3.1 கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்
பக்தி உணர்வை
வெளிப்படுத்துவதற்குத்
தமிழ் சிறந்த மொழியாகும். எனவே,
ஒவ்வொரு சமயத்தவரும்
கடவுளரைப் பாடுவதற்கும். சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்கும் பக்தியை
வெளிப்படுத்துவதற்கும் பலவகை
இலக்கியங்களைத்
தமிழில் படைத்து வந்துள்ளனர்.
இவ்வகையில் கிறித்தவச் செய்திகளைக் கொண்ட
சிற்றிலக்கியங்களும் தமிழில் தோன்றியுள்ளன.
கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்,
கிறித்துப்
பெருமானைச் சிறப்பித்துப்
பாடுகின்றன. இயேசுவின்
அன்னையையும், தந்தையையும் பாட்டுடைத்
தலைவர்களாகக்
கொண்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன.
இறையடியார்களின் வரலாறுகளும் சிற்றிலக்கியங்களாகப் பாடப்பட்டுள்ளன.
விவிலியச் செய்திகளை எடுத்துரைக்கவும்,
கிறித்தவக்
கோட்பாடுகளை விளக்கவும் சிற்றிலக்கியங்கள்
பல தோன்றியுள்ளன.
தம் குறைகளுக்கு வருந்தி,
பக்தியை வெளிப்படுத்தி,
நிலையான வாழ்வை
நல்க, இறையருளை
வேண்டும் பாங்கு
கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் மிகுந்துள்ளது.
இயேசு பெருமானைத் தமிழ் மண்ணுக்கும், தமிழ்ப்
பண்பாட்டு மரபுகளுக்கும்
உரியவர் என்பதை
விளங்கச் செய்வதில் கிறித்தவச் சிற்றிலக்கியங்களுக்கும் பெரும்
பங்கு உண்டு.
3.1.1 கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகள்
கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகளாக வீரமாமுனிவரையும்,
வேதநாயக சாஸ்திரியாரையும் குறிப்பிடலாம்.
இவர்கள் இருவரும் தமிழிலக்கிய வளத்திற்கு
குறிப்பிடத்தக்க
பங்களிப்பைச் செய்தவர்கள். • வீரமாமுனிவர்
வீரமாமுனிவரின்
தாய்மொழி தமிழ் அல்ல. ஆயினும், கடும் முயற்சியால் தமிழில் புலமை
எய்தி, பல்வகைத்
தமிழ்ப் பணிகளைச் செய்தவர்.
திருக்காவலூர்க்
கலம்பகம், கித்தேரியம்மாள்
அம்மானை, அன்னை
அழுங்கல் அந்தாதி, அடைக்கல
மாலை
முதலிய
சிற்றிலக்கியங்களை இவர் படைத்துள்ளார்.
கிறித்தவக்
கோட்பாடுகளுக்கு ஏற்ப, சிற்றிலக்கிய
வடிவங்களைத் தேவையான
மாற்றங்களுடன் கையாண்டுள்ளார். • வேத நாயக சாஸ்திரியார்
வேதநாயக சாஸ்திரியார் குறவஞ்சி, ஞான அந்தாதி, வேத
வினா விடை அம்மானை, ஞான
உலா, பெண்டிர்
விடு தூது, ஜெப
மாலை, பராபரன் மாலை, கால
வித்தியாச மாலை முதலிய சிற்றிலக்கியங்களைப்
படைத்துள்ளார்.
சாஸ்திரியாரின் சிற்றிலக்கியப்
படைப்புகள் தனித்தன்மை கொண்டவை; கிறித்தவ தத்துவ
விளக்கமாக அமைந்தவை. • பிற முன்னோடிகள்
மாயூரம் வேதநாயகம்
பிள்ளை, அந்தோணிக்
குட்டி அண்ணாவியார்,
சதாசிவம்
பிள்ளை, சாமிநாதப்
பிள்ளை, பொன்னுசாமி, திட்டூர் தேசிகர்,
ஜி.எஸ்.வேதநாயகர்,
சுவீகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்க
சிற்றிலக்கியப் படைப்புகளை அளித்துள்ளனர்
மேலும், சூ.தாமஸ், பேராசிரியர் பொன்னு, ஆ.சத்திய சாட்சி,
பவுல் ராமகிருட்டினர், பேராசிரியர்
தாவீது
அதிசயநாதன், பி.கே.ஜார்ஜ் போன்றோர்
இருபதாம் நூற்றாண்டுக்
கிறித்தவச் சிற்றிலக்கிய
வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளனர். 3.1.2
கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் தனித்தன்மைகள்
1) கிறித்தவ சமய மரபுகளுக்குப்
பொருந்தாத சிற்றிலக்கியக் கூறுகளைக் கிறித்தவப்
புலவர்கள் தவிர்த்துள்ளனர்; சிலவற்றைப் புதிதாகச்
சேர்த்துள்ளனர். சான்றாக, திருக்காவலூர்க் கலம்பகத்தில்
வீரமாமுனிவர், ‘ஊர்’, ‘களி’ முதலிய கூறுகளை நீக்கியுள்ளார்;
‘சமூக உல்லாசம்’, ‘ஜெபமாலை’ முதலிய கூறுகளையும் புதிதாகச்
சேர்த்துள்ளார். உலா இலக்கியங்களில் ஏழு வகையான பருவப்
பெண்டிர் பற்றிய வருணனைகள் இடம் பெறுவதுண்டு.
வேதநாயகம் சாஸ்திரியாரின் ‘ஞான உலா’ வில் ஏழு வகை பருவப் பெண்டிர்
குறித்த வருணனைகள் இடம் பெறவில்லை. பள்ளு
இலக்கியங்களில் மூத்த பள்ளியும்
இளைய பள்ளியும் ஏசிக் கொள்ளும் பகுதி இடம் பெறும். ‘ஞான உலா’
வில் இத்தகைய பகுதி இடம் பெறவில்லை.
2) கிறித்தவச் சிற்றிலக்கியப்
புலவர்கள், இறை மாந்தர்களின் உடல் அழகைச்
சிறப்பித்துப் பாடுவதை விடவும், அவர்தம் பண்பு நலன்களைச்
சிறப்பித்துப் பாடுவதற்கு முதன்மை அளித்துள்ளனர்.
இது போன்றே, இறைவன் குடிகொண்டிருக்கும் தலப்பெருமையைப்
பற்றி மிகுதியாகப் பாடாமல் இறைவனின் சிறப்புகளை மிகுதியும்
பாடியுள்ளனர்.
3)
தமிழ் பக்தி இலக்கிய
மரபில், நாயக - நாயகி
பாவம் (Bridal Mysticism) போற்றப்பட்டுள்ளது.
இதனைக் கிறித்தவப் புலவர்கள் பின்பற்றியுள்ளனர்.
விவிலியத்திலும் இந்த
மரபு காணப்படுகிறது.
நாயக - நாயகி
பாவம் என்பது
கடவுளைக் காதலனாகவும், தன்னைக்
காதலியாகவும்
உருவகப்படுத்திக் கொண்டு
பாடுவதாகும். 4) கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்
பல உருவகங்களாக அமைந்துள்ளன. பெத்லகேம் குறவஞ்சி,
முக்தி வழி அம்மானை முதலிய நூல்கள்
முற்றுருவகப்
பாங்கில்
(Allegory) அமைந்துள்ளன.
5) வேதநாயக சாஸ்திரியாரின்
படைப்புகள் பல ‘ஞான’ என்ற அடைமொழி பெற்று
விளங்குகின்றன. |