தோற்றச்சூழல்

பக்தி இயக்கம் மக்களைக் கவர்ந்தபோது சிற்றிலக்கியங்கள் பல தோன்றின.  தங்கள் சமயம் அழிந்துவிடாமல் காத்திட, சைவ வைணவப் பெரியார்கள் போல,  சமணப் பெரியார்களும் புராணங்களை இயற்றலாயினர்.

சமூகத்தில் அவ்வப்போது நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் மாறுதலை ஏற்படுத்தும் போது, ஒன்று அவற்றை எதிர்த்துப் போராடலாம்.     அன்றி இணைந்து நின்று உறவாடலாம். காலச்சூழலுக்கு ஏற்ப, மாற்றங்களுக்குத் தகுந்தபடி இலக்கியங்களைப் படைப்பதே உறவை நிலைக்கச் செய்யும். அத்துடன் அவ்விலக்கியங்கள் உயிர்த்துடிப்போடு மக்களிடையே தன் இருப்பை உணர்த்த முடியும். இதனை மனத்தில் கொண்டே அற இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்திய சமணர் காலத்திற்கேற்பத் தங்களை மாற்றிக்கொண்டனர். அந்த மாற்றத்தின் விளைவால் தோன்றியவையே புராண வகைகள்.
    

4.2.1 ஸ்ரீபுராணம்

சமணர் வடமொழியில் மகாபுராணம் இயற்றினர். அதில் அறுபத்து மூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவித் தமிழில் மணிப்பிரவாள நடையில் வடமொழியும் தென்மொழியும் ஆகிய இருமொழிச் சொற்கள் விரவி வரும் நடையில் ஸ்ரீபுராணம் எழுதப்பெற்றது. வடமொழியுந் தென்மொழியும் ஆகிய இருமொழிச் சொற்கள் விரவிவரும், உரைநடை தமிழிற்குப் புதிய போக்கு. கிறித்துவர்கள் வருகையால் உரைநடை பெரிதும் வளர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.    ஆயினும் அவர்களுக்கும் முன்னோடியாகத் தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதிய ஸ்ரீபுராணம் உரைநடை நூலின் விதையெனலாம். அதற்கு முன்னாலும் உரைநடை இருந்திருக்கிறது என்றாலும் நூல் முழுமையும் உரைநடையில் அமைந்தது என்பதால் ஸ்ரீபுராணத்திற்கு ஒரு தனியிடம் உண்டு எனலாம். இம்மணிப்பிரவாள நடையை ஒட்டி வைணவ ஆசிரியர்களும் எழுத ஆரம்பித்தனர்.

அறுபத்துமூவர் வரலாறு

குணபத்திராச்சாரியார் ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றிய 63 பெரியோர்களின் வரலாற்றைக் கூறும் உத்தரபுராணத்தைப் பின்பற்றி மண்டல புருஷர் இயற்றிய நூல் ஸ்ரீபுராணம். இதைத் தழுவல் நூல் எனவும் கூறலாம். இதன் காலம் 12-ஆம் நூற்றாண்டு எனலாம்.

சமண சமயத்தில் 63 பெரியோர்களாகக் கருதப்படுவோர்.
தீர்த்தங்கரர் 24
சக்கரவர்த்திகள் 12
வாசுதேவர் 9
பிரதி வாசுதேவர் 9
பலதேவர் 9
----
63
----

மேலே குறிப்பிட்ட அறுபத்து மூவரும் வடமொழியில் திரிசஷ்டி சலாகா புருஷர் என வழங்கப்படுகிறார்கள். இவர்களைப் பற்றிய இந்நூல் திரிசஷ்டி சலாகா புருஷர் சரிதம் என வழங்கப்படுகிறது. இதுவே அறுபத்துமூன்று பெரியோர்களின் வரலாறாகும்.

ஸ்ரீபுராணம் சமணர் போற்றும் புனித நூலாகும். சமணர் இல்லங்களில் இதைப் பாராயணம் செய்யும் பழக்கமும் உண்டு.

