிறான். இல்வாழ்க்கையின் இன்பம்
எத்தகையது
என்பதை அத்துறவி கீழ்வருமாறு விளக்குகிறார்.
ஆனைதுரப்ப
அரவு உறை ஆழ்குழி |
 |
நானவிர்
பற்றுபு நாலு மொருவனோர் |
தேனின் அழிதுளி
நக்குந் திறத்தது |
மானுயர் இன்பம்
மதித்தனை கொள்நீ |
(துறவுச்
சருக்கம் : 1905-1912)
|
|
(துரப்ப = துரத்த, அரவு = பாம்பு, நால்,நாலு = தொங்கு,
நவிர் =
வேர், பற்றுபு = பற்றிக் கொண்டு, மானுயர் =
மானிடர்) ஒருவன் தன்னை ஒரு காட்டுயானை துரத்திவர ஓடி,
நச்சுப்பாம்பு வதிகின்ற ஆழமான கிணற்றில் வீழ்ந்து, அதனுள்
தொங்குகின்ற ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
அப்போது, மேலேயிருந்த தேன் கூட்டிலிருந்து நழுவிச்
சொட்டிய
தேன்துளி ஒன்று தன்வாயில் விழ அதனைச் சுவைத்து மகிழ்ந்தான்.
அதை ஒப்பதாம்
இவ்வாழ்க்கை. பல்வேறு வகைப்பட்ட துன்பம்
நிறைந்த மானிட வாழ்க்கையினூடே அவர்கள் நுகரும் இன்பம்
அத்தகையதுதான்.
 |
கொல்லா விரதத்தின் சிறப்பு |
கொல்லா விரதத்தின் சிறப்பினை,
பயாபதிக்குத் துறவிகள்
விளக்குகின்றனர். இல்லறத்தார் எல்லா விரதங்களையும்
செய்யவில்லை என்றாலும் கொல்லாவிரதத்தைக் கைப்பற்றினால்
போதும்.
அது எல்லா வினைகளையும்
வெல்லும் ஆற்றலுடையது
என்கின்றனர். அப்பாடலைப் பார்க்கலாமா?
எல்லா விரதம் இயல்பொக்கும்
ஆயினும் |
 |
அல்லா விரத மனையாய்
அவர்கட்குக் |
கொல்லா விரதங் குடைமன்ன
ஆமெனின் |
வெல்லா வகையில்லை
வீங்கெழில் தோளாய் (2002) |
விரதங்கள் அனைத்தையும் ஒழுங்காய்க் கடைப்பிடிக்கும்
ஆற்றல் இல்லாத இல்லறத்தார்க்கும்
கொல்லாமை என்னும் விரதம்
ஒன்றையேனும் குறிக்கொண்டு மேற்கொள்ள இயலுமாயின்
அவ்வில்லறத்தார் வென்று ஒழிக்க இயலாத தீவினை வேறு எதுவும்
இல்லை என்பது பாடலின்
கருத்து.
இந்நூல் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன்
வரலாற்றைக் கூறுவது. இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு எனலாம்.
அறங்களில் தலையாயதும் நல்லாறு எனப்படுவதுமாகிய
கொல்லாமை
என்னும் அறத்தை எடுத்துரைக்க இது எழுந்தது
எனலாம்.
உயிர்க்கொலை கூடாது என்பதையே
மையக்கருத்தாகக்
கொண்டு
தோன்றிய நூல். நல்வினை, தீவினை ஆகியவற்றின்
பயனை
விளக்கமாகக் கூறிச் செல்கிறது.
 |
உணர்வைத் தூண்டும் நுண்கலைகள் |
பொதுவாக
நுண்கலைகள் உணர்ச்சியைத் தூண்டவல்லன
என்ற கருத்தையும் இசைக்கலை எப்படி உணர்ச்சியைத்
தூண்டியது
என்பதையும் எடுத்துக் காட்டுகிறது இக்காப்பியம்.
