4.2 சிறுகதைகளில் தனிமனிதச் சிக்கல்கள்
சிறுகதைகள் காட்டும் சமூகச் சிக்கல்களுள் தனிமனிதச்
சிக்கல்களே முதலிடம் பெறுகின்றன. தனிமனிதன் அனுபவிக்கும்
சிக்கல்கள் குடும்பம், சமூகம், நாடு தழுவிய அளவில்
பரவிச்செல்வதால் தனிமனிதச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல்
என்பது அவசியமாகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும்
சிக்கலுக்கிடமில்லாமல் செம்மையடையும் பொழுதுதான் சமூக
வாழ்வு நலம்பெற இயலும். சிறுகதைகள் தனிமனிதச் சிக்கல்களை வெளிப்படுத்தும்
அளவில் மனித மனங்களை உளவியல்
நோக்கில் ஆராய
இடமளிக்கின்றன. தனிமனிதப் போராட்டங்களை அறிவதன் மூலம்
தனிமனித
உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடிகிறது. சமூகக்
கட்டுப்பாடுகளாலும், சூழ்நிலைகளாலும் மனிதனுள் மறைந்து
கிடக்கும் உணர்ச்சிகளை வெளிக்கொணர இச்சிறுகதைகள் துணை
நிற்கின்றன. இக்கதைமாந்தர்கள் நம்மிடையே, நம் குடும்பத்தில்,
சமூகத்தில் என்றும் பரவியிருக்கின்றனர். இத்தகையவர்களை
இனம்கண்டு அவர்களது பிரச்சனையைத் தீர்க்கும் பணியில்
இச்சிறுகதைகள் பெரும் பங்காற்றுகின்றன. இவ்வகையில் தனிமனிதச் சிக்கல்களுக்குரிய கதைகளாக
மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் அனைத்தும்
அதனதன் கதைச் சுருக்கம், சிக்கல்கள், தீர்வுகள் என்ற
நிலைகளில்
விளக்கப் பெறுகின்றன. 4.2.1 கந்தர்வனின் ‘மைதானத்து மரங்கள்’
தனிமனிதச் சிக்கல்களை வெளிப்படுத்தும் முதலாவது
சிறுகதையாக இது
இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைக்
காணலாம்.
கதைச்சுருக்கம்
இக்கதையில் ‘முத்து’ என்ற கதைமாந்தனின் மன உணர்வுகள்
காட்டப்படுகின்றன.
முதலில் முத்துவிற்கும், அந்த
மைதானத்திற்கும் இடையேயுள்ள நெருக்கம் காட்டப்படுகிறது.
மைதானத்திற்கு அருகில் அவன் வீடு இருப்பதில் அவனுக்குப்
பெருமை அதிகம். இளம் வயதிலிருந்து அந்த மைதானம்
அவனுக்கு ஆதரவு அளிக்கிறது. அந்த மைதானத்தின்
மகிமைக்குக் காரணம்
கிளைகளை விரித்துப் பரந்துநிற்கும் அந்த
மரங்கள்தாம். மைதானத்தின் ஓரங்களைப் போர்த்து நிற்கும்
அந்தப் புளிய மரங்கள் ‘விருட்சங்கள்’ என்று கூறுமளவிற்குப்
பெரியதாய்
இருந்தன. ஊர் நடுவேயிருந்த அந்த மைதானம்
உயர்நிலைப் பள்ளிக்குச் சொந்தமானது. மாலையில்
விளையாட்டுப்
பீரிடில் பையன்கள் அந்த மைதானத்தில் விளையாடிவிட்டு
வீட்டுக்கு ஓடுவார்கள்.
ஆனால் முத்து மட்டும் ஆற அமர
ஒவ்வொரு மரமாய்த் தொட்டுப் பார்த்துவிட்டு, மைதானத்தை
ஒரு
முறை மேற்பார்வை பார்த்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போவான்.
முத்து சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடியில்
அதிகமாய் அமர்ந்ததில்லை. மைதான வெளிதான் அவனை
மிகவும் கவர்ந்தது. இவனால் அந்த வயதில் ஓரிடத்தில்
உட்கார
முடியாது. ஆடி ஓடி அயர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் மைதானத்தை
விட்டே வெளியேறுவான். அவன் எட்டாம் வகுப்புப்
படிக்கும்போது பீஸ் கட்டாத நிலையில் வகுப்பை விட்டு
வெளியேற்றப்பட்டான்.
