2.4. கிறித்தவ நாடகப் படைப்புகள்

கிறித்தவர்கள் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளனர். கி.பி.16ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த அன்றிக்ஸ் அடிகள், கிறிஸ்துவின் வாழ்க்கையை நாடகமாக்கி, மக்கள் பார்க்கும்படி செய்தார். 17,18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய ‘பள்ளு’, ‘குறவஞ்சி’, ‘நொண்டி’ முதலிய நாடக வகைகளைக் கையாண்டு கிறித்தவ நாடகங்கள் பல செய்யுளில் எழுதப்பட்டுள்ளன. ‘ஞானப்பள்ளு’ கிறித்தவப் பள்ளு நூலாகும். இதனைக் கி.பி 1642 இல் ஞானப்பிரகாச அடிகள் இயற்றினார். பெத்லகேம் குறவஞ்சியையும், ஞான நொண்டி நாடகத்தையும் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் இயற்றியுள்ளார். மேலும் ‘சவிட்டு நாடகம்’, ‘வாசகப்பா’ முதலிய நாடக வகைகளிலும் கிறித்தவர்கள் நாடகங்கள் புனைந்துள்ளனர். இவை மேனாட்டு நாடக வகைகளைத் தழுவியவை. கிறித்தவ நாட்டிய நாடகங்களும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தற்கால நாடகங்கள் பொதுவாக உரைநடையிலேயே அமைந்துள்ளன.

• பாடுபொருள்

பெரும்பான்மையான கிறித்தவ நாடகங்கள் கிறித்துவின் வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை. விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு ரூத், யோசேப்பு போன்ற இறையடியார்களின் வரலாறுகளும் நாடகமாக்கப்பட்டுள்ளன. தோமையர் வரலாறு கற்பனை கலந்து நாடகமாக்கப்பட்டுள்ளது. கிறித்துவின் உவமைக் கதைகளும் நாடகமாக்கப்பட்டுள்ளன. கிறித்தவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும் நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. சமூகச் சீர்த்திருத்தக் கொள்கைகளை வற்புறுத்தும் நாடகங்களையும் கிறித்தவர்கள் அதிகம் புனைந்துள்ளனர்.

அற்புதா, இரணியல் கலைத்தோழன், இன்னாசி, தி.பாக்கியமுத்து, தி.தயானந்தன் பிரான்சிஸ், தாவீது அதிசயநாதன், பொன்.ரத்தினம், ஜாய்ஸ் பீல், வின்சென்ட், வி.ஆர்.எஸ்.ஜான், வ.ஆசீர்வாதம், சி.ஜே.சாமுவேல் போன்றோர் கிறித்தவ நாடகங்களைப் படைத்துள்ளனர். இங்கு அற்புதாவின் ‘நல்ல சமாரியன்’ நாடகம் பற்றிக் காண்போம்.

2.4.1 மனித உறவுகள்

அன்புதான் மனித உறவுகளுக்கு அடிப்படை. பணம், பதவி, சாதி, மதம் ஆகியன மனிதனைப் பிரிக்கின்றன. அன்பு மட்டுமே மனிதர்களை இணைக்க முடியும் என்பதைப் பின்வரும் கதை உணர்த்துகிறது.

• ‘நல்ல சமாரியன்’

நல்ல சமாரியன் கதை விவிலியத்தில் காணப்படுகிறது. இது கிறித்து சொன்ன உவமைக் கதைகளில் ஒன்று. ‘தமக்கு அயலான் யார்’ என்று வினவப்பட்டதற்கு விடையாக இக்கதையைக் கிறித்து கூறினார். இக்கதையை எளிய நாடகமாக்கியுள்ளார் அற்புதா.

• யூதனும் கள்வர்களும்

இந்நாடகத்தில் ஆறுகாட்சிகள். முதற்காட்சி கள்வர் இருவரின் சுவையான உரையாடலுடன் தொடங்குகிறது. அது ஒரு காட்டு வழிப்பாதை; வழிப்போக்கர் எவரேனும் வருகிறார்களா என்று கள்வர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கையில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு யூதன் வந்து கொண்டிருக்கிறான். யூதனைத் தாக்கி அவன் உடமைகளைப் பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். யூதன் குற்றுயிராய்க் கிடக்கிறான்.

