4.1 இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கியப் பரப்பினைக் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுள் சிற்றிலக்கியங்கள் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. இவற்றை

1) தமிழ் மரபு வழிப்பட்ட சிற்றிலக்கியங்கள்
2) புதுவகைச் சிற்றிலக்கியங்கள்
3) மக்கட் பிரபந்தங்கள்

என இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் பாகுபாடு செய்கின்றனர்.

4.1.1 தமிழ் மரபு வழிப்பட்ட சிற்றிலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கிய வகைமை வளர்ச்சி வழி நின்று, பன்னிருபாட்டியல் முதலான சிற்றிலக்கிய இலக்கண நூல்கள் கூறும் முறையில் அருளிய சிற்றிலக்கியங்களைத் தமிழ் மரபு வழிப்பட்ட சிற்றிலக்கியம் என்பர். இவ்வகையில் பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, ஆற்றுப்படை, அந்தாதி, மாலை முதலிய பிரிவுகளில் கணக்கற்ற சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளதைக் காணலாம்.

4.1.2 புதுவகைச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கிய இலக்கண நூல்கள் கூறும் இலக்கணத்தைப் பின்பற்றாமல், அறபு மொழிச் செய்யுள் இலக்கண மரபைத் தழுவி, தமிழ் யாப்பு வகையில் புனையப்பட்ட சிற்றிலக்கியங்கள் புதுவகைச் சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை கிஸ்ஸா, நாமா, மசலா, படைப்போர், முனாஜாத்து என ஐவகைக் கட்டமைப்பில் அமைகின்றன.

கிஸ்ஸா இலக்கியம் இருபதும், நாமா இலக்கியம் இருபத்தைந்தும், மசலா இலக்கியம் நான்கும், முனாஜாத்து இலக்கியம் இருபதுமாக மொத்தம் எண்பத்துமூன்று இலக்கியங்களை இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் தந்துள்ளனர்.

4.1.3 மக்கட் பிரபந்தங்கள்

சாதாரண மக்களிடம் வழக்கிலிருக்கும் திருப்புகழ், கீர்த்தனை, அம்மானை, ஏசல், சிந்து, கும்மி, தாலாட்டு, பாட்டு என மக்கட்பாடல் வகையில் அமைந்த இலக்கியங்களை மக்கட் பிரபந்தம் என்பர். இவ்வகைப் பொருளில் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் மிகுதியான சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர்.