அப்பொழுதுதான் அவன் முதன் முதலாகத்
தன் வறுமையை நொந்தபடி மைதானத்து மரத்தடியில் அமர்ந்து
மைதானத்தை வெறித்து நோக்கினான். பீஸ் கட்டாததால்
வெளியேற்றப்பட்ட அவமானம் அவன்
உடலை நடுங்கச் செய்தது.
அதனால் அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.
நெடுநேரம்
அப்படியே அமர்ந்திருந்தவனை மரத்தின் சிலுசிலுப்பும்,
குளுமையும் ஆக்கிரமித்து, அவன் மனபாரத்தை லேசாய்க்
கரைத்தது. அதன்பின் அவன் மைதான வெளியில் குறைவாகவே
விளையாடினான். மரத்தினடியில் அதிக நேரம் அமர
ஆரம்பித்தான்.
வாழ்க்கையில் அவனுக்குத் துன்பம் ஏற்பட்ட
பொழுதெல்லாம் அந்த
மரங்கள் அவனுக்கு மருந்தாயின. எந்தத்
தேவைக்காகவும், எதற்காகவும் அவன் ஊருக்குள்
சென்றதேயில்லை. மைதானத்து மரங்களிடம் மட்டுமே அவன்
துன்பத்தைப் பகிர்ந்து கொண்டான். ‘அனுபவ பாத்தியதைன்னு
வந்தா பள்ளிக்கூடப் புள்ளங்களைவிட முத்து தான் இதை ரொம்ப
அனுபவித்து விட்டான்’ என்று
ஊரார் சொல்லுமளவிற்கு
மரப்பந்தலின் கீழ் இவன் தன் துக்கங்களையும், துயரங்களையும்
மறைத்துக் கொண்டான்.
‘ஆம்பிள்ளைனா நாலு பேருகிட்ட பேசிப்பழகணும்,
அதைவிட்டுச் சண்டைன்னா
சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடறது,
இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகத்துக்கு வந்து வீட்டுக்கு வர்றது.
இப்படி இருப்பதற்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள
தூக்குப்போட்டுத் தொங்கலாம்’ என்ற மனைவியின் உக்கிரமான
சண்டைக்குப் பிறகு, அவளை நாலுசாத்துச் சாத்திவிட்டு மீண்டும்
அவன் மரத்தடியையே அடைக்கலமாக நாடி ஓடுவான். இங்ஙனம்
அவன் மனத்திற்கு இதமூட்டிய மைதானத்து மரங்களை ஒரு நாள்
வெட்டப்பட்ட நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைகிறான் அவன்.
சினிமாக் கொட்டகை கட்டும் பொருட்டு மைதானத்து மரங்கள்
வெட்டப்பட்டதை அறிந்து கலங்குகிறான். மரங்கள்
வெட்டப்பட்டதை அவன் பகிரங்கக் கொலையாகக் கருதிக்
கலங்குகிறான். இனித் தன் கவலைகளை வாங்கிக்கொள்ள யார்
இருக்கிறார்கள் என்று எண்ணும்போதே அவன் கண்ணிலிருந்து
கண்ணீர் மழை பெருக்கெடுத்தது. எவ்வளவு துக்கங்களை
அடைந்தபோதும்கூட அவன் மரத்தடியில் வந்து
அமர்ந்திருப்பானே ஒழிய, அழுததேயில்லை. முதன் முறையாக
அவன் மரக்கொலைகளைப் பார்த்துப் பொருமிப் பொருமி
அழுதான். அவனைப் பார்த்து உடன் வந்த அவன் குழந்தையும்
அழுதது. இருட்டிய பிறகும் வெகுநேரம் அங்கேயே இருந்தான்.
பின் வீட்டிற்குச் சென்றான். மனைவி, ‘இனி மேலாச்சும்
ஊருக்குள்ளே போய் நம்மளைப்போல் ஒவ்வொருவரும் எப்படி
கஷ்டப்படறாங்கன்னு
பாருங்க’ என்றாள்.
