|
|
|
2.1 மரபுக் கவிதை |
|
|
|
கவிதை வகைமைகளில் தொன்மையானதாக
அறியப்படுவது
மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள்
மரபுக் கவிதை
இயற்றும் முறையை எடுத்துரைக்கத்
தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை
சந்தமும்
(Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம்
என்பது
அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி
வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள
ஓசையும் அழுத்தமில்லாத
ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை
பிறக்கிறது.
மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு
பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை
படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின்
ஓசை நயத்துக்குக் காரணமான
சொற்களை அளவிட்டுச் சீர் எனக்
குறிப்பிட்டனர்.
குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும்,
அசையால்
சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே
அமைகின்றன. சீர்களுக்கு இடையிலான
ஓசை
தளை
எனப்படுகின்றது. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால்
பா வகைகள்
அமைகின்றன.
சீர்களின் முதலெழுத்து ஒற்றுமை - மோனை; இரண்டாம்
எழுத்து ஒற்றுமை
- எதுகை; இறுதியில் அமையும் ஒலி
ஒற்றுமை - இயைபு; சொல், பொருள் ஆகியவற்றில் காணும்
முரண்பாடு - முரண்; ஓர் அடியின் எழுத்தோ அசையோ சீரோ
அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதி - எனப்
பாடல்கள் தொடுக்கப்படுவது தொடை எனப்படும். அடுத்த
பாடத்தில் (மரபுக் கவிதை வடிவம்) இவை குறித்து விரிவாக
அறிந்து கொள்ளலாம்.
சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில்
தமிழிலக்கிய நெடும்பரப்பில்
செங்கோல் செலுத்தி வந்த பெருமை,
மரபுக்கவிதைக்கே உரியது.
மரபுக் கவிதையைப் பா வகைகள், பாவினங்கள் என
இரண்டாகப் பாகுபடுத்துவர்.
|
|
|
|
2.1.1
பா வகைகள் |
|
|
|
செப்பலோசையை உடைய வெண்பா,
அகவலோசையை உடைய ஆசிரியப்பா, துள்ளலோசையை உடைய கலிப்பா, தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா,
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும்.
அவற்றுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெருவழக்குடையனவும் தெரிந்துகொள்ள வேண்டியனவும் ஆகும்.
|
|
வெண்பா
ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும்
பெற்று வரும்.
மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய
வெண்பாத் தளைகளையே
பெற்று வரவேண்டும். ஈற்றுச் சீர்
ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல்
வேண்டும். இவ் வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக்
கொண்டது.
மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில்
வருவது - குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது - சிந்தியல்
வெண்பா; நான்கடிகளில் வருவது - இன்னிசை வெண்பா,
நேரிசை வெண்பா; ஐந்தடி
முதல் 12 அடி வரை அமைவது -
பஃறொடை வெண்பா; 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப்
பெற்று வருவது
- கலிவெண்பா என வகைப்படுத்துவர்.
அவற்றுள் குறள் வெண்பாவும், நேரிசை
வெண்பாவும்
பயிலத்தக்க சிறப்புடையன.
|
|
குறள் வெண்பா
குறள்வெண்பா யாப்பால் அமைந்து சிறப்புடன்
திகழ்வது திருக்குறள். |
|
உள்ளத்தால் பொய்யா
தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள்
எல்லாம் உளன் (குறள் - 294)
|
|
என்னும் குறட்பா எளிய நடையில் திகழ்வதைக் காண்கிறோம்.
|
|
ஊருணி நீர்நிறைந் தற்றே
உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள்
- 215)
என வரும் குறள், அழகிய உவமையைப் பெற்று
விளங்குகின்றது.
(உலகு அவாம் எனப் பிரிக்க; ஊருணி
= ஊரார்
நீருண்ணும் குளம்)
|
|
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (குறள் - 946)
|
|
என்னும் குறளில், உணவின் செரிமானம் அறிந்து
உண்பவனிடம் இன்பம் நிலைபெற்றிருப்பது போல, செரிமானம்
ஆவதற்குமுன் அளவிற்கு அதிகமாய் உண்பவனிடம் நோயானது
நிலைபெற்றிருக்கும் என இரண்டு கருத்துகள்
உவமையடிப்படையில் ஒருங்கே அமைந்து விளங்கக்
காண்கிறோம்.
|
|
நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
அடைமொழி இன்றி வெண்பா என்று சொல்லும்
அளவில்
நினைவிற்கு
வருவது நேரிசை வெண்பாவேயாகும்.
