1.1 படைப்பிலக்கியமும் சிறுகதையும் செய்யுளும், சிறுகதையும் படைப்பிலக்கியங்களாக விளங்கிய போதிலும், இவற்றை ஒன்றெனக் கூறிவிட முடியாது. இரண்டிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு. இவ் இரண்டும் வெவ்வேறு காலத்தின் இலக்கிய வடிவங்கள். ஒன்று செய்யுளால் ஆக்கப்பட்டது. மற்றொன்று உரைநடையால் ஆக்கப்படுவது. செய்யுளிலக்கியம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ளாத காலத்தில் உருவானது. சிறுகதை இலக்கியம் உலகத்தின் பிறமொழித் தொடர்பால் கிடைக்கப் பெற்றது. மன்னராட்சிக் காலத்தின் இலக்கியம் செய்யுள், மக்கள் ஆட்சிக் காலம் தந்த இலக்கியம் சிறுகதை. நாம் இன்று கூறும் சிறுகதை அமைப்பு, சங்கச் செய்யுள்களில் இல்லை. எனினும் சிறுகதைக்கான அடிப்படை, உத்தி ஆகிய இரண்டும் சங்க இலக்கியத்தில் காணப்படுவது உண்மை. அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற செய்யுள்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய சிறுகதைகளை நினைவூட்டுகின்றன. இப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம்பெறவில்லை. எனினும் வாழ்க்கையின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான கதைக் காட்சிகள் உண்டு.இன்றைய படைப்பிலக்கியங்களின் கதைக்கரு மனித வாழ்விலிருந்தே உருவாகிறது. இவ்வகையில் மனிதர்களின் அனுபவங்களும், எண்ணங்களும் சிறப்பாக - சுதந்திரமாக - வெளிப்படும் பொழுது படைப்பிலக்கியங்கள் தோன்றுகின்றன. இவ்விலக்கியங்கள் நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டு விரிவு பெறுகின்றன. இவற்றுள் சிறுகதை மனித வாழ்க்கையோடு மிக நெருங்கி இருக்கும் இலக்கிய வகையாகிறது. எந்த வகைப் படைப்பிலக்கியத்திற்கும், ஆர்வத்திற்கும் மேலாக மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன. 1) வாழ்க்கை அனுபவம் ஆகியனவாம். இத்தன்மையிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இவை உருவாகியுள்ளன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன. சிறுகதைப் படைப்பிலக்கியங்களின் மூலம் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. மதங்கள் வளர்ந்திருக்கின்றன. மனிதப் பண்புகள் மெருகேறி இருக்கின்றன. இதைப் பற்றி இப்பகுதியில் காண்போம். எ.கா : 1. காந்தியடிகள் அரிச்சந்திரன் கதை மீது ஈடுபாடு கொண்டு உண்மை பேசுபவராக விளங்கினார். 2. வீரக்கதைகளைக் கேட்டு சிவாஜி தீரனாகத் திகழ்ந்தார். பொதுவாகச் சிறுகதைகள் ஒரு படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த குறிக்கோள்களை வலியுறுத்துகின்றன. மேலும் சிறுகதைகள் பிற படைப்பிலக்கியங்களைப் போலவே உயிர்த்துடிப்புடையனவாய் விளங்குகின்றன. படைப்பு என்பது இயற்கையின் முன் ஒரு கண்ணாடியைத் தூக்கிப் பிடிப்பதுபோல் அமைவதாகும். கண்ணாடியில் தெரிவன உண்மையான பொருள்கள் அல்ல. அவை போலிகளும் அல்ல. உண்மையை ஒத்த பிம்பங்கள். சிறுகதைப் படைப்பிலக்கியம் இத்தகைய வடிவினையே பெற்றுள்ளது. உண்மை நிகழ்வுகள், அனுபவங்களைக் கொண்டமைவதால் சிறுகதை படைப்பிலக்கிய வகைக்குப் பொருத்தமுடையதாகிறது. அறிவின் வாயிலாக உலகத்தை அறிவதைவிட, புலன்களின் வாயிலாக உலகத்தைக் காண முயற்சி செய்தல் வேண்டும். இத்தகைய படைப்பாளரின் உணர்ச்சியே படைப்பிலக்கியத் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. ஓர் அழகான காட்சியைக் காணும் அனைவரும் அக்காட்சிக்கு உணர்ச்சி வடிவம் தருவதில்லை. பெரும்பாலோர் அதை மறந்து விடுகின்றனர். கலையுள்ளம் படைத்தவர்கள் மட்டுமே அந்த அழகுணர்ச்சியை மனத்தில் பதித்து, அதற்குக் கலை வடிவம் தந்து அழியாமல் காக்கின்றனர். அழகுணர்ச்சியும், நுண்ணுணர்ச்சியும் மிக்க மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடே படைப்பிலக்கியத்திற்குக் காரணமாகிறது. படைப்பிலக்கியங்கள் எழக் காரணங்களாவன : 1) மனிதன் தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டும் என்ற விருப்பம். 