• யூதனும் சமாரியனும்

இரண்டாவது காட்சியில், அந்தக் காட்டு வழியில் ஒரு மதக்குரு வருகிறார். அடிபட்டுக் கிடக்கும் யூதனைப் பார்த்தும் பாராமல் சென்று விடுகிறார். மூன்றாவது காட்சியில் ஒரு லேவியன் (லேவியன் = மதக் குருவின் உதவியாளன்) வருகிறான். அவனும் உதவி செய்யாமல் போய் விடுகிறான். இவர்களை அடுத்து வந்த சமாரியன் யூதனுக்கு முதலுதவி செய்கிறான். திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுக்கிறான். அவனை ஒரு சாவடியில் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். (சாவடி - தங்கும் விடுதி).

அடுத்த காட்சியில், சாவடிப் பொறுப்பாளனுக்கும் சமாரியனுக்கும் நிகழும் உரையாடல் சிறப்பாக அமைந்துள்ளது.

• சமாரியனின் பெருந்தன்மை

சத்திரக்காரன் சமாரியனைப் பார்த்து, ''இவன் யூதனாயிற்றே! சமாரியர்களைக் கண்டால் யூதர்கள் விலகி ஓடுவார்களே! உங்களிடம் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்க மாட்டார்களே!-'' என வினவுகிறான். ஏனெனில், அக்காலச் சமுதாயத்தில் சமாரியர்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆபத்துக்குப் பாவமில்லை என்பதை எடுத்துக்கூறி, யூதனைப் பார்த்துக் கொள்வதற்கு இரண்டு வெள்ளிக் காசுகளையும் கொடுத்துவிட்டுச் செல்கிறான் சமாரியன். சத்திரக்காரன் சமாரியனின் பெரிய மனத்தை எண்ணி வியக்கிறான்.

• யூதனின் மனிதநேயம்

ஐந்தாவது காட்சியில், உடல்நலம் தேறிய யூதன், நடந்த நிகழ்ச்சிகளை வியப்போடு கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்தச் சமாரியனைக் காண்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். சமாரியன் வந்த உடன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொள்கிறான். ''ஐயா என்னை விட்டுவிடுங்கள்; நான் தீண்டத் தகாதவன்'' என்று கூறி விலகுகிறான் சமாரியன். ''மரத்துப் போன யூதனாய் வாழ்வதை விட மனிதாபிமான மிக்க ஒரு சமாரியனாய் வாழ்வதே மேல்'' என்று கூறி, சமாரியனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் யூதன்.

• மனிதநேயமில்லா மக்கள்

இறுதிக் காட்சி, யூதனும், சமாரியனும் காட்டு வழியில் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். யூதன் குற்றுயிராய்க் கிடந்த அதே இடம். அங்கு, மத குருவும், லேவியனும், சில யூதர்களும் நின்று கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர். யூதன் கடவுள் கட்டளைகளையும் சமுதாய நியதிகளையும் மீறி நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள், அந்தச் சமாரியனை உதைக்க வேண்டும் என்கிறான் கூட்டத்தில் ஒருவன். அந்தக் கூட்டம் கையிலிருந்த தடிகளோடு அவர்களை நெருங்குகின்றது. சமாரியன் தன் யூத நண்பனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, தன் உடைவாளை உருவுகிறான். வாளைக் கண்டவுடன் திரும்பி ஓடுகிறார்கள் வந்தவர்கள்.

• பயனற்ற சடங்குகள்

''உளுத்துப் போன கொள்கைகள் உருப்படாத சடங்குகள் சம்பிரதாயங்கள். . . இந்த மனிதர்களுக்கு மதத்தின் இலட்சியமும் தெரியவில்லை. மானுடத்தின் உயிர்த் துடிப்பும் விளங்கவில்லை.'' என்று கூறி சமாரியனும், யூதனும் தம் இலட்சியப் பயணத்தைத் தொடர்கின்றனர்.

• மனிதநேயம்

மனித உறவுகளின் அடித்தளங்களையும், ஆணி வேர்களையும் ஆராய்கிற கதை இது. நமக்குப் பகைவர்கள் யார்? நண்பர்கள் யார்? உற்றார் யார்? இவற்றைத் தீர்மானிப்பது எது? எதனையும் எதிர்பாராத மனிதநேயமே இவற்றைத் தீர்மானிக்கிறது. மனித உறவுகள் மதச்சட்டங்களை விட மேலானவை என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது.