4.1. பெரியாழ்வார்

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்; இவர் அருளிய திவ்வியப்பிரபந்தம் பெரியாழ்வார் திருமொழி (473 பாடல்கள்) ஆகும்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
     பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
     செவ்வடி செவ்விதிருக் காப்பு

(812)

எனத் திருப்பல்லாண்டு தொடங்குகின்றது. இக்காப்புப் பாசுரம் திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் காப்பாக அமைந்து, ஆழ்வார்களின் நோக்கம் திருமாலின் திருவடி அடைவது என்பதைக் காட்டுகிறது.

அந்தியம் போதில் அரியுரு வாகி
     அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
     தாண்டென்று பாடுதுமே

(6:3-4)

(அந்தியம் போது = மாலை நேரம், அரியுரு = நரசிங்கம். அரி = பகைவன், பந்தனை = வாட்டம்)

என்பர். இறைவனிடம் அடியவர்களும் மக்களும் தங்கள் வேண்டுதலைச் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ பெரியாழ்வார் நரசிம்ம அவதாரம் செய்த வாட்டம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என அழைப்பது தாய்மை கலந்த பக்தியின் எல்லை எனலாம்.

4.1.1 தாயாகிய பெரியாழ்வார்

பல்லாண்டு பாடி வாழ்த்தியவர் தாயாகி கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு செயல்பாடுகளில் மனம் தோய்ந்து பக்திச்சுவை ததும்பப் பாடியிருக்கிறார்.

கண்ணனைக் குழந்தையாக எண்ணி அளவிலா அன்புடன் குழந்தையின் எல்லாச் செயல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள பாசுரங்கள் இதயத்தை ஈர்க்கும் பாங்கின. பெரியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல உயிர்களுக்கும் அருள் செய்யும் பகவானுக்கே தாயாகிறார். எத்தனை உயர்ந்த உள்ளம்!.

கண்ணனை ஒரு தாயின் நிலையிலிருந்து பாடுகிறார். தாய் நிலையைத் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், அப்பூச்சி காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை ஒட்டியே பாடியிருக்கிறார். இவை குழந்தைகளுக்கு உரிய செயல்களல்லவா? அவற்றை இந்தத் தாய் எப்படி அனுபவிக்கிறாள்? சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

கண்ணனைப் பற்றிய முழுக் குறும்படமாகப் பெரியாழ்வார் பாசுரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. காட்டாகச் சில பாசுரங்கள் பற்றிக் காண்போம்.

4.1.2 தொட்டிலில் கண்ணன்

மாடங்கள் நிறைந்துள்ள திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்த இல்லம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது (14).

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்!


(21)

(மருங்கு = இடுப்பு, புல்கில் = அணைத்தால் உதரம் = வயிறு)

எனத் தாயாகிய ஆழ்வார் குழந்தைக் கண்ணனின் குறும்பைக் காட்சிப் படுத்துகின்றார். நாமும் அக்காட்சியைக் கண்டு களிக்க முடிகிறதல்லவா?

இப்பாவனை கிருஷ்ண அவதாரப் பொலிவில் ஈடுபட்ட பெரியாழ்வாருக்குக் கைவந்த கலையாக அமைந்து பின் வந்த கவிஞர்கள் பிள்ளைத்தமிழ் என்ற ஒரு சிற்றிலக்கிய வகையைத் (Genre) தோற்றுவிக்க வித்திட்டது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு கொண்டு அறியலாம்.

சின்னஞ்சிறு குழந்தையைத் தாய் அங்கம் அங்கமாகக் கண்டு மகிழ்வது போலத் தாயாகிய பெரியாழ்வாரும் மகிழ்கின்றார். அதுமட்டுமல்ல தாம் கண்டு மகிழ்ந்தது போல் ஆய்ப்பாடிப் பெண்களும் ரசிக்க வேண்டுமென்று ‘காணீரே’ என அழைக்கின்றார்.

