சிறுகதையில்
மைய அம்சமே கதைக்கருதான். அது
வீரியமும், உயிர்த்துடிப்பும் கொண்டதாய் இருக்கவேண்டும். ஒரு
கதையின் சிறப்பிற்குக் கதைக்கருவே மூல காரணமாகிறது. கருவில்
சிறப்பு இல்லையெனில் கதையிலும் சிறப்பிருக்காது.
எனவே
கதைக்கரு ஒரு புதிய கருத்து, ஒரு புதிய விளக்கம், ஒரு புதிய
பார்வை, ஒரு புதிய அழுத்தம்,
ஒரு புது அம்சம்
கொண்டதாயிருக்க வேண்டும். இவற்றோடு கதைக்கரு இலக்கியத்
தரத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.
அறம் வலியுறுத்தல்
கதைக்கரு
எளிமையாக அமைதல் வேண்டும். மக்களின்
நம்பிக்கையை உயர்த்துதல் வேண்டும். சமுதாயத் தேவைகளைச்
சுட்டிக் காட்டுதல் வேண்டும். வாழ்க்கையின்
நன்மையை,
அறத்தினை வலியுறுத்த வேண்டும். சிறுகதைகளின் கதைக்கரு
பொழுதுபோக்கு நிலையைத் தாண்டி மக்களுக்குப் பயன்படும்
வகையில் அமைதல் வேண்டும். கல்கி, அகிலன், புதுமைப் பித்தன்
ஆகியோருடைய சிறுகதைகளில் இத்தகைய
கதைக்கரு
அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
கதைக்கரு -
உருவாக்கம்
படைப்பாளனின்
ஊடுருவும் திறனால் கதைக்கரு
உருவாக்கப்படுகிறது. கதைக்கரு வருங்காலத்தை ஊடுருவுவதாக
அமைதல் வேண்டும். உணர்ச்சி, சிந்தனைகளின் அடிப்படையில்
உருவாதல் வேண்டும். உண்மை, கற்பனை, நிகழ்வுகள், செய்திகள்
இவற்றில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு, சமூகத்திற்கும் பயன்பட
வேண்டும். கதைக்கருவில் இலட்சிய நோக்கு
வெளிப்படல்
வேண்டும்.
‘சிறுகதை
அளவில் சிறியதாய் இருக்க வேண்டும். அந்த
அளவுக்குள் ஒரு கதைக்குரிய கரு இருக்க வேண்டும். கதையும்
முடிவும் கொண்டதாகக் கதைக்கரு விளங்குதல்
வேண்டும்.’
இக்கருத்தையே சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் என்று புகழப்படும்
மாபசான், ஆண்டன் செகாவ், ஓ ஹென்றி போன்றோர்களும்
ஏற்றுக் கொள்கின்றனர்.
புதுமைப்பித்தனின் சங்குத் தேவனின் தர்மம்
என்ற
சிறுகதை ஆறு பக்கங்களில் அமைந்து இதற்கு எடுத்துக்காட்டாய்
விளங்குகிறது. இறுதியாகக் கூறுமிடத்து, ‘கதைக்கரு, ஒரு கதைக்கு
முழுவதுமாய் வரையப்பட்ட ஓவியம் போலமைந்து, கதையில்
அதன் அழகு முழுவதுமாய் வெளிப்பட வேண்டும்’ என்பது
அறியப்படுகிறது.
1.4.1
சமூகச் சிக்கல்கள்
சமூகச்
சிக்கல்களைச் சுட்டிக்
காட்டுவதே
படைப்பிலக்கியங்களின் நோக்கமாகும். இந்நெறி
சிறுகதை
இலக்கியங்களிலும் பின்பற்றப் படுகின்றது. சமூகத்தில் புரையோடிக்
கிடக்கும் சீர்கேடுகளை விளக்கும் கதைகள் சமூகச் சிக்கல்களுக்கு
உரியதாகின்றன. இத்தகைய
சிறுகதைகள் சமூகச்
சீர்திருத்தத்திற்கும், சமூக மறுமலர்ச்சிக்கும்
வழிகாட்டுவதாய்
உள்ளன. நாட்டில் வாழும் மக்கள் பொதுஅறிவு பெறுவதற்கும்,
பிணக்குகள், பூசல்கள் இல்லாமல் வாழ்வதற்கும் இச்சிறுகதைகள்
உதவுகின்றன. சமூகச் சிக்கல்களுக்கு உரிய களங்களாகக் குடும்பம்
மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள்
சுட்டப்படுகின்றன.
