3.4 தேவமாதா அந்தாதி
பதினைந்திற்கும்
மேற்பட்ட கிறித்தவ
அந்தாதிகள் கிடைத்துள்ளன. விவிலியச்
செய்திகளை அடியொற்றி அந்தாதிகள் சில அமைந்துள்ளன.
இயேசு பெருமான், மற்றும்
மரியாள் வாழ்வைக் கூறும் அந்தாதிகள்
உள்ளன. கடவுளின் திருவருளைப் போற்றியும் நாடியும்
கிறித்தவ அந்தாதிகள்
அமைந்துள்ளன. வீரமாமுனிவர், அன்னை அழுங்கல் அந்தாதியைப் பாடியுள்ளார்.
ஜே. ஆர். அர்னால்டு எழுதிய
‘வெல்லை அந்தாதி'யும், துரைசாமி எழுதிய ‘வேதபுரியந்தாதி'யும்
குறிப்பிடத்தக்கவை. யூ.தாமஸ் என்பவர் ‘வேளையந்தாதி’ பாடியுள்ளார். இங்குப் பாடமாக இடம்
பெறும் தேவமாதா அந்தாதி
(1873) மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது. இவர் திருவருள் அந்தாதியையும்
(1873) எழுதியுள்ளார்.
• ஆசிரியர்
வேதநாயகம்
பிள்ளை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழில் முதல் தினத்தைப்
படைத்தவர்.
‘சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்’ என்னும் நூலையும்
வெளியிட்டுள்ளார். அறம் வலியுறுத்தும் ‘நீதிநூல்’ இவர்
படைப்பாகும். இவர்
பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார்; பெண்
கல்வியை வற்புறுத்தினார். இதற்கென ‘பெண் மதி மாலை’, ‘பெண்
கல்வி’, ‘பெண் மானம்’ முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
3.4.1 தேவமாதா அந்தாதி - அமைப்பும் பொருளும்
தேவமாதா
அந்தாதி நூறு
வெண்பாக்களால் ஆனது. இதனை ‘நூற்றந்தாதி’ எனலாம். நூலின்
தொடக்கத்தில்
காப்புச் செய்யுள் அமைந்துள்ளது.
இந்த நூலினை
இரண்டாகப் பகுக்கலாம்.
முதற்பகுதியில்
அமைந்த வெண்பாக்கள்
பல்வேறு பெயர்களில்
வழங்கும் மாதாவின்
பண்புகளைப் பேசுகின்றன. எஞ்சியுள்ள
பாக்கள் பொதுவாக
அன்னையின் அருளுக்காக ஏங்கும் பக்தனின்
இறை
வேண்டலாக அமைந்துள்ளன.
• மாதா
புகழ் பாடுதல்
மாதாவின் அருளை
வேண்டும் புலவர்,
புத்தமுதே, கதி நிலையே, சோதி உடு
சேகரியே, ஓதற்கு அரியாளே,
துறவோர் நாடும் சுகமே, மறை
புகழும் மாண்பாளே
எனப் பல்வேறு அடைமொழிகளால் மாதாவைச்
சிறப்பித்துப் பாடியுள்ளார். • குறை நினைந்து வேண்டுதல்
தன் குறைகளை
நினைத்து வருந்தி,
தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம்
வேண்டுகிறார்
புலவர். இப்பாடல்களில்
பக்திச் சுவை மிகுந்துள்ளது. என்னிடம் செல்வம் இல்லை;
நற்குணம் இல்லை;
ஞானமும் இல்லை;
ஆயினும் உன்னை
நம்பியிருக்கிறேன் என்று பாடுகிறார் புலவர்.
‘தானம்இலேன் சாந்தம் இலேன் சற்குணங்கள்
ஏதுமிலேன்
ஞானம் இலேனேனும் உனை நம்பினேன்’
(பாடல் -
24)
|
மேலும், தான்
பேசுவது பொய்,
செய்வது பாவம், ஏசுவது மறையை என்றும், என்னிடம் நலம்
இல்லை,
ஞானம் இல்லை, வினை நீக்க வலிமை இல்லை. ஆயினும்
தன்னைக் கைவிடாது ஏற்குமாறு வேண்டுகிறார்
புலவர்.
பேசுவதெல்லாம்
பொய்யே பேணுவதெல்லாம் பவமே
ஏசுவதெல்லாம் மறையை என் தாயே-காசினியில்
நீயே இரங்கி நெறியை அருளாயேல்
நாயேனுக்கு (உ)ண்டோ நலம்
(பாடல் -
81)
|
நலம் இல்லேன் ஞானம் இல்லேன் நை
வினையை நீக்கப்
பலம் இல்லேன் பண்பில்லேன் பாடும் - புலம் இல்லேன்
என் தாயே நீ தான் இனியரையே கைவிடேன்
என்றாயே ஆள்வாய் இனி.
(பாடல் -
82)
|
(காசினி = உலகம்; நாயேன் = நாயைப் போன்றவன்; நைவினை
= துன்ப வினை; புலம் = அறிவு) • இலக்கிய நயம்
தேவமாதா
அந்தாதி பக்திச்சுவை
மிகுந்து விளங்குவதைப் போன்றே, இலக்கியச் சுவையும் கொண்டு
விளங்குகிறது.
நீர் இல்லாமல்
தாமரை தோன்றாது;
வான் இல்லாமல் ஞாயிறும் நில்லாது.
மாதாவே நீ
பிறவாதிருந்தால்,
இயேசு பெருமான் யாரிடத்தில் அவதரிப்பார்
என வினவுகிறார்
வேதநாயகம் பிள்ளை.
யார்
இடத்தில் அம்மா நீ பண்டு பிறவாதிருந்தால்
ஆரிடத்தில் ஐயர் அவதரிப்பார்-நீரிடத்தில்
அல்லாது (உ)ண்டாமோ அரவிந்தம் வானில் அன்றி
நில்லாது சூரியனும் நேர்.
(பாடல் -
62)
|
(அரவிந்தம்
= தாமரை)
தாய்ப்பசு,
பொய்க் கன்றுக்கும்
பால் பொழியும்;
நான் உனக்கு மெய்க் கன்று. எனவே,
என்னைக்
கைவிடுதல் நீதியோ? எனக் கேட்கிறார் புலவர். மேலும், எங்கும் அகண்ட பரிபூரணராய்
விளங்கும் இயேசுவை எப்படி உன்
வயிற்றில் அடக்கினாய்; எனக்குப் புகல்வாயாக! எனவும்
நயமாகக் கேட்கிறார் வேதநாயகம் பிள்ளை. இவ்வாறு, மாதாவின்
புகழை இலக்கிய
நயத்தோடு பாடியுள்ளார் வேதநாயகம் பிள்ளை.
|