1.3 புனைகதை இலக்கியம்

நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டோ, அவற்றை ஒட்டியோ கற்பனை கலந்து புனையப் பெறுவன புனைகதைகளாகும். இவை வருணனைப் பாங்கில் அமையும். பெரும்பாலும் எழுத்தாளனே முன்னின்று கதாபாத்திரங்களின் உணர்வையும் செயலையும், நடைபெறும் செயல்களையும் எடுத்துரைப்பதாக எழுதப்பெறுவதாகும். சிறுபான்மை, ஒரு கதாபாத்திரமோ, ஒன்றற்கு மேற்பட்டனவோ தத்தம் நோக்கில் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதாகப் புனையப் பெறுவதும் உண்டு. இது உரைநடையின் செல்வாக்கால் தோன்றியது.

புனைகதையானது சிறுகதை, புதினம் என இரு பிரிவுகளாக அமையும். அவற்றின் இலக்கணங்களையும், வளர்ச்சி வரலாற்றையும் வகைகளையும் குறித்துக் காண்போம்.

1.3.1 சிறுகதை

புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி. சிறுகதையின் இயல்பு, சிறுகதை வளர்ச்சி ஆகியன குறித்து ஓரளவிற்கு இங்குத் தெரிந்து கொள்வோம்.


 • சிறுகதையின் இயல்பு

 • (1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல்

  (2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல்.

  (3) ஓரிரு நிகழ்ச்சிகளில் அமைதல்.

  (4) ஒரு முறை அமர்ந்து அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படிக்கத் தக்கதாய் விளங்குதல்.

  (5) தொடக்கமும் முடிவும் சுவையுடன் விறுவிறுப்பாகக் குதிரைப் பந்தயம்போல் அமைதல்.

  (6) வெற்றெனத் தொடுக்கும் சொல்லோ நிகழ்ச்சியோ அமையாதிருத்தல்.

  (7) சுருங்கச் சொல்லலும் சுருக்கெனச் சொல்லலும் பெற்றிருத்தல்.

  (8) உரையாடல் அளவோடிருத்தல்.

  (9) கண்முன்னே நேரே நடப்பது போன்ற உணர்வுத் தூண்டலை ஏற்படுத்துதல்.

  இவை சிறுகதையின் இயல்புகளாகும்.

 • சிறுகதை வளர்ச்சி
 • தொல்காப்பியத்தில் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி’ என வருவது சிறுகதையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் வரும் தேவந்தி கதை, மணிமேகலையில் இடம் பெறும் ஆபுத்திரன், ஆதிரை, காயசண்டிகை ஆகியோரின் கதைகள் ஆகிய யாவும் சிறுகதைத் தன்மையில் அடங்குவனவேயாகும். சீவகசிந்தாமணியின் இலம்பகம் (பிரிவு) ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை எனலாம். பெரிய புராணமும் பல சிறு, சிறு கதைகளின் தொகுப்பு என்று கூறலாம்.

  நாட்டுப்புறக் கதைகளும் தொன்றுதொட்டு இடம்பெற்று வருவனவாகும். குழந்தைகளை உறங்க வைக்கவும், நன்னெறிப்படுத்தவும், பொழுதுபோக்கவும் காலங்காலமாக உறுதுணையாக விளங்குவன சிறுகதைகளே எனலாம்.

  தமிழில் மதன காமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை போன்றன இருப்பினும், மேனாட்டார் வருகைக்குப் பின்னரே நறுக்குத் தெறித்தாற் போன்ற சிறுகதைகள் தோன்றலாயின. முன்பிருந்த கதைகள், புராணம், அரச வரலாறு பற்றியனவாகவும், பல நிகழ்ச்சிகள் கொண்ட நெடுங்கதைகளாகவும் விளங்கின; இயற்கை யிகந்த (இயற்கையைக் கடந்த) நிகழ்ச்சிகளும் அவற்றில் உண்டு. ஆனால் பிற்காலத்து எழுந்த சிறுகதைகள் சாமானியர்களையும், நடைமுறை வாழ்வையும் பற்றியனவாக அமைந்தன; வருணனையுடையனவாகவும் உரையாடல் பாங்குடையனவாகவும் விளங்கலாயின. இயற்கை யிகந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

  தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை, வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை என்பதாகும். இவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் என்னும் சிறுகதைத் தொகுதி எட்டுச் சிறுகதைகளைக் கொண்டது. தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் இவர்.