இத்தகைய சமூகச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகள் சிலவற்றைப்
பின்வருமாறு காண்போம்.
குழந்தை மணம்
நம்
சமூகத்தில் பரவிக் கிடந்த சீர்கேடுகளுள் இதுவும் ஒன்று.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த வழக்கம் சமூகத்தில்
பரவலாகக் காணப்பட்டது. பின்னர், பல எழுத்துப் புரட்சிகளின்
மூலம் இக்கொடுமை சமூகத்தை விட்டு அகன்றது. இப்புரட்சிக்கு
உறுதுணையாய் நின்ற சிறுகதைகள் பலவாகும்.
அவற்றுள்
குறிப்பிடத்தக்கவை :
(1)
வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்
(2)
புதுமைப்பித்தனின் ஆண்மை
விதவைக் கொடுமை
அக்காலச்
சமுதாயத்தில் கைம்பெண்களின் நிலை மிகவும்
பரிதாபமானதாய் இருந்தது. சமுதாயத்தில் கைம்பெண்களுக்கு
விதிக்கப்பட்டிருந்த சட்டங்களினாலும், பழக்க வழக்கங்களினாலும்
அவர்கள் பெரிதும் அவதியுற்றனர். இந்நிலையை மாற்றியமைக்கும்
வகையில் மகளிரின் நிலைமையைப் பல்வேறு கோணங்களில்
சிறுகதைகள் விவரித்தன. இதன் விளைவாகச் சமூக மாற்றங்களும்
நிகழ்ந்தன. விதவைக் கொடுமைகளை விளக்கும் சிறுகதைகளுக்கு,
புதுமைப்பித்தனின் வழி, கி.ராஜநாராயணனின்
சாவு ஆகியவற்றை
உதாரணமாகக் கூறலாம்.
வரதட்சணைக்
கொடுமை
‘திருமணத்தின்
போது வரதட்சணையை ஒரு நியதியாகக்
கொள்ளும் இளைஞன் அவனது கல்வியையும், நாட்டையும்,
பெண்மையையும் பழிப்பவனாகின்றான்.’ என்று காந்தியடிகள்
கூறியுள்ளார். வரதட்சணை என்ற பெயரில் தமிழ்ச் சமுதாயத்தில்
திருமணம் என்பது தன் புனிதத் தன்மையை இழந்து கேவலமான
வணிக நிலைக்கு மாறிவிட்டது. இச்சமூகக் கொடுமை படைப்பாளர்
நெஞ்சில் பதிந்து சிறுகதைகளாயிற்று.
இவ்வகையில்
சி.சு.செல்லப்பாவின் மஞ்சள்
காணி என்ற சிறுகதை
குறிப்பிடத்தக்கது.
பொருந்தா மணம்
வயது
கடந்த முதியவர் இளம் பெண்களை மணந்து
கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் நிலவியது. இவ்வழக்கத்தைச்
சமூகக் குற்றமாகவே கருதி, படைப்பாளர்கள் தங்கள் கதைகளில்
கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய சிறுகதைகளுக்கு
உதாரணமாக, கல்கியின்
சர்மாவின் புனர் விவாகம்,
ஜெயகாந்தனின் பேதைப்பருவம் ஆகியவற்றைக்
குறிப்பிடலாம்.
மேலும்
சமூகத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கை, சாதிக் கொடுமை,
வறுமைக் கொடுமை, தீண்டாமை ஆகிய சமூகச் சிக்கல்களும்
சிறுகதைகளாக வெளிவந்தன. இங்ஙனம் சிறுகதைகள் சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்தித்
தரும் அளவில் பணியாற்றி இருப்பதை அறியலாம்.
1.4.2
குடும்பச் சிக்கல்கள்
குடும்பப்
பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தோன்றும்
சிறுகதைகளும் உண்டு.
இத்தகைய சிறுகதைகள் மூலம்
குடும்பச்
சிக்கல்களுக்கான
காரணங்கள் அறியப்படுகின்றன.
