மனிதன் மனிதனாக வாழ உதவுவதும் மனித நிலையிலிருந்து மேம்படுவதற்கான உரிய வழிவகைகளை வகுத்துரைப்பதும் சமயத்தின் குறிக்கோள் எனலாம். சமயங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்பச் சில மாற்றங்களைப் பெற்று, தம்மைப் புதுப்பித்துக் கொள்வது என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும். பழைய கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சமூகத்தில் புரட்சியும் மறுமலர்ச்சியும் தோன்றுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான். சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேள்விகளும் வேதங்களுமே மனிதனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில் புத்தர்பிரான் புதியதோர் ஒளிக்கதிராய்த் தோன்றினார். மனிதரை வெளியே உள்ள யாருமே முன்னேற்ற முடியாது.  மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன் ஒழுக்கமும்தான் மனித உயர்விற்கு அடிப்படையாகும் என்றும், மனப்பண்பாடுதான் வாழ்க்கையின் லட்சியம்  என்றும் வழிகாட்டியவர்  புத்தர். அவருடைய தோற்றம் பற்றி அறவண அடிகள் கூறும் விளக்கத்தை அறியலாமா?

6.2.1 புத்தரின் தோற்றம்


புத்தர்பிரானின் தோற்றம் குறித்து அறவண அடிகள் அறவணர்த் தொழுத காதையில் கீழ்வருமாறு விளக்குகிறார்: புத்தர்பிரான் கூறிச் சென்ற நல்லறம் தளர்ந்தது. என்றும் அழியாத வீட்டு நெறி தடைபட்டது. வெயிலை உணர முடியுமே தவிர, காண இயலாது. அதுபோலவே, ஆன்றோர் உணர்ந்தவாறே வீட்டு நெறியை நாம் உணர இயலாது. ஊசியால் துளைக்கப்பட்ட மணியின் மெல்லிய துளைவழியே கடல்நீர் புக இயலாது; என்றாலும் அத்துளை வழியே மிகக் குறைந்த அளவு நீர் நுழைய முடியும். அதுபோல நல்லறங்களைச் சிறிது சிறிதாக அடைய முடியும் என்று நினைத்து நான் அறக்கருத்துகளைக் கூறுவது உண்டு; ஆயினும் உலக மக்கள் கேட்டுத் தெளிவு பெறவில்லை. (அறவணர்த் தொழுத காதை: 57-71) இதைப் போன்றதொரு காலகட்டம் முன்பு இருந்தது. அந்த நிலையில்தான் புத்தபிரான் தோன்றினார். இவ்வாறு அறவண அடிகள் கூறிச் செல்கிறார். உலகமக்களின் துயரம் நீங்க, தேவர்கள் வேண்டியதாகவும் அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட பிரபாபாலன் என்ற தேவன் புத்தரின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்தும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது. (அறவணர்த் தொழுத காதை: 72-82)

6.2.2 புத்தரின் பெருமை


புத்தரின் பெருமையை, சங்கதருமன்,     மணிமேகலா தெய்வம், மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் மூலம் சாத்தனார் விரிவாகப் பேசுகிறார். முதலில் புத்தரின் தோற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கலாம்.

புத்தரின் தோற்றத்தைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

  • புத்த ஞாயிறு தோன்றும்பொழுது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும்.

  • ஓரிடத்தில் நிலைக்காது சுழன்று கொண்டேயிருக்கும் கோள்களால் கேடு விளையாது.

  • வானம் பொய்க்காது மழைபெய்யும்.

  • உலகில் வளம் பல பெருகும்.

  • உயிர்கள் யாவும் துன்பம் அடையா.

  • காற்று வலமாக எழுந்து சுழலும்.

  • திசைகள் எல்லாம் செழுமையுறும்.

  • முத்து, பவளம் முதலிய பல வளங்களைக் கடல் நல்கும்.

  • பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டிக் கலம் நிறையப் பாலைத் தரும்.

  • பறவைகள் பயனை நுகர்ந்து தாம் தங்கும் இடங்களிலிருந்து நீங்கா.

  • விலங்கினமும் மக்களினமும் குறையுடைய பிறவிகளைப் பெற மாட்டா.

  • அக்காலத்தில் பிறந்து அப்பெருமானின் அருளறத்தைக் கேட்டவர்கள் பிறவித்துன்பத்தைக் கடந்தவராவர். (அறவணர்த் தொழுத காதை: 83-98)

துறவியின் போற்றுதல்

   

சங்கதருமன் பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவி. இவர் புத்தரை போற்றும் வகையினைக் கீழே காண்போம்.

  • புத்ததேவன் எம்முடைய இறைவன்.

  • இயல்பாகவே தோன்றிய நற்குணங்களை உடையவன்.

  • குற்றமில்லாத பல பிறப்புகளிலும் பிறந்தவன்.

  • பிறப்பின் தன்மையை உணர்ந்தவன்.

  • குணங்களின் மெய்ப்பொருளாக உள்ளவன்.

  • தனக்கென வாழாது, பிறர்க்காகவே வாழ்ந்தவன்.

  • தருமச் சக்கரத்தை உருட்டியவன்.

  • காமனை வென்றவன்.

    (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை : 71-79)

 

மணிமேகலா தெய்வம் புகழுரை

இந்திர விழாவைக் காண விரும்பிய மணிமேகலா தெய்வம் அந்நகரில் பெண்வேடம் பூண்டு பளிங்கு மண்டபத்திற்கு வருகிறது. அப்போது அங்குள்ள புத்த பாதபீடிகையை வலங்கொண்டு வந்து போற்றித் துதித்தது.