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள், பிற்கால நீதி நூல்கள் எனப்
பல்வேறு நூல்களிலும் பயின்று வழங்கி வந்துள்ள
சிறப்பினையுடையது இது.
|
|
நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி - 5)
|
|
(நொய்தல் = அற்பம்; புல்லினும்
= பொருந்தினாலும்;
திண்மை = உறுதி; போம்
= போகும், போய்விடும்)
என வரும் நேரிசை வெண்பா, நட்பில் பிரிவும் கருத்து
வேற்றுமையும் வரக்கூடாது என்பதனை முன்னிரண்டடிகளிலும்,
அதற்கேற்ற உவமையைப் பின்னிரண்டடிகளிலும் அமைத்துக்
கூறுகின்றது.
|
|
கள்ளம்என் பார்க்கும் துயிலில்லை; காதலிமாட்(டு)
உள்ளம்வைப் பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்
செய்வம்என் பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
|
|
என வரும் இன்னிசை வெண்பா, திருடர், காதலர்,
பொருளீட்ட விழைவோர், பொருளைப் பாதுகாப்போர் என்னும்
நால்வருக்கும் தூக்கம் இல்லாமையை அழகுபட அடுக்கி
எடுத்துரைக்கின்றது.
|
|
இவை வெண்பாப் பற்றியன. இனி ஆசிரியப்பாவைக்
குறித்துக் காண்போம்.
|
|
ஆசிரியப்பா
உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா. ஈரசைச்
சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது. எதுகை,
மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப்
பெற்று வரும். அடி மிகுதிக்கு எல்லை இல்லை.
எல்லா அடிகளும் நாற்சீர் பெறுவது நிலைமண்டில
ஆசிரியப்பா. சீரை மாற்றாமல் அடிகளை மாற்றிப் போட்டாலும்
ஓசையும் பொருளும் மாறாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா; ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீரும் பெறுவது நேரிசை
ஆசிரியப்பா; முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் பெற்று,
இடையிலுள்ள அடிகள் இரு சீரோ, முச்சீரோ பெற்று வருவது
இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். இவ்வாறு ஆசிரியப்பா
நால்வகைப்படும்.
அவற்றுள் நிலைமண்டில ஆசிரியப்பாவும், நேரிசை
ஆசிரியப்பாவும் பெரிதும் பின்பற்றப்படுபவை. எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை,
கல்லாடம் என்பன ஆசிரியப்பாவால் அமைந்தவை.
வெண்பாவைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டது ஆசிரியப்பாவே ஆகும் (எனினும் யாப்பிலக்கண நூல்கள்
வெண்பாவை முற்படக் கூறலின், இங்கும் அம்முறை
பின்பற்றப்பட்டது).
|
|
நிலைமண்டில ஆசிரியப்பா
மாசறு
பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ!
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்(று)
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . .
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்
(சிலப்பதிகாரம் -2 : 73-90)
|
|
(மாசு, காசு =
குற்றம்; விரை = மணப்பொருள்)
என்பது சிலப்பதிகாரம். கோவலன், கண்ணகியைத்
திருமணமான புதிதில் புகழ்ந்துரைக்கும் பகுதி இது.
|
|
நேரிசை ஆசிரியப்பா
உலகம் உன்னுடையது
என்னும் தலைப்பில், பாவேந்தர்
பாரதிதாசன் பாடும் பாடல் பின்வருமாறு:
|
|
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை! (5)
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்!
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு! (10)
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நான்என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதம் இல்லை!
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! (15)
புகல்வேன் ‘உடைமை மக்களுக் குப்பொது’
புவியை நடத்து; பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழா! (20)
|
|
உலகம் என மானிட இனம் முழுவதையும் தழுவி,
வேறுபாடற்ற சமுதாயம் காண உணர்ச்சி செறிந்த நடையில்
பாவேந்தர் இப்பாடலை ஆக்கியுள்ளார். இடையிடையே எதுகைத்
தொடை விடுபடினும் பொருண்மையும் உணர்ச்சியும் சிறந்து
பாடலின் நடை சிறக்கக் காண்கிறோம்.