2) பிற மக்களுடன் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு. 3) மனிதன், உண்மை மற்றும் கற்பனை உலகோடு கொண்டிருக்கும் ஈடுபாடு. 4) தன் அனுபவத்திற்குக் கலைவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம். இனி, படைப்பிலக்கியத்தின் தன்மைகளைக் காண்போம். சொற்களால் திறம்பட அமைவதே படைப்பிலக்கியம். படைப்பிலக்கியம் தனி ஆற்றல் பெற்றவர்களால் உருவாக்கப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்தில், உணர்வுகளுடன் பதிந்தவற்றை மட்டுமே படைத்துக் காட்டுகிறான். எந்த ஒரு படைப்பும் பொதுமக்களால் ஏற்கப்பட்டு, அறிஞர்களின் ஆதரவு பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். அவ்வகையில் படைப்பிலக்கியங்கள் உண்மை நிகழ்வுகளைக் கொண்டு விளங்குகின்றன. படைப்பிலக்கியம் மனிதர்களின் உள்ளத்தை ஆள்கிறது. மனித மனம் பண்பட உதவுகிறது. ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றைப் பண்படுத்துவன படைப்பிலக்கியங்களே. இங்ஙனம் படைப்பிலக்கியங்கள் மனித வாழ்விற்குத் துணை நிற்பதை அறியலாம். இந்தியாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி, அறிவியல் புரட்சி, தேசிய எழுச்சி ஆகியன உரைநடை இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணிகள் ஆயின. இந்திய மொழிகளிலும் மரபுக் கவிதைகள் படிப்படியாய்க் குறைந்து, புதிய கவிதைகள் தோன்றின. அவ்வாறே கதைகளிலும் மரபுநிலை மாறி, புதுமை இடம்பெறத் தொடங்கியது. இதன் விளைவு சிறுகதை இலக்கியம் சிறந்த இலக்கிய வடிவமாய் மலர ஆரம்பித்தது. சிறுகதை ஐரோப்பியர் வரவால் தமிழுக்குக் கிடைத்தது என்பது அறியத்தக்கது. சிறுகதை, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தால் பொழுது போக்கிற்கு இடமளிக்கும் அளவில் தோன்றியதாகும். இன்று, இச்சிறுகதைகள் சமுதாயத்தில் பலரும் விரும்பிப் படித்துப் பயன்கொள்ளத்தக்க அளவில் எளிய இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. சிறுகதைகள் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைகின்றன. சிறந்த சிறுகதைகள் போதனை செய்து ஒழுக்கத்தினை உயர்த்துவதாகவும் அமைகின்றன. கற்பனை ஆற்றல், சொல் நயம், நடை அமைப்பு மிக்க படைப்பாளரின் படைப்பே சிறுகதையின் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. அளவிற் சிறியதாய் அமைந்து, ஆற்றல் மிக்கதோர் இலக்கிய வடிவமாய்ச் சிறுகதைகள் திகழ்கின்றன. சிறுகதை இலக்கியத்தினை மிகச் சிரமமான வெளியீடு என்று கூறுவது பொருந்தும். ஏனெனில், சொல்கின்ற கருத்தில் தெளிவும், வெளியீட்டில் சிக்கனமும், தெளிவான ஓட்டமும், தொய்வில்லாத ஈர்ப்பும் இதற்கு அவசியம். ஐந்நூறு பக்கங்களில் எழுதப் பட்டிருக்கும் நாவலை விட ஐந்து பக்கச் சிறுகதையின் வேகம் மிகுதியானதாகும். சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும். இங்ஙனம் சிறுகதைகள் படைப்பிலக்கிய வகையுள் ஒன்றாய் விளங்குவதை அறியலாம். சிறுகதைப் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, புறவாழ்க்கையில் தாம் காணும் காட்சிகளை, அனுபவங்களைக் கொண்டு சிறுகதைகளைப் புதியதாகப் படைக்கின்றனர். இப்படைப்புகள் மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் அமைதல் வேண்டும். சிறுகதைகள் மூலம் படைப்பாளரின் கற்பனை, மனநிலை, ஆளுமை ஆகியவை வெளிப்பட வேண்டும். இவ் அளவிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் சிறப்புப் பெற இயலும். |