2.2
தொடக்க காலச் சிறுகதையின் போக்கு
விநோதரச
மஞ்சரி கதைகள், பஞ்சதந்திரக் கதை,
பரமார்த்த குரு கதை முதலியன தமிழ்மொழியில் தோன்றிய
பழைய சிறுகதைகளாகும். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த
எழுத்தாளர்களான வ.வே.சு.ஐயர்,
புதுமைப்பித்தன்,
கு.ப.இராஜகோபாலன், ராஜாஜி, ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி,
அழகிரிசாமி, அண்ணா போன்றோர்
தொடக்க காலத்திலிருந்தே
சிறுகதை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளனர்.
இவர்கள்
தமக்கென்று ஒரு தனி நடையை வகுத்துக் கொண்டு சிறுகதைகளைப்
படைத்தனர். இவர்களுடைய சிறுகதைகள் வாழ்க்கைச் சிக்கல்களைப்
பிரதிபலிப்பதாய் அமைந்தன. மனித
மனங்கள் மாற்றம்
பெறவேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டின. ஏற்றத்தாழ்வுகளால்
நிகழும் இடர்ப்பாடுகளைச் சுட்டின. வறுமையின் கொடுமையை
மனத்தில் பதித்தன. சமூகப் பிரச்சனைகளை
அறிந்துகொள்ள
உதவின. நீதிக் கதைகள் மூலம் நெறிகளைப் போதித்தன. இங்ஙனம்,
இக்காலகட்டத்தில் தோன்றிய படைப்பாளர்கள் பல்வேறு சமூகம்
மற்றும் ரசனைக்கு ஏற்ப, தம் படைப்புகளை
அமைத்தனர்.
இச்சிறுகதைகளின் வழிப் பெறப்பட்ட சமூகப் பயன்
மற்றும்
இலக்கியப்பயனைக் காணலாம்.
சமூகப் பயன்
இக்காலகட்டத்தில்
எழுந்த சிறுகதைகள் குழந்தை மணம்,
விதவைக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை,
பொருந்தா
மணம், மூடநம்பிக்கை, சாதிக்கொடுமை,
தீண்டாமை,
வறுமைக்கொடுமை ஆகிய சமூக இன்னல்களைத் தெளிவுபடுத்தின.
எடுத்துக்காட்டு : வரதட்சணைக் கொடுமையை
விளக்கும் இரு
சிறுகதைகள்:
1)
சி.சு.செல்லப்பா எழுதிய
மஞ்சள் காணி 2) தேவன் எழுதிய
சுந்தரம்மாவின் ஆவி |
இக்கதைகளின்மூலம் இதுபோன்ற
கொடுமைகள் நின்றால்தான்
உலகம் உருப்படும் என்பது
சுட்டப்படுகிறது. இவ்விரு
சிறுகதைகளுக்கும் கதைக்கரு ஒன்றாயினும் கதையின்போக்கு
படைப்பாளர்களின் சிந்தனைக்கு உரியதாகின்றது.
இலக்கியப் பயன்
இக்காலகட்டத்தில்
தோன்றிய சிறுகதைகள் மக்கள்
வாழ்வையும், காலத்தையும் உள்ளடக்கிப் பயனுள்ளதாகின்றன.
உரைநடையை வளர்த்து, நவீன இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
இதன் மொழிநடை இலக்கியத் தரத்திற்கும்,
இரசனைக்கும்
இடமளிக்கின்றது. இவ்வகையில் காலம்காட்டும் கண்ணாடியாகச்
சிறுகதைகள் விளங்கி, இலக்கியப்
பயனுடையதாகின்றன.
இப்பகுதியில் தொடக்ககாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு
மூன்று
எடுத்துக்காட்டுச் சிறுகதைகளைக் கூறி, அவற்றின்
போக்கு
ஆராயப்படுகிறது. இதன் வழிப் படைப்பாளரின் சிந்தனையும்,
இலக்கியத்தரமும் வெளிப்படுத்தப்படுகின்றன.