இனிப் பாவினங்கள் குறித்துக் காண்போம்.
|
|
|
|
|
|
|
|
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய
நான்கு
பாக்களுக்கும், தாழிசை, துறை, விருத்தம் என்னும்
மூவகைப்
பாவினங்களும் அமைந்துள்ளன. ஆனால் பாவின்
இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய
தொடர்பு இல்லை. பாவினங்களைப் பொருத்தவரையில் சீர், அடி
எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்புமே கருத்தில் கொள்ளப்
பெறுகின்றன.
|
|
தாழிசை
குறள் தாழிசை, வெள்ளொத் தாழிசை,
வெண்டாழிசை, ஆசிரியத் தாழிசை, கலித்தாழிசை, வஞ்சித்
தாழிசை என்பனவாகத் தாழிசையின் வகைகள் அமைகின்றன.
ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் என்பது
தாழிசையின் தனிச் சிறப்பாகும். பெரும்பாலும் நாட்டுப்புறப்
பாடல்கள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும்
தன்மையுடையன என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
தாழிசைகளுள் வஞ்சித் தாழிசை பயன்பாட்டிற்குரியது.
|
|
வஞ்சித் தாழிசை
குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட
செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.
|
|
பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர் (1)
எளியவர்க் கிரங்காமல்
ஒளியராய் உறவாழ்வார்
துளியிலா விசும்பென்ன
வெளியரால் இளிவுண்பர் (2)
உழவர்தம் உழைப்புண்டு
விழவராய் மிகவாழ்வார்
இழவராம் இவரென்னக்
கிழவரால் இழிவுண்பர் (3)
|
|
(பாட்டாளர்
= உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ
வசதியர்; மாட்டாத = பயன்தர இயலாத; நாட்டார்
= உலகினர்; ஒளி = புகழ்; விழவு
= மகிழ்வு; இழவர்
= இழிவினர்; கிழவர் = உரிமையுடையவர்)
எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.
|
|
துறை
குறள்வெண் செந்துறை, ஆசிரியத் துறை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன துறை வகைகள்
ஆகும். இவற்றுள் கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித்
துறை ஆகியன தெரிந்துணர வேண்டியவையாகும்.
|
|
கலித்துறை
நெடிலடி (ஐஞ்சீரடி) நான்கு கொண்டது இது. மா, விளம்,
விளம், விளம், மா என்னும் வாய்பாட்டில் அமைந்த பாடல்.
|
|
எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லைஅத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லைவந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்
(மந்தரை சூழ்ச்சிப் படலம் - 65)
|
|
(நல்லை = நல்லவள்; அல்லை = நல்லவளில்லை;
மனக்கு = மனத்துக்கு)
என்பது கம்பராமாயணத்துத் தசரதன் கூற்று.
|
|
கட்டளைக் கலித்துறை
வெண்சீர் அமைந்த ஐந்து சீர்களையுடையதாய், ஐந்தாம்
சீர் விளங்காய் வாய்பாட்டில் அமைந்ததாய், நேரசையில் தொடங்கின் 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கின் 17
எழுத்தும் என ஒற்று நீக்கி எண்ணத்தக்கதாய் அமைவது
கட்டளைக் கலித்துறையாகும்.
கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி போன்ற
நூல்கள்
இவ்வகையில் அமைந்தனவாகும்.
பாவேந்தர் பாரதிதாசனாரின் வள்ளுவர்
வழங்கிய
முத்துகள் என்னும் தலைப்பிலான பாடல் வருமாறு:
|
|
வெல்லாத இல்லை திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே
(புரை = குற்றம்)
|
|
வஞ்சித் துறை
குறளடி நான்கு கொண்டது இது. புளிமாங்காய் +
கருவிளம் என்னும் வாய்பாட்டிலமைந்த, ஆழிப்பேரலை குறித்த
கி.சிவகுமாரின் பாடல் பின்வருமாறு:
|
|
பிழைமூன்று பொறுப்பையாம்
பிழைச்சொல்லோ பெருங்கடல்!
