6.1 காப்பியம்

கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்றவை வைணவக் காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் அவை விரிவாகப் பேசுகின்றன. திருமாலின் மேற்கூறிய இரு அவதாரங்களையும் காப்பியங்களாக்கித் தருகின்றன.

6.1.1 கம்பராமாயணம்

கம்பரின் காப்பியம் திருவரங்கத்தில் வைணவ ஆச்சாரியர் நாதமுனிகள் தலைமையில் அரங்கேறியது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றித் தீருமே
இன்மையே ராமஎன்ற இரண்டெ ழுத்தினால்

(தின்மை = தீமை)

என்பது நூற்பயன் உரைக்கும் செய்யுள்.

தாதை ஏவலின் மாதுடன் போகி
     காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
     நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ ?

சிலம்பு-II :14

(தாதை = தசரதன்; வேதமுதல்வன் = இராமன்; காதலி = சீதை)

என்பது சிலப்பதிகாரம்.

நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்தவி ராமாவ தாரப் பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை

என்று கம்பர் தமது காப்பியத்தின் பெயரையும் சொல்ல வந்த பொருளையும் குறிப்பிடுகிறார்.

6.1.2 வில்லி பாரதம்

வியாசர் எழுதிய பாரதத்தின் 18 பருவங்களுள் முதல் பத்தை மட்டும் தமிழாக்கம் செய்து வில்லிபுத்தூரர் இயற்றியது வில்லிபாரதம்.

மீனமாகியும் கமடமது ஆகியும் மேருவை எடுக்கும்நாள்
ஏனமாகியும் நரஅரி ஆகியும் எண் அருங் குறள்ஆகியும்
கூனல்வாய் மழுதரித்த கோஆகியும் அரக்கரைக் கொலைசெய்த
வான நாயகன் ஆகியும் நின்ற மால் மலரடி மறவேனே

(மீனம் = மச்சாவதாரம்,  கமடம் = ஆமை வடிவம்,  ஏனம் = பன்றி, நரஅரி = நரசிங்கம், குறள் = வாமனன், மழுதரித்தகோ = பரசுராமன், வானநாயகன் = திருமால்)

என்பன கடவுள் வாழ்த்துக் காட்டும் அவதாரங்கள் ஆகும்.

6.1.3 பாரத வெண்பா

வெண்பா யாப்பில் பெருந்தேவனாரால் இயற்றப்பட்ட காப்பியம் பாரத வெண்பா; இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

6.1.4 அரங்கநாதர் பாரதம்

அரங்கநாதக் கவிராயர், வில்லிபுத்தூரார் பாடாதுவிட்ட சௌப்திக பருவத்தின் பின் பகுதியில் அமைந்த சிகாமணி சருக்கம் முதல் சொர்க்காரோகணப் பருவம் வரை பாடிப் பாரதக் கதையை முடித்து ள்ளார். இதில் 2477 பாடல்கள் உள்ளன. எனவே இந்நூல் அவர் பெயரை இணைத்து அரங்கநாதர் பாரதம் என்று வழங்கப்படுகிறது.

மேற்காட்டிய காப்பியங்கள் தவிர இதிகாசக் கிளைக்கதைகளோடு தொடர்புடைய குசேலோபாக்கியானம், நளவெண்பா, நைடதம் போன்ற நூல்களும் உள்ளன. இவை, வைணவத்தின் கதைக்கூறுகள் வளமார்ந்த காப்பியங்கள் தோன்றத் துணைநின்றமைக்கு எடுத்துக்காட்டாகும்.

• நல்லாப்பிள்ளை பாரதம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளை என்பவர் வியாச பாரதம் முழுவதையும் தமிழில் பாடியுள்ளார். இவர் வடமொழியில் உள்ளவாறே பதினெட்டுப் பருவங்களையும் பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை பதினெட்டுப் பருவங்களையும் 132 சருக்கங்களில் 14000 பாடல்களில் பாடியிருக்கிறார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதத்தில் உள்ள பாடல்களின் அழகைக்கண்டு, அவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றை எடுத்துக் கொண்டார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விட்ட கதைப்பகுதிகள் எல்லாவற்றையும் இவர் பாடியுள்ளார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடிய பகுதிகளில் சுருக்கமாக உள்ள பகுதிகளையும் விரித்துப் பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை பாரதத்தில் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதமும் அடக்கம்.