3.5 அமலகுரு சதகம்
சதகம் நூறு பாடல்களைக் கொண்ட
சிற்றிலக்கிய வகையாகும். ‘சதம்’ என்னும் வட சொல்லுக்கு ‘நூறு’
என்பது பொருள். இதன் காரணமாகவே இவ்வகை நூல்கள் ‘சதகம்’ எனப் பெயர் பெற்றன
என்பர்.
‘சதம்’ என்ற
சொல்லுக்கு ‘நிலைத்திருப்பது’,
‘இறுதி’ ஆகிய பொருள்களும் உண்டு. தமிழில்
இருநூறுக்கும் மேற்பட்ட சதக இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
கிறித்தவப் பொருண்மை கொண்டவையாகப்
பத்திற்கும் மேற்பட்ட
சதகங்கள் தமிழில் எழுந்துள்ளன. அர்னால்டு சதாசிவம்
பிள்ளை
எழுதிய இயேசு நாதர் திருச்சதகம் (1850),
மரிய சவேரிப்
பிள்ளை எழுதிய
மரியம்மன்
சதகம் (1872), மாசில்லாமணி இயற்றிய சத்திய சபை விளக்க சதகம் (1875)
முதலியன குறிப்பிடத்தக்கன. பேராசிரியர் தாவீது
அதியசநாதன் திருக்குமார சதகத்தை
எழுதியுள்ளார். இனி, ஜி.எஸ். வேதநாயகர்
இயற்றிய அமலகுரு சதகம் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.
• ஆசிரியர்
ஜி.எஸ். வேதநாயகர், ‘சற்குரு சதகம்’ என்னும் சதக நூலையும்
படைத்துள்ளார். மேலும்,
ஆடவர் கும்மி,
மாதர் கும்மி, நெஞ்சுருவு கட்கம், இருமை நெறிக்குறள்,
நித்தியானந்த காதல் உள்ளிட்ட
பல நூல்களையும் எழுதியுள்ளார். இவர் சென்னையில் திருச்சபை குருவாகப்
பணியாற்றியவர். இவரது
அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் இப்படைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
3.5.1 அமலகுரு சதகம் - அமைப்பும் பொருளும்
அமலகுரு சதகம்,
நீதி நூல்
வகையைச் சேர்ந்ததாகும். ‘அமல’என்பதற்குக் ‘குற்றமற்ற’ என்பது
பொருளாகும். (அமலம் = அ + மலம்; அ - எதிர்மறை முன்னொட்டு, மலம் - குற்றம்) குற்றமற்ற
குருவாகிய இயேசு
பெருமானிடம் வெளிப்படுத்தும் விண்ணப்பங்களாக அமைந்த நூறு
பாடல்களின்
தொகுப்பே இந்நூல். நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் அமைந்துள்ளது
பன்னிரு சீர்களையுடைய
ஆசிரிய
விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ‘அமலகுருவே’
என்பது ஈற்றுத் தொடராக இடம் பெற்றுள்ளது.
இந்நூலில் உள்ள
நூறு பாடல்களும்
ஏழு பிரிவாக அமைந்துள்ளன. அவை
1) சுத்த ஜீவியம்,
2) குழந்தைக் கிருத்தவர்கள் 3) ஆச்சரிய
அன்பு, 4)
உபதேச மயக்கம், 5) தெளிதல், 6)
அகோசர அன்பு,
7) விசுவாச வாழ்க்கை என்பவையாகும்.
இறைவனின்
அருள் வேண்டல், இறைப் பணியில் தமக்குள்ள உறுதியை
வெளிப்படுத்தல் ஆகியன இவர் பாடல்களில் முதன்மை பெறுகின்றன. திருச்சபையிலும் கிறித்தவர்களிடத்தும்
காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை
நீக்கும் நோக்கிலும் இவரது பாடல்கள் அமைந்துள்ளன. • துன்பத்தில் பங்கு வேண்டும்
எப்பொழுதும் எதிலும் இறைவனைக்
காண விரும்புகிறார் கவிஞர். இயேசுவின் அடையாளங்களை
எல்லாம் தாமும் பெற வேண்டும் எனக் கவிஞர்
கேட்கிறார். முள் முடியிலும், சாட்டையடியிலும்,
இகழ்ச்சியிலும், கொடுமையிலும் தமக்குப் பங்கு வேண்டும்
என இறைஞ்சுகிறார் கவிஞர். பாடல் இதோ.
கே(டு) ஒன்றும் செய்யாத அரசே! நீர் தரித்த முள்
கிரீடத்தில் பங்கு வேண்டும்
கீணர் உன் முகத்தினில் உமிழ்ந்த கொடுமையிலும்
பங்கு
கிடைக்கவும் அதிஷ்டம் வேண்டும்.
(பாடல் -
71)
|
(கீணர் = அற்பர்)
• பக்தி
மரபு
இறைவனின் திருவடிகளில்
அடியாரின் தலை ஒன்றுவதைச் சைவ சமயம் சிறப்பிக்கிறது. ‘தாடலை’ (தாள்
+ தலை) என்னும் இம் மரபைத் தழுவி, கிறித்துவின் திருவடிகளைத் தம் தலைமேல்
சுமக்க
விரும்புகிறார்
கவிஞர். இயேசுவின்
கால்களில் அடிக்கப்பட்ட இரும்பு
ஆணிகள்
தன் தலையிலும்
ஊடுருவுவதாகப்
பாடுகிறார் கவிஞர்.
மேலும், இந்த
ஏழையின் வாயிலாக
நீர்
செய்கிற நற்பணிகளால் ஏற்படும் புகழ்
உமக்கே உரியதாக
வேண்டும். தீயிலிட்ட இரும்பு
தீயின்
சாயலைப் பெறுவதைப்போல் நான் உன் சாயலைப்
பெற வேண்டும். இதனை,
கலை மூண்ட இரும்புபோல் உன்சாயல்
இலங்க இக்
கசடன் காணாது ஒழியவும்.
(பாடல்
- 81)
|
என்று கூறுகிறார்.
'செடியாகிய உம்மில் கொடியாக நான் விளங்கிக்
கனி தர என்னை உருவாக்கும்' என்று
கேட்கும் கவிஞர்,
உனில் உறும் கொடியாக உன்சாரம்
பெற்று என்றும்
உன்னதக்
கனி பெருகவும்
உடைத்து என்தன் இதயத்தை உன் சித்தப்படி வரைந்து
உருவாக்கும் அமலகுருவே.
(பாடல் -
81)
|
என அமலகுருவிடம் வேண்டுகிறார்.
மேலும், விவிலியச்
செய்திகளை
நேரடியாகவும் உருவகங்களாகவும்
நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர்.
|