4.1.3 தாலாட்டு

தாயாகிய பெரியாழ்வாரின் தாலாட்டு குழந்தை தொட்டிலில். தாய் தாலாட்டுப் பாடுகிறாள். எப்படி? கீழ்வரும் பாடலைப் படித்துப்பாருங்கள்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!
(44)

(ஆணிப்பொன் = சிறந்த பொன், குறளன் = வாமன், (வாமன அவதாரச் செய்தி) வையம் அளந்தான் = உலகத்தை அளந்தான்)

குழந்தைக்குத் தேவர்களும் தேவியரும் பலவிதமான அணிகலன்களைத் தந்தனர். அவற்றால் காக்கும் கடவுளான குழந்தையை அழகுக்கு அழகு செய்தனர்; அதன் அழகில் பெரியாழ்வார் தம்மை மறக்கின்றார். நாட்டுப்புற மக்கள் அன்றாட வாழ்வில் தம் குழந்தைகளுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் வடிவத்தை ஆழ்வார் பயன்படுத்திக் கொண்டு பக்தியோடு பண்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

4.1.4 அம்புலி அழைத்தல்

அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதி யேல்
மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடிவா

(55)

(மஞ்சு = மேகம், மாமதீ = நிலவே)

என நிலவை வேங்கடவாணன், சக்கரக்கையன், ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் (சிறுவன்), வெண்ணெய் விழுங்கிய பேழை வயிறனை இடுப்பில் வைத்துக் கொண்டு விளையாட அழைக்கின்றார்.

4.1.5 சப்பாணி

குழந்தையை இருகைகளையும் சேர்த்துத் தட்டுமாறு வேண்டுவது சப்பாணிப் பருவம் ஆகும்.  குழந்தையை பார்த்து,

பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி
     தேவகி சிங்கமே! சப்பாணி

(80)

(பட = அழிய, பஞ்சவர் = பாண்டவர், தேவகி = கண்ணனைப் பெற்ற தாய், யசோதை = வளர்ப்புத்தாய்)

கொட்டச் சொல்லி, குழந்தையின் கை அசைவில் இன்பம் துய்க்கின்றார் ஆழ்வார்.

4.1.6 புறம்புல்கல்

புறம்புல்கல் என்பது முதுகுக்குப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்வதைக் குறிக்கும். ஆழியங் கையனை, அஞ்சன வண்ணனை, மார்பில் மறுவனை (மறு=மச்சம்), நச்சுவார் (விரும்புபவர்) முன் நிற்கும் நாராயணனை (107) அழைத்து, முதுகில் அணைத்துப் படுத்துக் கொள்ளும் குழந்தையின் கொள்ளை அழகைப் பேசும் பெரியாழ்வாருக்கு நிகர் பெரியாழ்வார்தான்.

4.1.7 அப்பூச்சி

பஞ்ச பாண்டவர்கள் பத்து ஊர்கள் பெறாத அன்று பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூதுவனாய்ச் சென்று பாரதப்போர் செய்த தூதன் அப்பூச்சி (கண்பொத்தி) காட்டுகின்றான் (118).

கொங்கைவன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

(125)

(குவலயம் = உலகம், கரி = யானை,  பரி  = குதிரை, இராச்சியம் = நாடு (அயோத்தி), கான் = காடு)

என்று மகாபாரத, இராமாயண நிகழ்வுகளைக் குழந்தைக் கண்ணனின் பொலிவைச் சுட்டப் பின்புலம் ஆக்குகின்றார் பெரியாழ்வார்.

• நீராட்டல்

குழந்தையை நீராட்டும் முறை (152-161) பக்திக் கனியாகவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. சீயக்காய் (புளிப்பழம்) கொண்டு, நெல்லிமர இலையைப் போட்டு காய்ச்சிய வெந்நீர் கடாரம் (அண்டா) நிறைய வைத்து நீராட்டினர்.

‘அப்பம் கலந்த சிற்றுண்டி வெல்லம் பாலில் கலந்து சுட்டுவைத்தேன். உண்ணக் கனிகள் தருவன், ஒலிகடல் ஓதநீர் (அலைநீர்) போல வண்ணம் (நிறம், பண்பு) அழகிய நம்பீ! மராமரம் சாய்த்தவனே! திருவோண நாளாம் இன்று நீ நீராட வேண்டும்’ (156, 157) என யசோதைத் தாயாகிய ஆழ்வார் இறைஞ்சுகின்றார். அவதார நாயகனுக்குத் தமிழகக் குழந்தையின் வளர்ப்பு முறையை ஏற்றும் போது, தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காது குத்தல், தொட்டிலிடுதல், குழந்தை உணவு, யானைத் தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல்,  பூச்சூடல் பற்றிய செய்திகள் பதிவாகிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிப்போர்க்கு நெகிழ்வும் ஈடுபாடும் தோன்ற வழி செய்து விடுகின்றன.