யசோதரனின் மனைவி அமிர்தபதி, யானைப் பாகனின்
இசையில் மயங்கி அவனை விரும்பி, தன்னிலை தவறுகிறாள்
என்பதை விளக்கி, காமத்தின் தன்மையை எடுத்துரைக்கிறார்.
 |
காமத்தின் தன்மை |
“இல்பிறப்பை
அழித்து, புகழையும் மானத்தையும் போக்கி,
மனத்திட்பத்தை உடைத்து, ஆண்மையை
அழித்து, சிந்தையைச்
சிதைக்கும் தன்மையுடையது காமம்” (126) என்கிறார்
ஆசிரியர்.
 |
பிறப்பும் இறப்பும் |
வினைவழி
நான்கு கதிகளிலும் மாறிமாறிப் பெற்ற
பிறவிகள்
எண்ணற்றவை. இறந்தவை மீண்டும்
பிறந்தன. பிறந்தன
வெல்லாம்
மீண்டும் இறந்தன. பிறப்பதற்காகவே அவை இறந்துபட்டன.
இதுவே
இயல்பாகியது.
பிறவியை நீக்க வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியன
இவையென விளக்குகிறார் கீழ்வரும்
பாடலில்,
ஆக்குவ
தேதெனில் அறத்தை ஆக்குக |
 |
போக்குவ
தேதெனில் வெகுளி போக்கவே |
நோக்குவ
தேதெனில் ஞானம் நோக்குக |
காக்குவ
தேதெனில் விரதம் காக்கவே (322) |
ஐஞ்சிறு
காப்பியங்களில் ஒன்று உதயணகுமார காவியம்.
உதயணன் வாசவதத்தைக் கதையைக் கூறுவது.
அரிதின் முயன்று
தேடிய சுவடியை வைத்துப் பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர் இந்நூல்
இலக்கியச் சுவையில் குன்றியிருப்பதோடு பிழைகளும்
மலிந்திருக்கின்றன என்று குறிப்பிடுவார்.
ஆனால் பெருங்கதையில்
முதல், கடைப் பகுதிகளில் கிடைக்காமற்போன செய்திகளால்
ஏற்பட்ட
வெற்றிடத்தை இந்தக் காவியம் நிரப்புகிறது.
காப்பியச் சுவைமிகுந்த பெருங்கதையின் கதையையே
இந்நூலும் கூறுவதால் பரவலாக இது மக்களிடையே
இடம்பெறாமல்
போயிற்று என்று கருத இடமுண்டு.
ஐஞ்சிறு காப்பியங்களிலே ஒன்று. முழுமையாகக்
கிடைக்கவில்லை. ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை
வைத்துக்
கொண்டு
கதையின் தன்மையை ஓரளவு ஊகிக்கலாம். பெருங்கதையின்
இழந்த
பகுதிகளுக்கு உதயண சரிதம் உதவியது போல இதற்கும் சில
நூல்களின் மேற்கோள்களும்
குறிப்புகளும் உதவியுள்ளன.
 |
ஆசிரியரும் சமயமும் |
நாககுமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஆயினும் கதைப் போக்கிலிருந்து,
இது ஒரு சமண முனிவரால்
இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
 |
காப்பிய அமைப்பு |
ஐந்து
சருக்கங்களை உடையது. 170 பாடல்களையும்
கொண்டுள்ளது. சருக்கங்கள் ஒன்று, இரண்டு
என எண்ணுப்பெயரால்
குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குத் தனிப்பெயர் இல்லை.
விருத்தப்பாவினால் ஆனது. இதற்கு நாகபஞ்சமி கதை என்ற ஒரு
பெயரும் உண்டு.
 |
மூலநூலும் பெயரும் |
நாககுமார காவியத்தின் மூலநூல் வடமொழி என்று
கூறுகிறார்கள். வடமொழி காவியத்தின் ஒவ்வொரு சருக்கத்
தலைப்பிலும் அதன் ஆசிரியர் மல்லிசேனர் இப்பெயரைக்
குறிப்பிடுகிறார்.
 |
கதைபிறக்கக் காரணம் |
மகதநாட்டின் மன்னன் சிரேணிகனும் அவன் மனைவி
சாலினியும் தம் சுற்றத்தாரோடு, விபுலமலையிலுள்ள சமவ
சரணத்திற்கு வந்து அங்கு வீற்றிருக்கும் முனிவரை வணங்கித் தரும
உரைகளைக்
கேட்டனர். தரும தத்துவங்களைக் கேட்டபின்,
அம்முனிவரிடம் நாகபஞ்சமியின் கதையை
உரைக்க வேண்டுகிறான்
மன்னன். (சமவசரணம் என்பது பூமிக்கு மேல் வானத்தில் இந்திரன்
முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்ட அருகன் கோயில்).