மறுநாள் இவன் பொழுது சாய்ந்ததும், தன்னை ஒத்த
ஜனங்களைத்தேடி
ஊருக்குள் சென்றான். அவன் மைதானத்தைத்
தாண்டும் போது மரங்கள் உயிரற்றுக் கிடப்பதைப்
பார்த்துக்கொண்டே அவன் உயிரோடு ஊருக்குள் நடந்து
சென்றான் என்பதோடு கதை நிறைவு பெறுகிறது.
கதை காட்டும் சிக்கல்கள்
இச்சிறுகதையின் மூலம் முத்துவின் உளவியல் சிக்கலை
அறிய
முடிகிறது. அவன் இளமையிலிருந்தே மைதானத்தையும்,
மரங்களையும் நேசிக்கத் தொடங்கியதன் விளைவாக அவற்றின்
நினைவு
பசுமரத்தாணியாக அவன் மனத்தில் பதிந்துவிடுகின்றது.
அதன்
காரணமாகவே
அவன் தன் இன்பத்தையும், துன்பத்தையும்
அந்த
மைதானத்து மரங்களுடனேயே இணைத்துக்
கொள்கிறான். மனிதர்களிடம் மற்றும் மனைவியிடம்
அவமானப்பட நேர்ந்த
பொழுதெல்லாம், அமைதி தரும்
மரங்களை நேசித்தான். மரங்கள் அவனுடைய மனத்திற்கு
இதமூட்டுவதாக எண்ணுகிறான்.
துன்பத்தைப் பிற மனிதர்களிடம்
பகிர்ந்து கொள்ளாத அவனுக்கு,
அவனைப்போலவே ஊமையாய்
இருக்கும் மரங்கள் ஆறுதல்
தருவன ஆயின.
மரங்கள் உயிருடன் இருப்பதாகக் கருதுவதாலேயே அவை
தன்
உணர்வுகளுக்கு ஆறுதல் அளிப்பதாக எண்ணுகிறான்.
அவை
வெட்டப்பட்ட போதும் அழுகிறான். இங்ஙனம் மரங்களை
மட்டுமே தன் மனத்திற்கு இதமளிக்கவல்ல துணையாக
அவன் கருதும்
நிலையிலேயே அவன்
குடும்பத்தையும் பாதிக்கும்
அளவில் அது
சமூகச் சிக்கலுக்கும் இடமளிப்பதைப் படைப்பாளர்
சுட்டிக்காட்டுகிறார்.
தீர்வுகள்
இக்கதை காட்டும் சிக்கலுக்குப் படைப்பாளரால் தீர்வு
வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளும் முத்து,
குடும்ப உறவுகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லை.
இதுவே குடும்ப அமைப்பில் குழப்பம் ஏற்படுவதற்குக் காரணமாகக்
காட்டப்படுகிறது.
அதே சமயம் அவன் சமூக உறவிற்கும் இடம்
கொடாத நிலையில் அவன் மேலும் மனச்சிக்கலுக்கு
உரியவனாகிறான். தம் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாத
நிலையிலேயே முத்து போன்றவர்கள் தனிமை விரும்பிகளாக
மாறுகின்றனர். குடும்ப உறவு, சமூக உறவு ஆகியவற்றை
நன்முறையில் பேணுவதாலும்,
சிக்கல்களை எதிர்கொண்டு வாழக்
கற்றுக் கொள்ளுவதாலும் இச்சிக்கல்களைத் தீர்க்கமுடியும்
என்பது
படைப்பாளரின் தீர்வாக அமைகிறது. இதன் காரணமாகவே
படைப்பாளர் கதையின் இறுதியில் மரங்களை உயிரற்றதாக்கி,
உயிருடன் இருக்கும் மனிதர்களிடம் உணர்வுகளைப்
பரிமாறிக்கொள்ள, முத்து ஊருக்குள் முதன்முறையாகச்
செல்வதாகக் காட்டுகிறார். இதுவே கதையில் இடம்பெற்றுள்ள
தனிமனிதச் சிக்கலுக்கான தீர்வாகவும் அமைகிறது.