  மணிக்கொடி இதழ் சிறுகதைகளை வளர்த்த பெருமைக்குரியது. புதுமைப்பித்தன், சிறுகதை மன்னன் எனப் போற்றப் பெறுபவராவார். காஞ்சனை, அகல்யை, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்றன இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும். பேச்சுத் தமிழ், நனவோட்ட உத்தி, நடப்பியல் ஆகியவற்றைச் சிறுகதையில் புகுத்திய பெருமை இவரையே சாரும். கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, ஜெயகாந்தனின் ஒருபிடி சோறு, கோவி.மணிசேகரனின் காளையார் கோயில் ரதம், ஜெகசிற்பியனின் நொண்டிப் பிள்ளையார், சு.சமுத்திரத்தின் காகித உறவுகள், தி.ஜானகிராமனின் சக்தி வைத்தியம் போன்றன குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும்.

  இக்காலத்தில் சிறுகதைகள் வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் எழுதப் பெற்று வருகின்றன. இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளின் எண்ணிக்கை (ஆண்டொன்றிற்கு) ஐயாயிரம் கதைகளுக்கு மேற்பட்டவையாக அமைகின்றன. இன்றைய இதழ்களில் ஒருபக்கச் சிறுகதைகள், அரைப்பக்கச் சிறுகதைகள், கால்பக்கச் சிறுகதைகள் என இவற்றின் வடிவம் வேறுபட்டு இடம் பெறுவதையும் காணமுடிகின்றது. கதாபாத்திரம் தானே பேசுவது போலவும், பின்னோக்கு உத்தியில் அமைவதாகவும் பல கதைகள் வெளிவருகின்றன.

  1.3.2 புதினம்

  உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையே நாவல் அல்லது புதினம் எனப்படுகின்றது. இது பல அத்தியாயங்கள் (பிரிவுகள்) கொண்டது. இதன் இயல்பும் வளர்ச்சியும் வகையும் குறித்துக் காண்போம்.


 • புதினத்தின் இயல்பு

 • (1) பலருடைய வாழ்வில் நிகழ்வனவற்றை ஒருவருடைய வாழ்வில் நிகழ்வனவாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் ஒருமுகப் படுத்தியும் உருவாக்கப்படுவது.

  (2) எண்ணற்ற கதை நிகழ்வுகளையுடையது.

  (3) காலத்தால் விரிந்த நிகழ்ச்சிகளைக் கொண்டது.

  (4) பல கதைப் பாத்திரங்களைக் கொண்டது.

  (5) பல்வேறு இடப் பின்னணிகளையுடையது.

  (6) கதைப் பின்னலில் ஒருமைப்பாடுடையது.

  (7) முதன்மைப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் எனப் பாத்திரப் பாகுபாடு உண்டு. நிலைமாந்தர் என்பது மாறாத இயல்புடைய பாத்திரம்; அலைமாந்தர் மாறும் இயல்புடைய பாத்திரம்.

  (8) உரையாடல் வேண்டிய அளவிற்கு அமைந்திருக்கும்.

  (9) வருணனைகள் நிறைந்திருக்கும்.

  (10) படைப்பாளர் இடையிடையே கதைமாந்தர், கதை நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பர்.

  (11) கதை மாந்தரே அல்லது கதை மாந்தர்களே தம் கதையைச் சொல்வதாக அமைக்கப்படுவதும் உண்டு.

  (12) மையக் குறிக்கோள் ஒன்றும், இடையிடையே பல அறவுரைகளும் உடையதாக அமையும்.

  (13) உரைநடையில் அமைந்த காப்பியம் என இதனைக் கருதுதல் தகும்.

  (14) புதினப் படைப்பாளி, தம் படைப்பில் ஏதேனும் ஒரு கதைப் பாத்திரமாக அமைந்திருத்தலும் உண்டு.

  (15) தொழில்கள், வாழ்வியல், நாகரிகம், பண்பாடு, சமுதாய நிலை, அரசியல் நிலை எனப் பல்வேறு கூறுகள் புதினத்தில் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ புலப்படுமாறு அமைந்திருக்கும்.


 • புதினத்தின் வளர்ச்சி
 • நாவல்ல (Novella) என்ற இலத்தீன் சொல்லே, ஆங்கிலத்தில் நாவல் எனப்படுவதாயிற்று. இது நவீனம் எனப்பட்டு, புதினம் எனப் பெயர் பெறுவதாயிற்று.