2.2.1
வ.வே.சு.ஐயரின் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம்
தேசபக்தரும், பன்மொழி அறிஞருமான
வ.வே.சு.ஐயர்
அவர்களின் இச்சிறுகதை தமிழ்ச் சிறுகதைகளுக்கான முன்னோடி.
இவருடைய இந்தக் கதை விவேகபோதினி
என்ற மாத இதழில்
1915 செப்டம்பர், அக்டோபர்
இதழ்களில் தமிழிலும்,
ஆங்கிலத்திலும் வெளிவந்தது. சிறுகதைகள் வெளிவந்த காலத்தில்
அதன் போக்கு எங்ஙனம் இருந்தது என்பதை அறிய இச்சிறுகதை
பெரிதும் உதவுகிறது. இப்பகுதியில் கதைச்சுருக்கம், படைப்பாளர்
சிந்தனை, இலக்கியத் தரம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
கதைச் சுருக்கம்
கதையை, குளத்தங்கரையில்
இருக்கும் அரச மரம் ஒன்று
கண்டும், கேட்டும் கூறுவதுபோல் படைப்பாளர் எழுதியுள்ளார்.
பிராமணக் குடும்பத்திலிருக்கும் சிக்கல்,
சமூகச்சிக்கலாய்
வெளிப்படுத்தப்படுகிறது. கதைத்தலைவியின் அன்பு,
பண்பு,
அழகினை அரசமரம் ரசனையுடன் கூறுவதன் மூலம் நம் மனத்தில்
பதிய வைக்கிறார் படைப்பாளர். கதைத் தலைவி ருக்மணிக்கு
அவளின் 12ஆம் வயதில் நாகராஜனுடன் திருமணம் நிகழ்கிறது.
அவளுக்குத் திருமண உறவு நிகழும் முன்னரே அவள் தந்தைக்குத்
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழையாகி விட, நாகராஜன் வீட்டார்
அவளைத் தள்ளி வைத்துவிட்டு அவனுக்கு இரண்டாம் திருமணம்
செய்துவைக்க ஏற்பாடுகள் செய்து விடுகின்றனர். இதுபற்றி ருக்மணி
நாகராஜனிடம் பேசும்போது, ‘தாய், தந்தையின் வார்த்தைகளைத்
தட்ட முடியாது. ஆனால் நான் உன்னைக் கைவிட மாட்டேன்’
என்று ஆறுதல் கூறுகிறான். ஆனால் நாகராஜனின் எண்ணமோ,
பெற்றோரின் பேச்சை மதிப்பதுபோல் நடந்துகொண்டு, அந்தத்
திருமணத்தை நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்
என்பதேயாகும்.
ஆனால் அவன் இந்தத்
திட்டத்தைத் தன் நண்பனிடம்
மட்டுமே கூறுகிறான். விளையாட்டிற்காக ருக்மணியிடம் கூறாமல்
மறைத்து வைக்கிறான். இதையறியாத நிலையில், மென்மை உள்ளம்
கொண்ட ருக்மணி அவன் கைவிட்டு விட்டான் என்று
கருதிக்
குளத்தில் மூழ்கி உயிரை விட்டு விடுகிறாள்.
இறுதியில் தன்
விளையாட்டுத்தனத்தால் மனைவியை இழந்து விட்டோம் என்று
வருந்தி நாகராஜன் சன்னியாசம் வாங்கிக் கொள்வதோடு கதை
நிறைவடைந்துள்ளது.
படைப்பாளனின் மனத்தை
நெருடிய செய்திகளே
சிறுகதையாய் வெளிப்பட்டுள்ளன.
படைப்பாளர் கதையின்
இறுதியில் மென்மை உள்ளம்
கொண்ட பெண்களுக்கு விளையாட்டிற்காகக் கூடத் துன்பம் ஏதும்
செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். இதிலிருந்து
படைப்பாளர் இச்சிறுகதையைச்
சமூக நோக்கோடு
படைத்திருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறாக,
தமிழ்ச்
சிறுகதையின் முதல் கதையின் போக்கு அமைந்திருந்தது.
