2.3. உரைகள்

திவ்வியப்பிரபந்தத்திற்கு உரைகள் இராமானுசர் காலத்தில்தான் எழுத்து வடிவில் தோன்றத் தொடங்கின. குருசீடர் முறைப்படி மிகச் சிலரின் நடுவே வழங்கி வந்த உரைச்செய்தி, உரைகள் எழுத்து வடிவம் பெறத் தொடங்கிய போது பெரும்பான்மையோரைச் சென்று சேரத் தொடங்கியது.

  • உரையாசிரியர்கள்

நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுசர், எம்பார், கூரத்தாழ்வார், திருவரங்கத்து அமுதனார், அனந்தாழ்வான், முதலியாண்டான், அம்மங்கியம்மாள், பிள்ளை திருநறையூரரையர் ஆகியோர் உரைகள் வளம்பெற்று, வடிவம்பெற வித்திட்டவர்கள்.

ஆக 10-ஆம் நூற்றாண்டு முதல் பக்தி இலக்கியத்தின் தொகுப்பையும், உரையையும் உருவாக்குவது இன்றியமையாதது என்பதை உணரத் தலைப்பட்டார்கள் வைணவத் தொண்டர்கள் என்பது தெளிவாகின்றது.

  • மணிப்பிரவாள நடை

தத்துவக் களஞ்சியமாகவும் வேதத்தின் சாரமாகவும் விளங்கும் திருவாய்மொழிக்கு வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் பல உரைகள் தோன்றின. திருவாய் மொழிக்கு எழுதப்பட்ட உரைகள் ஈடு என்று குறிப்பிடப்பட்டன. அவை எழுத்து எண்ணிக்கையில் (படி) குறிப்பிடப்பட்டன.

படி என்பது மெய் எழுத்தை விலக்கி எண்ணும் போது உயிரும் மெய்யுமாக 32 எழுத்துகளை உடைய ஒரு தொடர் ஆகும். நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு ஈடு உரை எழுதியவர்களும் உரைப்பெயரும் பின் வருமாறு:

திருக்குருகைப் பிரான் பிள்ளை
ஆறாயிரப்படி
நஞ்சீயர்
ஒன்பதினாயிரப்படி
அழகிய மணவாள சீயர்
பன்னிரண்டாயிரப்படி
பெரியவாச்சான் பிள்ளை
இருபத்தி நாலாயிரப்படி
நம்பிள்ளை காலட்சேபமாகச்
சொல்ல வடக்குத் திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது

முப்பத்தாறாயிரப்படி


• தமிழின் வளம் மேலும் சிறந்தது

மேற்காட்டிய ஈடு உரைகள் வைணவ உலகத்திற்கும் தமிழ் உலகத்திற்கும் வளம் சேர்த்தன. பக்தி இலக்கியத்தைப் பரவச் செய்யப் பெருந்தொண்டாற்றின.

ஈடு உரை கண்ட நம்பிள்ளை பெரிய திருமொழி, திருப்பள்ளி எழுச்சி, திருவிருத்தம் ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.

திருவாய் மொழிக்கு முதல் உரையாசிரியர் ஆளவந்தார் என்பதை ஈடு உரை வழி அறியலாம். திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் நாதமுனிகள். அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம். நாதமுனிகள் முதல் எம்பெருமானார் காலம்வரை உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி, நாதமுனிகள் பேரன் ஆளவந்தார், பெரிய நம்பிகள் (திருமாலை ஆண்டான்) இராமானுசர் போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர். எம்பெருமானார் காலத்தில் வியாக்கியானம் என்னும் பெயரில் உரைகள் வரி வடிவம் பெறத் தொடங்கின.