சுயநலம், உறவுமுறைப் பிணக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு,
விட்டுக் கொடுக்காமை, கூடி
வாழாமை, குற்றம் காணல்
ஆகியவற்றால் குடும்பச் சிக்கல்கள்
உண்டாவது சுட்டப்படுகின்றது.
இவ்வகைப்பட்ட
சிறுகதைகள் குடும்ப வாழ்வின் இன்ப,
துன்பங்களை அணுகி ஆராய்ந்து சமூகப் பயன் விளைவிக்கின்றன. குடும்ப வாழ்வின் நிறை,
குறைகளை மக்களுக்கு
எடுத்துரைக்கின்றன. வாழ்வின்
நன்மை, தீமைகளைப்
போதிக்கின்றன. குடும்பப் பிரச்சனைகளைக்
களைவதற்கு
மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கூறுகின்றன. இதன்
மூலம் தனிமனிதக் குணநலன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.
குடும்ப
வாழ்வின் சிக்கல்களைச்
சிறுகதையில்
சித்திரிப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கு.ப.ராஜகோபாலன்
அவர்கள். இவரின் விடியுமா என்ற
சிறுகதை எளிதில் மறக்க
இயலாது. ஒரு சிறுகதையின் தொடக்கம் எவ்வாறு
அமைய
வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திறனாய்வாளர் பலரால்
எடுத்துக்காட்டப்படும் சிறப்புப் பெற்றது. லட்சுமி,
சிவசங்கரி,
இந்துமதி ஆகியோர்களும் குறிப்பிடத் தகுந்தவர்களாகின்றனர்.
1.4.3
தனிமனிதச் சிக்கல்கள்
தனிமனிதனின்
மனப் போராட்டங்களைச் சித்திரிக்கும்
சிறுகதைகள் தனிமனிதச் சிக்கலுக்கு உரியனவாகின்றன. இத்தகைய
சிறுகதைகளில் நிகழ்ச்சிகளும், பாத்திரங்களும் ஒன்றோடொன்று
கலப்பதில்லை. ஒரு பாத்திரம் அல்லது ஒரு
சூழ்நிலையை
மையமாக வைத்தே மனப் போராட்டங்கள் சித்திரிக்கப்படுகின்றன.
சமூகக் கட்டுப்பாடு, சூழ்நிலை காரணமாக
மனிதனுக்குள்
உணர்ச்சிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இவ்வுணர்ச்சிகளின்
வெளிப்பாடு தனி மனிதச் சிக்கலுக்கு உரியதாகிறது.
மேலும்
மனிதனின் உணர்வுகளைத் தத்துவ வகையில் வெளிப்படுத்தும்
கதைகளும் இவ்வகைப்பட்டனவாகவே உள்ளன.
அகிலன்
- பூச்சாண்டி
க.நா. சுப்பிரமணியன் - மனோதத்துவம்
புதுமைப்பித்தன் - மனநிழல்
சூடாமணி - சுமைகள்
ஆகியவை குறிப்பிடத் தகுந்தவையாகும்.
க.நா.சுப்பிரமணியத்தின்
மனோதத்துவம் கதையில் எதிர்
வீட்டுக்காரன் நடு இரவில் வானொலி வைக்கிறான். இதை ஒருவன்
எச்சரிக்கிறான். எச்சரித்தும் கேளாமல் போகவே
அவனைக்
கொன்று விடுகிறான். அதன் பிறகும் நடு இரவில் வானொலிச்
சத்தம் அவனுக்குக் கேட்கிறது.
எனவே மனோதத்துவ
மருத்துவரிடம் செல்கிறான். இச்சிறுகதை கொலை செய்தவனின்
மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதேபோல்
தனி
மனிதனின் பலவீனத்தைக்
காட்டும் சிறுகதையாக
நாரணதுரைக்கண்ணனின் சந்தேகம் என்ற கதை
குறிப்பிடத்தக்கது.
இத்தகைய
சிறுகதைகளின் மூலம் தனிமனிதனின் உளச்
சிக்கல்கள், உணர்ச்சிகள், பலவீனங்கள் ஆகியவற்றை
அறிய
முடிகிறது. இதன் மூலம் தனிமனித மேம்பாட்டிற்குச் சிறுகதைகள்
துணை செய்வதும் தெளிவாகிறது.