இலக்கியத்தரம்
இக்கதையை அரசமரம்
கூறுவதுபோல் அமைத்திருப்பது
படைப்பாளரின் புதிய உத்தியைக் காட்டுவதாகிறது. இக்கதை
காவிய
ரஸம் பொருந்தி, கருத்தமைந்த கதையாகி, சமூகச்சிக்கலை
வெளிப்படுத்துகிறது. பிராமணக் குடும்பத்திற்குரிய பேச்சு வழக்கு
இடம்பெற்றிருப்பதால் எளிமையான தமிழ் வழக்கிற்கு இடமில்லாமல்
போகிறது. இச்சிறுகதை இன்புறுத்தல் மற்றும் அறிவுறுத்தலுக்கும்
இடமளிப்பதால் இலக்கியத் தரத்திற்கும் உரியதாகிறது.
2.2.2
புதுமைப்பித்தனின் சிறுகதை - ஒரு நாள் கழிந்தது
புதுமைப்பித்தன்
தமிழ்ச் சிறுகதைகளுக்கென ஒரு புதிய
சகாப்தத்தை உருவாக்கியவர். இன்றைய நவீன இலக்கியத்திற்குப்
பலமான அடிப்படை அமைத்தவர். உலகச்
சிறுகதைகளின்
தரத்திற்குத் தமிழ்ச் சிறுகதைகளை உயர்த்தியவர். ‘நான் கண்டது,
கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது
ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்’ என்கிறார் புதுமைப்பித்தன். இவருடைய கதைகள்
எதார்த்தப்
(Realism) போக்கிற்கு
இடமளிக்கின்றன. இவருடைய ஒரு
நாள் கழிந்தது சிறுகதை
மணிக்கொடி பத்திரிகையில் 1937ஆம் ஆண்டு வெளிவந்தது.
இச்சிறுகதையின் போக்கினைக் காணலாம்.
கதைச்சுருக்கம்
ஓர்
எழுத்தாளரின் ஒரு நாள் வாழ்க்கை காட்டப்படுகிறது.
அவரது வீட்டின் அமைப்பு மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையை
நேரில் காண்பது போன்றதொரு நிலையில் எழுத்துகளாகியுள்ளன.
அவர் குழந்தையின் துறுதுறுப்பும், வாய்த்துடுக்கும் நம்
வீட்டு
மற்றும் அண்டை வீட்டுக் குழந்தைகளை நினைவூட்டுவதாயுள்ளன.
அவர் நண்பர்களிடம் பேசுவது, அவர்களை
உபசரிப்பது
போன்றவை வெகு இயல்பாய் அமைந்துள்ளன. இறுதியில் அவர்,
நண்பரிடம் மூன்று ரூபாய் கேட்க, அவர் தன்னிடமிருக்கும்
எட்டணாவை மட்டும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
இதைப்
பார்த்துவிட்டு அவர் மனைவி உங்களுக்கு வேலையில்லையா?
என்று கேட்டுவிட்டு, திடீரென்று நினைவு வந்தவளாக
அதில்
காப்பிப்பொடி வாங்கி வரச் சொல்கிறாள். எழுத்தாளர்
இதைக்
கடைக்காரனுக்குத் தருவதற்காக வைத்திருக்கிறேன் என்று கூற,
அது
திங்கட்கிழமைக்குத் தானே... இப்பொழுது போய் வாங்கி
வாருங்கள்
என்று கூறுகிறாள். அப்பொழுது திங்கட்கிழமைக்கு...
என்று அவர்
இழுக்க, அவள் திங்கட்கிழமை பார்த்துக்
கொள்ளலாம் என்பதோடு
கதை முடிக்கப் பட்டுள்ளது.
படைப்பாளர்
இக்கதையை அனுபவித்து, ரசனையோடு
எழுதியிருப்பது தெரியவருகிறது. சிறுகதையின் ஒவ்வொரு வரியிலும்
உண்மையின் தாக்கம் குடிகொண்டிருக்கிறது. நாமே அனுபவிப்பது
போன்றதொரு பிரமிப்பினைச் சிறுகதை
ஏற்படுத்தியுள்ளது.
இச்சிறுகதையின் மூலம் படைப்பாளரின் சிந்தனை கீழ்க்காணுமாறு
வெளிப்படுகிறது.