4.2.2 புதுமைப்பித்தனின் ‘பால்வண்ணம் பிள்ளை’
தனிமனிதச் சிக்கல்களை வெளிப்படுத்தும் இரண்டாவது
சிறுகதையாக
இது இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைக்
காணலாம்.
கதைச் சுருக்கம்
பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா.
‘முயலுக்கு மூன்றே
கால்’ என்று சொல்லும் சித்த உறுதி. விடாக்
குணம் அவருக்கு. இம்மாதிரியான குணங்கள் படைவீரனிடமும்,
சத்தியாகிரகிகளிடமும் இருந்தால் அது பெருங்குணமாகக்
கருதப்படும். அந்தக்குணம் இவரிடம் தஞ்சம் புகுந்ததால் அது
அசட்டுத்தனமான பிடிவாதம் ஆகியது. பால்வண்ணம் பிள்ளை
ஆபீஸில் பசு, வீட்டிலோ ஹிட்லர். அன்று வீட்டிற்கு வரும்போது
ஒரே கோபம் அவருக்கு. மெக்ஸிகோ
தென் அமெரிக்காவில் தான்
இருக்கவேண்டும் என்ற வேகம் வேறு. அவருக்கு நான்கு
குழந்தைகள். அவர் மனைவியோ உழைப்பிலும், பிரசவத்திலும்
சோர்ந்தவள். அவளின் கைக்குழந்தைக்கு முந்திய
குழந்தை
சவலையாக இருந்தது. இந்த இரண்டு குழந்தைகளையும் போஷிக்க,
பால் வாங்கிக் கட்டுபடியாகாத
காரணத்தால் ஒரு மாடு
வாங்கவேண்டும் என்று விரும்பினாள். தெய்வத்தின் அருள்
கிடைத்த
பக்தன் அதை உடனடியாகச் சோதிக்க
விரும்புவதைப்போல, கணவனைப் பார்த்தவுடன் இதைச்சொல்ல
அவள் உதடுகள் துடித்தன.
ஆனால் அவரோ வீட்டிற்குள் நுழைந்தவுடன் மெக்ஸிகோ
எங்கேயிருக்கிறது என்பதை அறியும் பொருட்டுப் பூலோகப்
படத்தைத் தேடினார். ஒரு வழியாக அவள் இதைக்கூறியபொழுது,
‘மாடு கீடு வாங்க முடியாது, எம் புள்ளைய நீத்தண்ணியைக்
குடித்து
வளரும்’ என்றார். பின்
மெக்ஸிகோ வட அமெரிக்காவில்
இருந்தால் கோபம் வராதா? அவருக்கு?
பால் பிரச்சனை அத்தோடு நின்றுவிடவில்லை. மனைவியின்
கையிலிருந்த
கெட்டிக்காப்பு, பசுவும் கன்றுமாக மாறியது. இரண்டு
நாள் கழித்தே பால்வண்ணம் பிள்ளை அதைப் பார்த்தார்.
மனைவியை அழைத்தார். அவள் உள்ளுக்குள் பயத்துடனும்,
வெளியில் சிரிப்புடனும் பேசினாள். மாடு எப்பொழுது, யார்
வாங்கியது என்று விசாரித்தார். அவளும்
பதில் கூறினாள். அன்று
புதுப்பாலில் தயாரித்த காபியை அவர் பருகவில்லை. அதிலிருந்து
அவர் காபியும் மோரும் பருகவில்லை. அவர் மனைவிக்கு அதில்
மிகுந்த வருத்தம். எனினும்
வம்ச விருத்தி எனும் இயற்கை விதி
அவளை வென்றதால் அவரை அவள் கண்டு கொள்ளவில்லை.
இப்படியே பதினைந்து நாட்கள் சென்றன. அன்றிரவு
பிள்ளையும்,
சுப்புக்கோனாரும் வீட்டினுள் நுழைந்தனர். பிள்ளை
மாட்டையும், கன்றையும் 25 ரூபாய்க்குப் பிடித்துப்போகச்
சொன்னார். கோனார், சாமி '60 ரூபாய் பெறுமே’ என்றார்.
