2.4 உரைகள் தமிழாக்கம்

திருவாய்மொழிக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிய வியாக்கியானத்தை வடமொழி அறியாதவர்களும் படித்துப் புரிந்து கொள்ளும்படி, திருவாய்மொழி பகவத் விஷயம் தமிழாக்கம் 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் திரு.பு.ரா.புருஷோத்தம நாயுடு. இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசாரிய ஹ்ருதயத்துக்கு மணவாள மாமுனிகள் அருளிய மணிப்பிரவாள உரையையும் தமிழாக்கம் செய்துள்ளார். (ஆசார்ய ஹ்ருதயம் - மணவாள மாமுனிகள் வியாக்கியானம் தமிழாக்கம் 2 தொகுதிகள் அந்நூலாகும்). மற்றும் பிள்ளைலோகாசாரியாரின் ஸ்ரீவசன பூஷணத்திற்குத் தமிழில் ‘ஸ்ரீ வசன பூஷணம் - மணவாள மாமுனிகள் வியாக்கியானம் தமிழாக்கம் - ஒரு தொகுதி’ என்னும் பெயரில் உரை வெளியிட்டுள்ளார்.

வடமொழியிலும் தமிழிலும் வல்லவர்களும் தமிழை மட்டும் அறிந்தவர்களும், வைணவ இலக்கியத்தின் செழுமையையும் பக்தி இலக்கியத்தின் பரப்பையும் விரிவுபடுத்தத் தமிழில் உரைகள் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தனர். எனவே மணிப்பிரவாள நடையில் அமைந்த வைணவ நூல்களுக்கு எளிய தமிழில் உரைப்பணி செய்யத் தொடங்கினர். அவர்களுள் தலைசிறந்தவர் புருஷோத்தம நாயுடு என்பதை அவரின் தமிழாக்கப்பணி புலப்படுத்தும். அப்பெருந்தகை சமயத் தொண்டோடு தமிழ்த்தொண்டும் செய்து தமிழ் உரைவளத்தைச் செழுமைப்படுத்தினார். எனவே அவரின் மொழிபெயர்ப்புப் பணியும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.

பிள்ளை லோகாச்சாரிய சீயர் அருளிய நூல்கள்:

1.

இராமானுச திவ்விய சூரி சரிதை

2.

உபதேசத் திருநாமம்

3.

யதீந்திரப் பிரணவப் பிரபாவம்

4.

அந்தாதிப் பிரபந்த உரை

5.

இராமானுச நூற்றந்தாதி உரை

6.

திருமந்திரார்த்த உரை

7.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்த தனியன் உரை

8.

திருவாய் மொழி நூற்றந்தாதி உரை

இவற்றை எழுதி அவர் வைணவ உரைகளுக்கு வளம் சேர்த்துள்ளார்.