  சாமுவேல் ரிச்சர்ட்சன் 1740-இல் ஆங்கிலத்தில் எழுதிய பமிலா என்ற நாவலே உலகின் முதல் நாவலாகும். கி.பி.1879-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழில் எழுந்த முதல் புதினமாகும். இரண்டாவது தமிழ்ப் புதினம் பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் என்பதாகும் (கி.பி.1896). மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பெண் கல்வியை வலியுறுத்துவது. வேதநாயகம் பிள்ளை தமிழ் நாவலின் தந்தை எனப்படுகின்றார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதினங்கள் தோன்றலாயின. அவற்றைப் பலவாக வகைப்படுத்தி அறியலாம்.


 • புதின வகைகள்
 • துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், வட்டாரப் புதினங்கள் முதலியன.

  1. துப்பறியும் புதினங்கள்

  மர்ம நாவல் எனப்படுவன இவை. எதிர்பார்ப்பு, பரபரப்பு, விறுவிறுப்பு என அமைந்து எதிர்பாராத திருப்பங்களும் முடிவுகளும் கொண்டு விளங்குவன.

  ஆரணி குப்புசாமி முதலியாரின் இரத்தினபுரி இரகசியம், வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் கும்பகோணம் வக்கீல், தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், தமிழ்வாணனின் கருநாகம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள், சுஜாதாவின் கொலையுதிர் காலம், ராஜேஷ்குமாரின் ஓர் அழகான விபரீதம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள் இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும். இவை கிரைம் நாவல் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கென்று தனித்தனி மாத இதழ்களும், மாதம் இருமுறை இதழ்களும் உள்ளன.

  2. சமூகப் புதினங்கள்

  சமுதாயச் சிக்கல், சீர்திருத்தக் கருத்துகள், பிரச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை அமையும்.

  நாரண துரைக்கண்ணனின் உயிரோவியம், கல்கியின் தியாகபூமி, அலைஓசை, அகிலனின் பாவை விளக்கு, கோவி.மணிசேகரனின் யாகசாலை, ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மு.வரதராசனாரின் கயமை, அகல்விளக்கு, கள்ளோ காவியமோ, கரித்துண்டு முதலான புதினங்கள், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன், லட்சுமியின் அத்தை, சிவசங்கரியின் நண்டு என்பவையெல்லாம் இவ்வகையின.

  3. வரலாற்றுப் புதினங்கள்

  இந்திய வரலாறு, தமிழக வரலாறு ஆகியவற்றின் வரலாற்றுக் குறிப்புகளை அடியொற்றிப் புனைந்துரைக் கதை நிகழ்ச்சிகளும் கதைப் பாத்திரங்களும் கலந்து புனையப் பெறுவன இவை.

  சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி, தமிழின் முதல் வரலாற்றுப் புதினமாகும். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, ஜலதீபம், யவனராணி, அகிலனின் வேங்கையின் மைந்தன், கோவி.மணிசேகரனின் செம்பியன் செல்வி, விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, கலைஞர் கருணாநிதியின் தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் போன்றனவை இவ்வகைமைக்குத் தக்க சான்றுகளாகும்.

  4. மொழிபெயர்ப்புப் புதினங்கள்

  காண்டேகரின் மராத்தி நாவல்களைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களும், வங்காளம், இந்தி, குஜராத்தி நாவல்கள் பலவற்றைத் துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத் போன்றோரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் சுந்தர ராமசாமியால் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  5. வட்டாரப் புதினங்கள்

  தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றின் செல்வாக்கோடு, மண்வாசனை கமழ எழுதப் பெறுவன வட்டாரப் புதினங்களாகும்.

  தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, வே.சபாநாயகம் அவர்களின் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது, பெருமாள் முருகனின் ஏறுவெயில், தமிழ்ச்செல்வியின் மாணிக்கம், கண்மணி குணசேகரனின் அஞ்சலை போன்றன இவ்வகையில் அமைந்தனவாகும்.

  நாவல்கள் மாலைமதி, ராணிமுத்து முதலான பருவ இதழ்களிலும் வெளியிடப் பெறுகின்றன. வானதி பதிப்பகம் முதலானவற்றில் தனி நூல்களாகவும் இவை வெளிவருகின்றன.

  நாவல்களில் அளவு குறைந்தவை குறுநாவல்கள் எனப்பெறுகின்றன. இவையும் நாவல்களுக்குரிய இலக்கணங்களைக் கொண்டு திகழ்கின்றன.

  இவை புதினம் பற்றிய செய்திகளாகும்.