மணிமேகலா தெய்வம் புத்தரைப் போற்றியுள்ள பகுதி சிறந்த பகுதியாகும். படிப்பதற்குச் சுவை பயக்கும் பகுதி. அதனைக் கீழ்வரும் பாடல் வரிகள் நன்கு உணர்த்தும்.

 

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்

உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ

காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ

ஆயிர ஆரத்து ஆழி அம்திருந்து ஆடி

நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?

    (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 5:98-105)

(புலவன் = அறிவுடையோன், தீர்த்தன் = தூய்மையானவன், புராணன் = பழமையானவன், ஏமம் = பாதுகாப்பு)

இனி காப்பியத் தலைவியாகிய மணிமேகலையும் புத்தரை வணங்கிக் கீழ்வருமாறு போற்றுகிறாள்.

  • மாரனை வென்ற வீரன்

  • தீய நெறியாகிய பகையை நீக்கியவன்

  • பிறர் வாழ்வில் அறம் உண்டாக முயல்வோன்

  • சொர்க்க இன்பத்தை விரும்பாதவன்

  • மழை போன்றவன்

  • எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்போன்

  • உயிர்களுக்கு ஞானக்கண்கள் தரும் மெய்யுணர்வு உடையவன்

  • நரகர் துயர்கெட அங்குச் சென்றவன்

  • நரகர்களின் துன்பத்தைப் போக்கியவன்

இவற்றைத் தவிர, பௌத்த சமயச் சின்னங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது அவர் பெருமையை மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.

6.2.3 பௌத்தச் சின்னங்கள்


தமிழகத்தில் பௌத்த சமயம் சிறப்புற்றிருந்த காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புத்த பீடிகைகள் (புத்தரது திருவடிகள் பதித்த பீடங்கள்) இடம் பெற்றிருந்தன. புத்த பீடிகைகள் மக்களால் போற்றி வணங்கப் பட்டன. அவற்றின் பெருமையைப் பல இடங்களில் சாத்தனார் விரிவாகப் பேசிச் செல்கிறார்.

 

புத்த பீடிகையின் தன்மை


புகழமைந்த நிலத்தில் மூன்று முழ அளவு உயரத்தில் நான்கு திசையிலும் ஒன்பது முழ அளவில் இடம் அகன்று, விதிமுறைகளுக்கு ஏற்ப, சிறந்த பளிங்கினால் வட்டமாய் அமைந்து இடையில் சதுர வடிவத்தின் மீது தாமரை ஒளி வீசுவதாய் அமைய வேண்டும்.  இதுவே புத்தருக்கு உரிய பீடம். இது மணிபல்லவத் தீவில் அமைந்திருப்பது.

இந்தப் பீடத்தின் அருகில் உள்ள மரங்கள் நறுமலர்களை மட்டுமே சொரியும். பறவைகளும் அப்பீடிகையின் அருகில் தம் சிறகுகளை அசைத்து ஒலி செய்யா. தூய மனத்துடன் தொழுது நின்றால் முந்தைய பிறவியைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். அந்தப் பீடத்தின் சிறப்பை உணர்ந்த இந்திரன் அந்தப் பீடத்தில் மணிகளைப் பொருத்திப் போற்றினான். (மணிபல்லவத்துத் துயருற்ற காதை, 44-63)

உவவனத்தின் பதுமபீடம்


உவவனம் என்பது சோலையாகும். பதும பீடம் என்பது தாமரை வடிவில் அமைந்த பீடமாகும். உயிர்களிடத்தில் அருள் கொண்டவன்; ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற இலட்சியத்தை உடையவன்; இப்படிப்பட்ட புத்த தேவனின் ஆணையால் பூத்துக் குலுங்கும் உவவனத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அதன் தனிச் சிறப்பாவது, அது அங்கிருப்பவரின் ஓசையை வெளிப்படுத்தாது. உருவத்தை மட்டும் வெளியே காட்டும். அந்த மண்டபத்தின் உள்ளே தூய நிறமுடைய மாணிக்கத்தால் அமைந்த ஒளி பொருந்திய பதுமபீடம் அமைந்திருந்தது.

பதுமபீடத்தின் சிறப்பு


பதுமபீடத்தில் அரும்புகளை வைத்தால் அவை மலரும். மலர்ந்தவை பல ஆண்டுகள் ஆனபின்பும் வாடுவதில்லை. அவற்றில் வண்டுகளும் மொய்ப்பதில்லை.     காணிக்கை செலுத்துவோர் ஏதேனும் ஒரு தெய்வத்தை மனத்திலே நினைத்து அப்பீடத்தில் மலரை வைத்தால், அம்மலர் அவர்  கருதிய தெய்வத்தின் திருவடிகளைச் சென்றடையும். ஒரு நினைப்பும் இன்றி மலரிட்டால் அது எங்கும் செல்லாது; அங்கேயே இருக்கும். இத்தகைய சிறப்பினை உடைய இந்தப்பீடம் தெய்வத் தச்சனால் அமைக்கப்பட்ட பெருமைக்குரியது. தெய்வத்தச்சன், மயனை மயன் என்பர். இவற்றைத் தவிர பாத பங்கய மலையில் உள்ள புத்தரின் பாதப்பெருமையும் (மலர்வனம் புக்க காதை: 61-68) மணிபல்லவத் தீவின் அருகிலுள்ள இரத்தின தீவகத்தில் உள்ள சமந்தமலையில் இடம் பெற்றுள்ள புத்தர் பிரானின் இணையடிகளின் சிறப்பும் (பாத்திரம் பெற்ற காதை 11:19-24) சாத்தனாரால் விளக்கப்படுகின்றன. இனி பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பார்க்கலாமா?