4.2.2 மேருமந்தர புராணம்

நீலகேசிக்கு உரை எழுதிய வாமனமுனிவரால் இயற்றப்பட்டது மேருமந்தர புராணம்.  இவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

மேரு, மந்தரர் என்ற இருவரின் முற்பிறப்பு வரலாறும் அவர்கள் முக்தி அடைந்ததும் விளக்கப்படுகின்றன. இருவரும் விமல தீர்த்தங்கரரின் கணதரர்கள். (சித்த பதவி என்பது இறுதி நிலையாகிய நிர்வாண நிலை/ மோட்சம். சித்தபதவிக்கு முன் அரஹந்த பதவியை அடைந்த தீர்த்தங்கரர்கள் சமவ சரணத்தில் அமர்ந்து மக்களுக்கு அறவுரை ஆற்றுவர். அவர் கூற எண்ணுவன வெல்லாம் ஒலியாக வெளிப்படும். அதற்கு திவ்யதொனி என்று பெயர். அவ்வாறு ஒலிவடிவில் கூறப்படுகின்ற அறவுரைகளைக் கணதரர் இருவர் பின்வரும் சந்ததியினர் பயன்பெற வேண்டுமென்று எழுதி வைப்பர். அதுவே ஆகமம் என்று வழங்கப்படும். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இரண்டு கணதரர்கள். அவர் அறவுரை வழங்கும் போது இப்பணியைச் செய்வர் என்பது சமணசமய மரபு.) இதற்கு முதல்நூல் வடமொழியில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம். மேருமந்தர புராணம் 13 சருக்கங்களையும் 1405 பாடல்களையும் உடையது.

மையக்கருத்து
    

பிறவிகள் பலவுண்டு. இருவினைக்கேற்ப உயர்வுதாழ்வு ஏற்படும் என்பதை விளக்கிச் செல்லும். சஞ்சயந்த முனிவரை வித்யாதரன் ஒருவன் வீணாகத் துன்புறுத்த, அவர் சகோதரன் சயந்தன் அதனைப் பொறாமல் பெருங் கோபங்கொண்டபோது அதித்தியாபன் என்பவர் பழம்பிறப்புக் கூறி அவனைத் தடுக்கிறார். நல்வினையும் தீவினையும் பல பிறப்பிலும் தொடர்ந்து வருவதனைச் சங்கிலிபோல் பிணைத்துப் பல கதைகளாகக் கூறுவதே மேருமந்தரபுராணம்.


தான் செய்த வினைக்கு ஏற்ப ஒருவர்க்குப் பிறவிகள் தொடரும் என்று வினையின் ஆற்றலை எடுத்துரைப்பது இந்நூல் எனலாம். பிறவிகள் தொடர்வதைத் தடுக்க இரு வினைகளையும் ஒருவர் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் துறவு மேற்கொண்டு தவத்தினை ஆற்றி, வினைகளை வென்று, வீடுபேற்றை அடையவேண்டும். அதுவே மனிதப் பிறவியின் குறிக்கோளாக வேண்டும் என்பதைச் சுட்டுகிறது மேருமந்தர புராணம்.

    

4.2.3 பிற புராணங்கள்

நாரதசரிதை என்ற நூலிலிருந்தும் சாந்திபுராணம் என்ற நூலிலிருந்தும் சில செய்யுட்கள் புறத்திரட்டு என்னும் நூலில் காட்டப் பட்டுள்ளன. கன்னடத்தில் 9-ஆம் நூற்றாண்டில் 16-ஆம் தீர்த்தங்கரராகிய சாந்திநாதரைப் பற்றிக் கூற எழுந்தது போல் தமிழிலும் தோன்றிய நூலே சாந்திபுராணம். ஸ்ரீபுராணத்தில் நாரதன் கதை வருகிறது. அந்தக் கதையைக் கூறும் நூல் நாரதசரிதை.

சாந்திபுராணம், நாரத சரிதை இரண்டுமே இன்று கிடைக்கவில்லை.