6.1 இசுலாமிய இலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பு ஒன்பது நூற்றாண்டுக் கால வரலாற்றினைக் கொண்டது. இந்நீண்ட நெடும்பரப்பில் காணக்கிடைக்கும் இலக்கியங்களைக் கால வகையில், மூவகையாகப் பாகுபாடு செய்கின்றனர். அவை:

அ) தொடக்கக் கால இலக்கியங்கள்
ஆ) இடைக்கால இலக்கியங்கள்
இ) இக்கால இலக்கியங்கள்

6.1.1 தொடக்கக் கால இலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணக் கிடைக்கும் முதல் நூல் பல்சந்தமாலையாகும். இதன் காலம் கி.பி 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். பல்சந்தமாலைக் காலம் முதல் சீறாப்புராணம் (கி.பி 1703) தாண்டி முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் வரையுள்ள இலக்கியங்களைத் தொடக்க கால இலக்கியங்கள் என்பர். குறிப்பாக ஜவ்வாதுப் புலவரின் பிறப்பு (1745) வரை எனலாம். இக்காலத்தில் காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும், பள்ளு முதலான மக்கட் பிரபந்தங்களும் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வகை இலக்கியங்கள் யாவும் நபிகள் பெருமானாரையும் நபிக் குடும்பத்தவர்களையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இஸ்லாமியப் பார்வையில் நபிபிரானும் நபிகளார் குடும்பமும் கண்ணியத்திற்கு உரியவர்கள் ஆவர்.

6.1.2 இடைக்கால இலக்கியங்கள்

கி.பி 17,18ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த இலக்கியங்களை இடைக்கால இலக்கியங்கள் என்பர். இஸ்லாம் சமயச் சான்றோர்களையும் பாடும் வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு திருப்புமுனையைக் கண்டது. இத்திருப்புமுனையைக் காட்டியவர் முகியித்தீன் பிள்ளைத் தமிழ் படைத்த ஜவ்வாதுப் புலவர் ஆவார். இந்நூல் ஆர்க்காடு வாலாஜா முகம்மது அலிகான் (கி.பி 1723 - 1795) அவையில் அரங்கேறியது.

கி.பி 1807 - 1827 வரையுள்ள 20 ஆண்டுக் கால இடைவெளிக்குள் 9 காப்பியங்களை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளனர்.

6.1.3 இக்கால இலக்கியங்கள்

கி.பி 19ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய நாள் வரை வந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இக்கால இலக்கியங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இக்காலம் என்பது நீண்ட நெடுங்காலக்கட்டத்தை உள்ளடக்கியது என்பதால், நம்நாடு தன்னாட்சி (1950) பெற்ற காலம் வரை வந்துள்ள இலக்கியங்களை ஐரோப்பியர் ஆட்சிக்கால இலக்கியங்கள் அல்லது விடுதலை வேள்விக் கால இலக்கியங்கள் என்றும் இதற்குப்பின் உள்ள காலங்களில் காணும் இலக்கியங்களை மறுமலர்ச்சிக் கால இலக்கியங்கள் என்றும் பாகுபாடு செய்து கொண்டு மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் காண்பர். இக்கால இலக்கியங்களைச் செய்யுள், உரைநடை, நாடகம் அறபுத்தமிழ் இலக்கியங்கள் எனப் பாகுபாடு செய்வர். பாட அளவு கருதி இங்குச் செய்யுள், உரைநடை இலக்கியங்கள் பற்றி மட்டும் காண்போம்.

இங்கு ஒரு கருத்தைத் தெளிவாக்க வேண்டும். முந்தைய காலப்பிரிவுகளில் இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் தொண்டு செய்யும் வகையில் நூல்களைப் படைத்தனர். இக்கால இஸ்லாமிய எழுத்தாளர்கள் இஸ்லாமிய இலக்கியம் மட்டுமன்றிப் பொதுவாகவும் எழுதி வருகின்றனர். ஆக, இஸ்லாமிய இலக்கியம் என்பதோடு இஸ்லாமியர் தமிழ் இலக்கியம் என்பதையும் சேர்த்தே இங்குப் பார்க்க விருக்கிறோம்.