தன் மதிப்பீடு : விடைகள் - I
6. மிகுராசு மாலையின் அரங்கேற்ற வரலாற்றைக் கூறுக.

ஆலிப்புலவர் தமிழில் மிகுராசு மாலை என்னும் சிற்றிலக்கியம் இயற்றினார். ஆனால் அதனை அரங்கேற்றம் செய்விக்க நெல்லை, காயல் முதலான பலவூர் இஸ்லாமியக் குடிமக்கள் தயாராக இல்லை. அந்நிலையில் கோட்டாறு வந்து தன் மாணவர் சிவலிங்கம் என்பாரின் உதவியுடன் அவ்வூரில் இருந்த செல்வந்தரும் அந்தகருமான பாவாடைச் செட்டியாரின் தலைமையில் கைக்கோளர் சமுதாயத்தவர் முன்னிலையில் அரங்கேற்றினார். புலவர் ஒவ்வொரு செய்யுளையும் உரக்கப்பாடி உரை நிகழ்த்தி வந்தார். நபிகள் பெருமானார் புறாக் மின்பரி ஏறி ஜெருசலேம் தேவலாயத்தை அடைந்தார். அங்கு, தொழுவதற்காக இறங்கி, தான் ஏறி வந்த புறாக் என்னும் மின்பரியைக் கட்ட அங்கிருந்த தூணில், இறைவனை எண்ணித் தன் விரலை வைத்தார். என்றும், அத்தூணில் துளை ஏற்பட்டது என்றும் வரும் பகுதியைப் பாடும்போது விண்ணில் பேரொளி தோன்றியது. இவ்வொளியால் அந்தகரான பாவாடைச் செட்டியார் பார்வையைப் பெற்றார். இதற்குப் பின் ஆலிப்புலவர் நாயகப் பேரொளியைக் கண்ட கண்களால் வேறு எதனையும் காண மாட்டேன் எனக் கண்களைக் கட்டிக்கொண்டு தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்து மறைந்தார். என்று மிகுராசு மாலையின் அரங்கேற்ற வரலாறு அறியக் கிடக்கிறது.

முன்