முனிவரும் கதையைக் கூறுகிறார். அதுவே
நாககுமார காவியம்.
கிடைக்கும் குறிப்பிலிருந்து இக்கதையை இவ்வாறு
கொள்ளலாம். மகத நாட்டிலுள்ள கனகபுரம் என்னும் நகரை,
சயந்திரன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு விசால
நேத்திரை, பிரிதிதேவி என இரு மனைவியர் இருந்தனர். மூத்த
மனைவியின் மகன் சிரீதரன். பிரதா பந்தன் இளையவள் மகன்.
இவனுக்குப் பின்னர் நாககுமாரன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இவர்களைத்
தவிர வேறு பல மனைவியரும் அரசனுக்கு உண்டு.
பிரதாபந்தன் பல சாதனைகளை நிகழ்த்திப் பல
திருமணங்களைச் செய்து கொள்கிறான். இறுதியில் தன் மகன்
தேவகுமாரனுக்கு முடிசூட்டிவிட்டு அலமதி என்னும் கேவலஞானியை
வணங்கித் துறவு பூண்டு, இயற்கை உருவாகிய நிர்வாண உருக்
கொண்டு நோன்பு நோற்கலானான். அவன்
மனைவி இலக்கணையும்
பதுமஸ்ரீ என்னும் ஆர்யாங்கனையை வணங்கித் துறவு
மேற்கொள்கிறான்.
நாககுமாரன்
தன்னைப்பற்றி நின்ற கொடிய காதி வினைகளை
வென்று சித்தபதம் சேர்ந்தான்.
ஐஞ்சிறுகாப்பியங்களில்
ஒன்றாகிய நீலகேசி ஒரு சிறந்த
வாதநூல் எனலாம். கருத்துகளை எடுத்துரைக்கும் வகைகளையும்
அவற்றை மறுத்துரைக்கும் பாங்கினையும் திறம்பட விளக்கும்
சிறப்பினது நீலகேசி.
 |
நீலகேசி தோன்றக் காரணம் |
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய குண்டலகேசி
பௌத்த சமய நூல். பௌத்த சமயக் கருத்துகளை மக்களிடையே
பரவச் செய்யத் தோன்றியது. அக்காலத்தே சமணமும் பௌத்தமும்
தம்முள் மாறுபட்டிருந்தன. சமயக் காழ்ப்பு முகிழ்த்த காலகட்டம்
என்றுகூடச் சொல்லலாம். தம் சமயமே உயர்ந்தது
என வாதம்
செய்து
நிறுவிய சூழல். அத்தகைய சூழலில் ஆருகத மதமாகிய
சமண
சமயத்தைப் பழித்தும் குறைத்தும் குண்டலகேசி கூறியது.
அதற்கு
விடை தருவார் போலவும் விளக்கம்
தருவார் போலவும்
பௌத்த
சமயக் கொள்கைகளைக் குற்றஞ்சாட்டியும் சமண சமயக்
கோட்பாடுகளை விளக்கியும் நீலகேசியை ஆசிரியர்
எழுதினார்.
 |
நூலாசிரியரும் உரையாசிரியரும் |
சிறந்த
வாதநூலாகக் கருதப்படுகின்ற நீலகேசியை எழுதிய
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
அவர் வாழ்ந்த காலமும் அறிய
இயலவில்லை. ஆனால் அந்நூலுக்கு மிக அரிய உரை எழுதிய
உரையாசிரியர் சமயதிவாகரவாமன முனிவர் என்பதை அறிய
முடிகிறது.
 |
நூலின் சிறப்பு |
தத்துவ நூல் அறிவுக்கு விருந்தாக அமைந்தாலும்
இலக்கியங்கள் போன்று சுவையுணர்ச்சி அளித்தல் அரிதாகும்.