எதிர்காலத்திற்கு இடமின்றி அன்றைய
பொழுதை எப்படிக்
கழிப்பது என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பொதுமக்கள்
இங்குக் காட்டப் பெறுகின்றனர்.
கதைச்சூழல், பாத்திரங்களின் இயல்புத்தன்மை
ஆகியவற்றைப் படிப்பவரின் மனத்தில் பதியச்செய்து
அதன் வழிச் சிந்திக்கத் தூண்டுகிறார் படைப்பாளர்.
இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் நெறியை
வாழ்க்கை நெறியாகக் காட்டுகிறார்.
கதைமாந்தர்களின் வழிநின்று படைப்பாளர்
எதார்த்தமாகக்
கதையைக் கூறிச் செல்கிறாரேயன்றி எந்த ஒரு சிக்கலையும்
அவர் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நெறி இதனால்
உணர்த்தப்படுகிறது.
இலக்கியத் தரம்
இச்சிறுகதையில்
இடம்பெறும் பாத்திரங்களின் பொதுத்தன்மை,
பேச்சு வழக்கு, பாவனைகள், சம்பிரதாயம் போன்றவை இலக்கியச்
சிந்தனைக்கு உரியனவாகின்றன. இச்சிறுகதை மெய்ப்பாடுகளுக்கு
இடமளிக்கிறது. உண்மைத் தன்மைக்கு இடமளித்து, படிப்பவரின்
சிந்தனையைத் தூண்டுகிறது.
2.2.3
தி.ஜானகிராமனின் சிறுகதை - முள்முடி
இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில்
பணிபுரிந்தவர். சங்கீதத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். ஆசிரியராகப்
பணியாற்றியவர். தன்னைத் தாக்கிய விஷயங்களையே எழுத்துகளாய்
வடித்ததாகக் கூறுகிறார். இவருடைய கதைகள் உணர்வு வடிவமாக
அமைந்துள்ளன. கலை வடிவத்தைக் காட்டிலும் இவர் உணர்வு
வடிவத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகக்
கூறுகின்றார்.
அத்தகைய உணர்வின் அடிப்படையில் எழுந்த
சிறுகதையாக
முள்முடி கதை இங்கு
இடம்பெறுகிறது. இக்கதையின் மூலம்
படைப்பாளரின் சிந்தனையுணர்வையும் இலக்கியத்
தரத்தையும்
காணலாம்.
கதைச் சுருக்கம்
ஒரு ஆசிரியரின் மன உணர்வுகள் சிறுகதையாய்
வெளிப்பட்டுள்ளன. அவர், தன்னுடைய 36 வருட கால ஆசிரியப்
பணியில் ஒரு மாணவனைக் கூட அடிக்கவில்லை. இதற்காக
அவரை
அவர் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊரார்கள்,
அவர்
மனைவி உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர். ஏன்
அவர்கூட மனத்தளவில் தன்னைப் பாராட்டி மகிழ்கிறார்.
அத்தோடு
அவர்,
தன்னுடன் வேலை செய்த மற்ற ஆசிரியர்களுடன்
ஒப்பிட்டுப்பார்த்து, பெருமிதம் கொள்கிறார். மற்றவர்களிடம்
இருக்கும் குணக்குறைபாடு தன்னிடம் ஏதுமில்லை என்று இறுமாப்புக்
கொள்கிறார்.
