4.6 தமிழ் மரபு

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் மண்ணின் மைந்தர்கள் ஆவர். தமிழ் மரபிற்கு உரியவர்கள் ஆவர். அறபு நாட்டு மண்ணிற்கும் மரபிற்கும் உரிய இஸ்லாமியத்தைக் காப்பியங்களாகவும் சிற்றிலக்கியங்களாகவும் அவர்கள் புனைந்த போதிலும் அவற்றில் தமிழ் மண்ணையும் மரபையும் காட்டத் தவறவில்லை. மிகுராசு மாலையில் அத்தகைய தமிழ் மரபுகள் மிகப் பரவலாக அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் காண்போம்.

4.6.1 ஆலாத்தி எடுத்தல்

தமிழ் மக்கள், பிறருடைய பார்வை தம்மேல் படுவதால் ஊறு நேரும் என நம்பினர் - அஞ்சினர். இதனைத் தீர்ப்பதற்கும் அணங்குகள் அணுகாமல் இருப்பதற்கும் சங்ககாலப் பெண்கள் நெய்யுடன் வெண்கடுகு பூசி நீராடினர். இவ்விருபதாம் நூற்றாண்டில் இந்நம்பிக்கை உலகெல்லாம் பரவியுள்ளதாக தமிழர் சால்பு  என்னும்  நூலில்  சு. வித்தியானந்தன் குறிப்பிடுகின்றார். இக்காலத்தில் இவ்வகைக் கண்ணேறு கழிப்பதற்குத் தட்டில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் பெய்து அதில் வெற்றிலையைக் கிள்ளியிட்டுச் சுற்றி எறிதல் மரபாக இருக்கிறது. இதனை ஆலாத்திச் சுற்றி எறிதல் என்பர். இத்தகைய ஆலாத்தி சுற்றும் மரபை மிகுராசுமாலையில் காணலாம்.

 

நபிகள் பெருமானார் தம் மிகுராசுப் பயணத்தில் பைத்துல் முகத்தீசில் மின்பரியைக் கட்டிய பின்னர் விண் தலத்திற்கு ஏறிச்செல்லும் வகையில் வானவர்கள் ஏணி ஒன்றை இறக்கினர். நபிகள் பெருமானாரை, பிஸ்மில்லாஹ் என இறைவனின் திருநாமத்தால் தொடக்கம் செய்து வலக்கால் வைத்து ஏறிச் செல்லுமாறு வானவர் பணித்தனர்.

செயல் தொடக்கத்தில் வலது கால் வைத்துத் தொடங்கும் மங்கல மரபு தமிழகத்திற்கு உரியது.

நபிகள் பெருமானார் தமது வலது காலை வைத்து முதற்படியில் ஏறினார். அப்பொழுது பூரண நிலவாகத் திகழும் முகம்மது நபியின் திருப்பாதங்களைச் சொர்க்கத்தில் உள்ள துகிலினைக் கொண்டு தேவமாதர் ஆயிரம்பேர் தம் கரங்களால் ஒற்றி எடுத்து, பின் ஆலாத்தி எடுத்தனர்.

வலக்காலதை முன்னிற்படி வைத்தே றின தப்போ
தலமாகிய சொர்க்கப்பதி தனிலேயுள துகிலான்
அலமாமதி முகம்மது நறையோடு துடைத்தே
யலராலிமை யவராயிர ராலாத்தி யெடுத்தார்
(செய். 188)

இவ்வாறே தொடர்ந்து நபிகள் பெருமானார் ஒவ்வொரு படியிலும் ஏறிச் செல்லச் செல்ல, ஈராயிரம் மூவாயிரம் என, தேவ மாதர் குழுமி நின்று, ஆலாத்தி எடுத்ததாக மிகுராசு மாலை குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் மிகுராசு மாலைச் சிற்றிலக்கியப் பாடம் பயில்வாருக்குப் பயனுள்ள பரந்த இஸ்லாமிய சமய அறிவை - தெளிவைத் தரவல்லதாய் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.