5.1 இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர் சிலர்

தக்கலை பீர் முகம்மது அப்பா தென்காசியில் பிறந்து கேரள மலைப் பகுதியில் ஆன்மீகத் தவம் மேற்கொண்டார். இவர் தவமிருந்த பகுதி பீர்மேடு என்று இன்றும் வழங்கப்படுகிறது. கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் இப் பீர்மேடு அமைந்துள்ளது. இவர் அங்கிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றி மெய்ஞ்ஞானம் பரப்பி, இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலைக்கு வந்தார். வாழ்வின் இறுதிவரை அங்குத்தங்கி மெய்ஞ்ஞானம் போதித்து இருபத்தைந்து மெய்ஞ்ஞான நூல்களை அருளியுள்ளார். இவற்றில் பதினெண்ணாயிரம் செய்யுட்கள் அடங்கியுள்ளன.

 • பெரிய நூகு லெப்பை ஆலிம்
 • பெரிய நூகு லெப்பை ஆலிம் காயல்பட்டினத்தில் பிறந்து நாஞ்சில் நாட்டில் உள்ள பூவாறு என்னும் ஊரில் கி.பி 1741 இல் அடங்கப் பெற்றவர் ஆவார். 26 படலங்களும் 910 செய்யுட்களும் கொண்ட வேதபுராணம் என்னும் மெய்ஞ்ஞான நூல் தந்துள்ளார்.

 • சேகுனா செய்கு உதுமான்
 • கி.பி 1699 முதல் 1784 வரை வாழ்ந்தவர் சேகுனா செய்கு உதுமான் ஆவார். கடையநல்லூரில் வாழ்ந்தவர். இவர் அருளிய ஞானப்பிரகாச நவமணி மாலை என்னும் மெய்ஞ்ஞான நூல் சிஸ்தியா என்னும் ஞானபீடத் தத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. இதனில் உள்ள சிவராமங்கலம் முகம்மது இப்ராஹிம் அருளிய கப்பல்பாட்டு சைவ சித்தாந்தச் சாயலைக் கொண்டுள்ளது.

 • கோட்டாறு ஞானியார் சாகிப்
 • கோட்டாறு ஞானியார் சாகிப், செய்கு முகம்மதலி என்னும் இயற்பெயர் உடையவர் ஆவார். மலுக்கு முகம்மதலி என்றும் அழைக்கப்பட்டார். கி.பி 1754 இல் பிறந்து 1794 இல் மறைந்தார். 1500 திருவிருத்தப் பாக்களைக் கொண்ட மெய்ஞானத் திருப்பாடற்றிரட்டு என்னும் நூல் அருளி உள்ளார்.

 • மெய்ஞ்ஞானி பஷீரொலி
 • நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில் கி.பி 1728 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முஹயித்தீன் என்பதாகும். இளமையில் ஏற்பட்ட அம்மை நோயால் கண் பார்வையை இழந்தார். பெற்றோர் ஆறாத் துயரடைந்தனர். இவர்களின் குருவாக விளங்கிய கோஸ்முகம்மது பார்வையற்ற அந்தக் குழந்தையைத் தன் மகனாகக் கொண்டார். முதுகில் எழுதப்பெற்று, தமிழ் இலக்கண இலக்கியங்களும் திருமறையாகிய அல் குர் ஆனும் கற்றார். கடையநல்லூர் மெய்ஞ்ஞான சற்குரு ஷெய்கு உதுமான் ஒலியுல்லாவிடம் தீக்கை பெற்றுப் பஷீர் என்னும் பெயர் பூணப் பெற்றார். இவர், அருஉரு வென்றுரை விண்ணப்பம், இல்லல் லாஹ்கு (கப்பல் பாட்டு) போன்ற எட்டு மெய்ஞ்ஞான இலக்கியங்களை அருளியுள்ளார். இவர் கி.பி 1802 ஆம் ஆண்டு மறைந்தார்.

  இவர்களைத் தவிர, தொண்டியில் பிறந்து சென்னையில் மறைந்த குணங்குடி மஸ்தான் சாகிப் (1788 - 1835), தொண்டி மோனகுரு மஸ்தான் சாகிப் (1865 - 1919) போன்றோர் அருளிய மெய்ஞ்ஞானப் பாடல்கள் தமிழ் மெய்ஞ்ஞானச் சாயலுடன் அமைந்த தன்னேரில்லாத தனிச்செல்வம் எனலாம்.

  பெண்பால் மெய்ஞ்ஞானியர்களான கீழ்க்கரை ஆசியா உம்மா, தென்காசி ரசூல்பீவி, கச்சிப்பிள்ளை அம்மாள் போன்றோரும் அறியக் கிடக்கின்றனர். இவர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியை இன்றமிழில் அருளிய நங்கை நல்லார் ஆவார்.

  இவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்டுப் பயிலும் மெய்ஞ்ஞான இலக்கியங்களுக்குள் பெரிய நூகு லெப்பை ஆலிம் அருளிய வேதபுராணம் என்னும் மெய்ஞ்ஞான இலக்கியத்தினை மட்டும் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் என்னும் இப்பாடத்தில் நோக்குவோம்.