![]() |
ஏறக்குறைய பக்தி இயக்கக் காலம் வரை சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பெரும் செல்வாக்கோடு இருந்தன. பின்னர், சைவமும் வைணமும் மேலோங்கின. சமண, பௌத்தத்திற்கு மன்னர்களின் ஆதரவும் குன்றியது. மக்களும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டு உள்ளம் ஒன்றி நின்றனர். அதனால் சமண பௌத்த மதங்களுக்கு மக்களின் ஆதரவும் குறையலாயிற்று. மக்களின் ஆதரவின்றி எந்தச் சமயமும் உயிர்த் துடிப்புடன் வளர முடியாதல்லவா? சமண சமயம் குன்ற அதுவே முக்கிய காரணமாயிற்று. காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப இலக்கியங்களின் போக்கும் மாறியது. அறநூல்களையும் காப்பியங்களையும் படைத்த சமணச் சான்றோர் பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுச்சி பெற்றபோது சிற்றிலக்கியங்களைப் படைப்பது தவிர்க்க இயலாததாய்ப் போனது. வீடுபேற்றைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டவர்கள் என்பதால் சிற்றிலக்கியங்களும் அதற்கான நெறிமுறைகளையே பேசின. அவற்றுள் கலம்பகம், அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் நம் கவனத்துக்கு உரியனவாகின்றன. இந்தப் பாடத்தில் சமணர்கள் இயற்றிய சில சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம். அவை பழைய மரபுப்படி எழுதப் பட்டுள்ளனவா அல்லது மரபினின்றும் ஏதேனும் மாறுதலாகப் படைக்கப் பட்டுள்ளனவா என்றும் அறியலாம். பக்தி இயக்கக் காலத்தில் பக்திப் பாடல்களும் புராணங்களும் சைவ வைணவச் சான்றோரால் இயற்றப்பட்டன. சமண சமயச் சான்றோரும் புராணங்களை இயற்றினர். அவை பற்றியும் இந்தப் பாடத்தில் அறியலாம். |