அழைக்காமல் நுழைந்தனை!
பிழைக்காமல் விழுங்கினை!
(பிழை = தவறு; பிழைக்காமல்
= யாரும் உயிர் பிழைக்காமல், தவறாமல்)
|
|
விருத்தம்
அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப் பொதுவாகக் கூறலாம். வெளி விருத்தம், ஆசிரிய விருத்தம்,
கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்பன விருத்தப்பா வகைகள்.
இவற்றுள் வெளிவிருத்தம் தவிர்த்த ஏனையன அறிய வேண்டியனவாகும்.
|
|
ஆசிரிய விருத்தம்
கழிநெடிலடி நான்கு உடையது இது. சீர்களின்
எண்ணிக்கைக்கேற்பப் பெயர் பெறும்.
|
|
1. விளம் மா தேமா - அறுசீர்
விருத்தம்
தாயெழில் தமிழை என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியில் காண
இப்புவி அவாவிற் றென்றே
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ?
ஆரிதைப் பகர்வார் இங்கே
(மது = தேன்; பாயுநாள்
= பாயும் நாள்)
பாவேந்தரின் பாடல் இது. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச் சீரும்
வரலாம்.
|
|
2. மா மா காய் வாய்பாடு -
அறுசீர் விருத்தம்
இல்லாப் பொருளுக் கேங்காமல்
இருக்கும் பொருளும் எண்ணாமல்
எல்லாம் வல்ல எம்பெருமான்
இரங்கி அளக்கும் படிவாங்கி
நல்லார் அறிஞர் நட்பையும்நீ
நாளும் நாளும் நாடுவையேல்
நில்லா உலகில் நிலைத்தசுகம்
நீண்டு வளரும் நிச்சயமே
(உமர்கய்யாம் - கவிமணி)
|
|
3. விளம் மா விளம் மா,
விளம் விளம் மா
- எழுசீர்
விருத்தம்.
தந்ததுன் தன்னை; கொண்டதென் தன்னை;
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்;
யாதுநீ பெற்றதொன் றென்பால்?
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்!
திருப்பெருந் துறையுறை சிவனே!
எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்!
யான்இதற்கு இலன்ஓர்கைம் மாறே!
(கோயில் திருப்பதிகம் - 10)
(சங்கரன் = சிவன்;
சதுரர் = திறமையுடையவர்;
அந்தம் =
முடிவு; கைம்மாறு = பதிலுதவி)
என்பது மாணிக்கவாசகரின் திருவாசகம்.
|
|
4.காய் காய் மா தேமா -
எண்சீர் விருத்தம்.
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்ந்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுமென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக்
கோவேந்தன் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே
(ஆவீன = ஆ ஈன, பசுகன்று ஈன;
இல்லம் = வீடு; மாவீரம்
= பெரிய ஈரம்)
என்பது இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடல். காய்ச்சீருக்குப்
பதில் சில இடங்களில் விளச்சீர் வருதலும் உண்டு.
|
|
கலி விருத்தம்
அளவடி நான்கு கொண்டது இது. விளம், விளம், மா,
விளம் என்னும் வாய்ப்பாட்டில் அமைந்த வில்லிபாரதப் பாடல்
வருமாறு:
|
|
அருமறை முதல்வனை ஆழி மாயனைக்
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத்
திருமகள் கேள்வனைத் தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்
(முளரி = தாமரை;
பதம் = திருவடி)
|
|
வஞ்சி விருத்தம்
சிந்தடி நான்கு கொண்டு அமைவது இது. விளம், விளம்,
காய் வாய்பாட்டிலான கி.சிவகுமாரின் பாடல் வருமாறு:
|
|
என்பது பெண்என எழுச்சியுறும்;
வன்கலும் புணைஎன மிதக்கலுறும்;
முன்சுவை மகவினை முதலைதரும்;
தென்தமிழ்த் திருமுறைச் செயலாலே;
(என்பது = எலும்பானது;
கலும் = கல்லும்; சுவை மகவு = விழுங்கிய குழந்தை)
மரபுக் கவிதை வகைமை குறித்து அறிந்தோம். இனி
இசைப்பா வகைமையைக் காண்போம். |
|
|