1) குற்றியலுகரம்
நின்ற சீரின் இறுதியிலுள்ள குற்றுகர எழுத்துடன் வருமொழி
உயிர் வந்து புணரும்.
நாடு + என்றான் - நாடென்றான்
பிரித்துக் காட்ட அடைப்புக் குறியிட்டு எழுதலாம். ஆனால்
குற்றுகரத்தையும் வருமொழி உயிரையும் புணர்க்காமல் இருத்தல்
கூடாது. இது ஓரடிக்குள் மட்டுமன்று; ஓரடியின் இறுதிக்கும்
அடுத்த அடியின் முதலுக்கும் இடையில் கூடக் கவனத்தில்
கொள்ள வேண்டியதாகும்.
2) மகரப்புணர்ச்சி
‘தாம் + கண்ட - தாங்கண்ட' என வரும். மகரமெய்
வருமொழி வல்லினத்திற்கேற்ற மெல்லினமாக மாறும் என்பதை
மனங்கொள்ள வேண்டும். வருமொழியில் மெல்லினம் வரின் மகரம் கெடும் (மனம் +
மொழி = மனமொழி).
3) லகர மெய்
கல்+கோயில் - கற்கோயில் (வல்லினம்வரின்)
கல்+மலை - கன்மலை (மெல்லினம் வரின்)
கல்+தூண்-கற்றூண் (தகரம்வரின்)
(கல்+தீது-கஃறீது)
நல்+நெறி - நன்னெறி
(நகரம்வரின்)
பால்+நினைந்து - பானினைந்து
(நகரம்வரின்)
4) ளகர மெய்
நாள்+காட்டி-நாட்காட்டி (வல்லினம்வரின்)
அருள்+மொழி-அருண்மொழி (மெல்லினம்வரின்)
முள்+தாள் - முட்டாள் (தகரம்வரின்)
(முள்+தீது-முஃடீது)
முள்+நுனி-முண்ணுனி (நகரம்வரின்)
வாள்+நுதல்-வாணுதல் (நகரம்வரின்)
5) னகர மெய்
பொன்+கோயில்-பொற்கோயில் (வல்லினம்வரின்)
பொன்+நேமி-பொன்னேமி (நகரம்வரின்)
6) ணகர மெய்
மண்+குடம் - மட்குடம் (வல்லினம்வரின்)
கண்+நீர் - கண்ணீர் (நகரம்வரின்)
இவ்வாறான புணர்ச்சி விதிகளைத் தெள்ளிதின் அறிதல்
வேண்டும்.
இவ்வாறே ஒற்றுப் பிழையின்மை, ஒருமை பன்மை
மயக்கமின்மை (அவன்தான், அவர்தாம்), மரபுச் சொற்கள்
ஆகியவற்றை அறிந்திருத்தலும் பாப்புனைவோர்க்குரிய
தகுதிகளாகும்.
பாவினைப் படைப்பதற்கு, பாக்களைப் படித்தல், நயத்தல்
போன்றன இன்றியமையாதனவாகும். |