கண் போன்ற கோதையை அருமையாய் வளர்த்தவர் பெரியாழ்வார். அவளைச் செங்கண்மால் கொண்டு போனதை எண்ணி, மனத்தில் பாசம் மேலோங்கத் தவிக்கும் தவிப்பைப் பல பாசுரங்கள் விளக்குகின்றன (297-304).

• ஆண்டாளைப் பிரிந்த ஆழ்வார்


ஒரு மகள் தன்னை உடையேன்
     உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
     செங்கண்மால் தான் கொண்டு போனான்

(125)

எனவே,  யசோதை என் மகளை மருமகளாகக் கொண்டு உவந்து சீர் செய்வாளோ என எண்ணுகிறாள் ஆய்ச்சியாகிய ஆழ்வார்.

கிருஷ்ணாவதாரத்தில் தம்மை மறந்து ஈடுபட்ட பெரியாழ்வார் இராமாவதாரத்தையும் சுட்ட மறக்கவில்லை (320-322).

• நாமப் பெருமை

திருமாலின் நாமத்தைக் கூறாதவர்கள் அடையும் இழப்பையும் அவன் நாமத்தைக் கூறுபவர்கள் அடையும் நன்மையையும் கீழ்வருமாறு விளக்குகிறார்.

சிரீதரா, மாதவா, கோவிந்தா, தாமோதரா, நாரணன், கண்ணன் என்பன போன்ற திருநாமம் இட்டால் அவர்களின் அன்னை நரகம் செல்ல மாட்டாள். எனவே மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிடப் பேரிட்டு, அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் (387), உங்கள் பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேரிடுங்கள் (389) வைகுந்தம் செல்லலாம் என்பர்.

• வழிபாடு

நாமப் பெருமையைக் கூறியவர் எப்படி வழிபாடு செய்கிறார்?

எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு
     ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
     அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
(423: 3-4)

(எய்ப்பு = களைப்பு)

எனப் பாடுகின்றார்.  எந்த ஒரு செயலுக்கும் அல்லது நிகழ்வுக்கும் இடமும் காலமும் இன்றியமையாதது. முதுமையில் நினைக்கும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் ஐம்புலன்கள் ஒடுங்கிப் போகும்; நினைவு இழக்கும்; ஒளி குன்றும்; அவை தம் வழிக்கு வாரா என்பதை உணர்ந்து இளமையில் மனம் எப்பொழுது இறைவனை நினைக்கும் உணர்வு நிலைக்குச் செல்லுகிறதோ அப்பொழுது அதன் குறிப்பறிந்து இறைவனிடமும் தம் வேண்டுகோளை வைத்து விடுகின்றார்.

சொல்லலாம் போதேஉன் நாமம் எல்லாம்
     சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
     அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!

(425: 3-4)

என வேண்டும் ஆழ்வார் தம் உள்ளக் குறிப்பைத் தெரிவிக்கிறார். அத்துடன் தாம் பெற்ற இன்பத்தை நாமும் பெற நம்மையும் அரங்கனை வழிபட நெறிப்படுத்துகின்றார்.  பிறவிப் பிணியை நீக்கும் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணனிடம் இதைவிட வேறெதைக் கேட்பது?

 


உனக்கு இடமாய் இருக்க என்னை
     உனக்கு உரித்து ஆக்கினையே
(471)

• மருத்துவன்

கிருஷ்ண அவதாரப் பொலிவைப் பேசுவதில் பெரியாழ்வார் தாம் பெரிய ஆழ்வார். பெரியாழ்வாரின் (தாலாட்டு) உவமை, எளிமை போன்ற கூறுகள் பக்திக்கு அழகு கூட்டுகின்றன.

குலசேகர ஆழ்வார் அரசர் என்பதால் அரசனான தசரதனை நினைக்க, ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் தாய்மை நிலையில் தோய்ந்து பாசுரம் பாடினார் போலும்!

தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும், செவிலித் தாயாகவும் இப்படிப் பல தாயர்களின் கூற்றுகளில் அமைந்துள்ள பெரியாழ்வார் பாசுரங்கள் பக்தி உணர்வின் பெட்டகம், அன்புக் களஞ்சியம் எனலாம்.