மனைவியோ,
மாடு ‘70 ரூபாய் ஆயிற்றே’ என்றாள். அதோடு
குழந்தைகளுக்குப் பாலும் ஆயிற்று. மேல்
வரும்படியும் வருகிறது
என்றாள். பிள்ளை, உனக்காக வேண்டுமானால் ‘முப்பது ரூபாய்’
இப்பொழுது மாட்டைப் பிடித்துச் செல் என்று கயிற்றை
அவிழ்த்தார். அவன் காலையில் பிடித்துச் செல்கிறேன் என்பதைக்
காதில் வாங்காதவராய் மாட்டை அவிழ்த்துக் கொடுத்தார்.
மனைவியைப் பார்த்து,
‘எம் புள்ளங்க நீத்தண்ணி குடித்து
வளரும்’ என்றார். மூத்த பையன், ‘அம்மா என் கன்னுக்குட்டி’
என்றழுதபொழுது ‘சும்மா கெட சவமே’ என்றார் பால்வண்ணம்
பிள்ளை. இத்துடன் கதை
முடிகிறது.
கதை காட்டும் சிக்கல்கள்
பால்வண்ணம் பிள்ளையின் பிடிவாதமே தனிமனிதச்
சிக்கலுக்கும், குடும்பச் சிக்கலுக்கும் காரணமாகின்றது. தான்
சொன்னதுதான் நடக்க வேண்டும், தான் விரும்பியபடிதான்
மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணும் அளவில்
ஆணாதிக்கப் போக்கு
வெளிப்பட்டு, சிக்கல் உருவாகிறது. மனைவி,
மற்றும் குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிக்கும்
அளவிற்குத்
தனிமனிதனின் பிடிவாதம் தேவையற்றதாக உணரப்படுகிறது.
குறைந்த விலைக்கு அவசர அவசரமாக மாட்டை விற்பது
என்பதன்
மூலம் தனிமனிதனின் குறுகிய மனப்போக்கே
சிக்கலுக்குக் காரணம்
என்பதை அறியலாம். நாம் மற்றவர்களின்
மனநிலையைப் புரிந்து
கொள்ளாமல் செயல்படுவதும்
சிக்கலுக்குக் காரணமாய்க்
காட்டப்படுகிறது. படைப்பாளர்
இக்கதையினை நகைச்சுவைக்கு
இடமளிக்கும் வகையில்
படைத்திருப்பதால் மேலோட்டமாகப்
பார்க்கும்பொழுது இது
தனிமனிதச் சிக்கலுக்கு இடம் கொடாததாயும்,
உள்ளாழ்ந்து
பார்க்கும்பொழுது உளச்சிக்கலைத்
தெளிவுபடுத்துவதாயும்
உள்ளது.
தீர்வுகள்
இக்கதைக்குப் படைப்பாளரால் நேரடியான தீர்வு ஏதும்
வழங்கப்படவில்லை. இருப்பினும் நகைச்சுவைபடக் கூறுவதன்
வாயிலாகச் சிக்கலையும் வெளிப்படுத்தி, தீர்வுகளையும்
உரைக்கிறார். ‘இத்தகைய பிடிவாதம், படைவீரனுக்கும்,
சத்தியாக்கிரகிகளுக்குமே
பொருந்தும்’ என்பதன் மூலம் இக்குணம்
ஒரு குடும்பத்தலைவருக்குத் தேவையில்லை என்பது மறைமுகத்
தீர்வாகிறது. மேலும் அவர் ஆபீஸில் பசு, வீட்டில் ஹிட்லர்
என்பதன் மூலம்
பிள்ளையின் உளச்சிக்கல்
வெளிப்படுத்தப்படுகிறது. படைப்பாளரால், குடும்பச்சிக்கல்களுக்கு
இடமளிக்கும் பிள்ளையின் அசட்டுப் பிடிவாதம் தவிர்க்கப்பட
வேண்டும் என்பது
சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுவே தீர்வாகவும்
அமைகிறது.
இச்சிறுகதை சிரிக்கவும், சிந்திக்கவும் இடமளிக்கிறது.