இதன்
காரணமாகவே தான் ஓய்வு பெற்றதை அவர்கள்
மேளதாளத்துடன் கொண்டாடுகின்றனர் என்று எண்ணி எண்ணி
வியக்கிறார். இதற்கு அடுத்த நிகழ்ச்சியாக வகுப்புத்தலைவன் ஒரு
மாணவனை அழைத்துக்கொண்டு அவரிடம் வந்து தயங்கியவாறே,
பயந்து கொண்டு கூறுகிறான். ‘இவன் போன வருஷம் இங்கிலீஷ்
புக் திருடியதற்காக வகுப்புலே யாரும் இவனிடம் பேச வேண்டாம்
என்று கூறிவிட்டீங்க, அதுபடியே நாங்களும் பேசல. இன்னிக்கு
பார்ட்டிக்கு வசூல் செய்தப்ப இவனும் பணம்
தந்தான். நான்
வேண்டாமென்று சொல்லவும் அவன் அம்மாவை
அழைத்துக்
கொண்டு உங்களைப் பார்க்க வந்தான். அவன் தெரியாம
பண்ணிட்டான் சார். அவனை மன்னிச்சிடுங்க. அதற்கப்புறம்
அவன்மேல் எந்தப்புகாரும் இல்லை என்று கூறுகிறான். அவன்
அம்மாவும், சிறுசுதாங்க. . . கொஞ்சம் பெரிய
மனசு பண்ணி
ஏத்துக்குங்க. பையன் ஒரு வருஷமா சொரத்தே
இல்லாம
இருந்தாங்க. அதனால் தான் நான் கூட்டியாந்தேன்' என்கிறாள்.
‘இந்தப் பயலுங்க இப்படி செய்வாங்கன்னு எனக்குத்
தெரியாம
போச்சே’ என்கிறார். அதற்கு அவர் மனைவி ‘நீங்க சொன்னதைத்
தானே செஞ்சாங்க’ என்கிறார். இதைக்கேட்டு ஆசிரியர்
வேதனையோடு சிரிக்கிறார். சுவரில் மாட்டியிருந்த படத்திலிருக்கும்
முள்முடி அவர் தலையை ஒரு முறை அழுத்தியதுபோல்
உணர்கிறார் என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
படைப்பாளர்
தான் பார்த்து அனுபவித்த நிகழ்வுகளைக்
கதையாகக் கொடுத்திருக்கிறார். ஒரு
சிறந்த கருத்தை
வெளிப்படுத்தும் நோக்கோடு இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய
கதைமாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களது
மன உணர்வுகள் வெளிப்படுத்தப்
பட்டுள்ளன. இறுதியில்
மேலோங்கியிருக்கும் மன உணர்வுகளே கதையின்
கருத்தாய்
உரைக்கப்படுகிறது. இக்கதையின்
மூலம் படைப்பாளரின்
முடிவுகளைக் காணலாம்.
படைப்பாளர்
பிறரின் மன உணர்வுகளை மதிக்கும்
தன்மைக்கு உரியவராகிக் கதைமாந்தர்களைப்
படைத்துள்ளார்.
தான் அறியாத நிலையிலே,
தன்னால் ஒரு மாணவன் ஒரு
வருடமாய்த் தண்டனை அனுபவித்திருப்பதை ஆசிரியர்
அறிந்த நிலையில் அவருடைய கர்வம் சிதறுவதைக்
காணமுடிகிறது.
ஆசிரியர் தன் தவற்றை
அறிந்த நிலையிலேயே முள்முடி
அழுத்துவதால் ஏற்படும் வேதனையை உணருகிறார்.
படைப்பாளர்
ஆசிரியரின் பாத்திரப் படைப்பைத்
தொடக்கத்திலிருந்து மிகச் சிறப்பாக
வெளிப்படுத்தி
இறுதியில் அவருடைய கர்வத்தைப்
போக்குவது,
‘ஆனைக்கும் அடிசறுக்கும்’ என்ற
பழமொழியின்
அர்த்தத்தை உணர வைப்பதாயுள்ளது.
இலக்கியத் தரம்
கதையின்
பெரும்பகுதி பேச்சு வழக்கிற்கு இடமளித்து,
கதையின் போக்குச் சிறப்பாக்கப்பட்டுள்ளது. கதையின்
முதலும்
முடிவும் சிறப்பாக உரைக்கப்பட்டுள்ளன. படைப்பாளர்
சமூக
நோக்கோடு, ஆசிரியர் பணியின்
சிறப்பினைத் தெளிவு
படுத்தியிருக்கிறார். ஒரு சிறிய கதைமாந்தரின் மூலம் ஒரு பெரிய
உண்மையை உணர்த்துவது மற்றும் சிந்திப்பதற்கு இடம் கொடுப்பது
ஆகியவற்றின் மூலம் இக்கதை இலக்கியத் தரத்திற்கு உரியதாகிறது.
|