ஆனால்
அவற்றையும் பலவகைச் சுவைகள் தோன்றும்படி எழுதுவது
நமது
தமிழ்
மொழியின் பின்னுமொரு சிறப்பு. மணிமேகலை
அதற்கொரு
நல்ல எடுத்துக்காட்டு. குண்டலகேசியும் அவ்வகையைச்
சார்ந்தது
தான். ஆயினும் முழுமையாகக் கிடைக்காதது தமிழுக்கும்
பௌத்தத்திற்கும்
நேர்ந்த இழப்பு எனலாம்.
அந்தப்பாதையில் நீலகேசியும் அமைந்துள்ளது. நீலகேசியையும்
அவளை எதிர்த்தாரையும் எதிரெதிர் நிறுத்திச்
சொற்போர்
புரியும்படி அமைத்திருப்பது சுவை குன்றாமல் இருக்க
வழிவகுக்கிறது.
நீலகேசி மூலம் அக்காலச் சமயநிலைகளை அறியவாய்ப்பு நேர்கிறது.
உரையாசிரியரின் நுணுக்கமான உரைகள்
சிந்தனைக்கு நல்ல
விருந்தாகின்றன.
 |
தருமவுரைச் சருக்கத்தின் சிறப்பு |
முனிச்சந்திர
பட்டாரகன் என்ற பாத்திரத்தின் மூலம்
நீலகேசிக்கு அறவுரையை விளக்கமாகக் கூறுவதுபோல் தருமவுரைச்
சருக்கம் அமைக்கப் பட்டுள்ளது. மக்கள், தேவர், நரகர்,
விலங்கு
என்னும் நால்வகைப் பிறப்புகளிலும் ஏற்படுகின்ற
துன்பங்களை
எடுத்துக்காட்டி அவை தீர்வதற்கான வழியையும்
ஆசிரியர்
கூறுகிறார். அதாவது உயிர்களின் அறியாமை காரணமாக உறுகின்ற
பிணிகளை முற்றுமாகப் போக்க மருந்து ஒன்றுண்டு என்கிறார். அது
ஒரு கூட்டுமருந்து எனக்கூறி, சமண
சமயக் கோட்பாடாகிய
நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும்
மும்மணியின்
இயல்புகளை நீலகேசிக்கு விளக்கமாக விரித்துரைக்கிறார் முனிவர்.
சமணசமயக் கோட்பாடுகளும் தத்துவமும் விளக்கம்
பெறுகின்ற
சருக்கம் இது.
முனிவரின்
அறவுரையால் மெய்யுணர்வு பெற்ற நீலகேசி தன்
நன்றிக் கடனை முனிவர்க்குச் செலுத்தும் வகையாக அக்காலத்தில்
மேலோங்கியிருந்த பல்வகை மதத்தாரோடும் வாதம் புரிந்து வெற்றி
கொண்டு சமண சமயத்தைப் பரப்ப வகை செய்கிறாள்.
பௌத்த
சமயக் கருத்துகளுக்கு மாறாக நீலகேசி
எழுந்ததால், குண்டலகேசி, அருக்கச் சந்திரன், மொக்கலன், புத்தர்
ஆகியவர்களோடு நீலகேசி வாதம் புரிந்து வென்றதாக ஆசிரியர்
அமைத்துக் கொள்கிறார். பின்னர் ஆசீவகவாதி,
சாங்கியவாதி,
வேதவாதி, வைசேஷவாதி, பூதவாதி ஆகியவர்களோடும்
வாதம்
செய்து வென்றதாகக் கூறிச் செல்கிறார்.
வாதநூல்களில்
சிறந்து விளங்குகிறது நீலகேசி. குண்டலகேசி வாதநூலுக்கு வித்திட்டது என்றால்
நீலகேசி பின்வந்த வாத நூல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது எனலாம்.
|