1.4 கட்டுரை இலக்கியம்

ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி உரைப்பது கட்டுரையாகும். மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் இவ்வகை எழுந்தது. இது உரைநடையில் அமைவது. இதனைப் பின்வரும் வகைகளாகப் பகுத்துக் காணலாம்.

  • தன் வரலாறு / வாழ்க்கை வரலாறு
  • உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும் என்பன தன் வரலாற்றில் அடங்குவனவாகும். இவர் இயற்றிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்பது அவர்தம் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைப்பதாகும்.

  • ஆராய்ச்சி நூல்கள்
  • இலக்கியங்களின் கருத்துகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், காலங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றை வெளியிடும் முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்றனவும் ஆராய்ச்சி நூல்களாகும். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காவிய காலம், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்மணிகள் போன்றன இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.

    இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து வெளியிடுகின்றது. இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இன்ன பிற நிறுவனங்களின் கருத்தரங்குகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன.

  • விளக்க நூல்கள்
  • செய்யுள் நூல்களுக்கு விளக்கம் அளித்தல், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் அணுகுதல், பல கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உரைத்தல் ஆகியன இவ்வகை நூல்களின் இயல்பாகும்.

    திரு.வி.கலியாணசுந்தரனாரின் சைவத்தின் சாரம், முருகன் அல்லது அழகு, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இராமலிங்க சுவாமிகளின் திருவுள்ளம் போன்றன இவ்வகை நூல்களாகும்.

  • பயண இலக்கிய நூல்கள்
  • வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன் எழுதுதல் இவ்வகை நூல்களின் இயல்பாகும். கற்போர், அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்வையும் அனுபவத்தையும் பொது அறிவையும் பெறுதல் இதன் பயனாகும்.

    வீராசாமி ஐயரின் காசி யாத்திரை என்பது தமிழில் வெளிவந்த முதல் பயண இலக்கியமாகும். ஏ.கே.செட்டியார் பயண இலக்கிய முன்னோடியாவார். மணியனின் நான் கண்ட சில நாடுகள், உலகம் சுற்றினேன் என்பனவும், மு.வரதராசனின் யான் கண்ட இலங்கை, நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய பிரிட்டனில், புதிய ஜெர்மனியில், அங்கும் இங்கும், நான் கண்ட சோவியத் ஒன்றியம் என்பனவும், சோம.லெட்சுமணனின் லண்டனில் லக்கி என்னும் நூலும் இன்ன பிறவும் பயண இலக்கிய நூல்களாகும்.

    லேனா தமிழ்வாணன், சிவசங்கரி போன்றோர் பருவ இதழ்களில் தொடர்ந்து தங்கள் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு பலவகைகளாகவும் கட்டுரை இலக்கியத்தை அணுகலாம். இவற்றைப் படிப்பதன்வழி நல்ல கருத்துகளைச் சுவை ததும்ப வகை தொகைப்படுத்தியும், பத்தி பிரித்தும் சிறந்த நடையில் எடுத்துரைக்கும் படைப்பிலக்கியப் பயிற்சியைப் பெறவியலும்.