4.2.3 ஹரணியின் ‘இருளில் இரு பறவைகள்’
இது தனிமனிதச் சிக்கல்களை வெளிப்படுத்தும் மூன்றாவது
சிறுகதையாக அமைந்துள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைக்
காண்போம்.
கதைச்சுருக்கம்
ஒரு தந்தை மகனிடம் தோழமை உணர்வோடு
சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை இச்சிறுகதை விவரிக்கிறது.
தந்தை தான்பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் மகனிடம்
பகிர்ந்து கொள்கிறார். அவர் வாழ்க்கையில் பலபேர்
இழுக்கக்கூடிய தேரை, தாம் ஒருவரே கஷ்டப்பட்டு இழுத்துக்
கரை சேர்த்ததாகக் கூறுகிறார். ‘மூன்று பெண்களை நீ
வைத்திருக்கிறாய்.
நீ என் காலில் தான் வந்து விழ வேண்டும்’
என்று அவர் தமக்கை பேசியதைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு
அவர் பிச்சைக்காரன் காலில் விழுந்தாலும் உன் காலில்
விழமாட்டேன் என்று
சபதமிட்டதைக் கூறுகிறார். அதன்படி
இரண்டு பெண்களைக் கரைசேர்த்து விட்டதாகவும், மூன்றாவது
அக்காவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடத்தப் போவதாகவும்
சொல்கிறார் 'அப்புறம்
பிரச்சனையில்லை! எனினும் நீயும், உன்
தம்பியும் ஆண்பிள்ளைகளாக இருந்தாலும் உங்களுடைய
நடவடிக்கைகளைப் பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது’
என்கிறார்.
அவரது இரண்டாவது மகனின் கெட்ட சகவாசத்தையும்,
கெட்ட பழக்க வழக்கங்களையும் மூத்தமகன் ரமேஷிடம் கூறி
வருந்துகிறார். அவனிடம் 'எவ்வளவோ பேசிவிட்டேன். காலம்
வரும். அவன் திருந்துவான் என்று நம்புகிறேன்' என்கிறார். 'நீயும்,
சமீப காலமாக உன்னுடைய
நடவடிக்கைகளை மாற்றிக்
கொண்டுள்ளதை நான் அறிவேன்', என்கிறார். 'நீ சிகரெட்
பிடித்ததையும், தண்ணீர் அடித்ததையும் நான் அறிவேன்'
என்கிறார். ரமேஷிடம், 'நான் உனக்கு அறிவுரை சொல்வதாகக்
கருத வேண்டாம். உன் காதலைப் பற்றியும் கேள்விப்பட்டேன்'
என்கிறார். அந்தப்பெண் லட்சுமியிடமும் நான் பேசினேன்.
எனக்குத் திருப்திதான். அம்மா கிராமத்து வாசனையிலும்,
மரபிலும் வளர்ந்தவள். அவளை எப்படி அணுகணும்னு எனக்குத்
தெரியும். உன் மூணாவது அக்கா கல்யாணம் முடியட்டும். நீ
விரும்புகிற பெண்ணையே மணம்முடித்து வைக்கிறேன்’ என்கிறார்.
‘அதற்குமுன் முதலில் நீ கால் ஊன்றி நிற்கணும். அதற்கு
உன் பரீட்சை முக்கியம். அதில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வியில் முழுமை பெற்றால் தான் நீ காலூன்றி வேலை தேட
முடியும். வேலை அமைந்தால்தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு
வரும். இப்போ நீ
அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொண்டால்,
அக்கா திருமணம் நின்றுவிடும். நம்மளவிற்கு நம் சமுதாயம்
இன்னும் முன்னேறல. அப்படிக் கல்யாணம் ஏதும் நின்னுபோனா
நம் குடும்பத்து நிலை என்னாகும் என்று யோசித்துப் 'பாரு'
என்கிறார். நான் உன்னோட நண்பன். அப்பாவை
நண்பன் மாதிரி நேசிக்கக் கத்துக்கோ. அப்புறம் எல்லா
அர்த்தமும் புரியும்’ என்று கூறி அவர், கண்கலங்கிய நிலையில்
அறையை விட்டு
வெளியேறுகிறார்.
முதலில் கல்வி. அதன்பின் காலூன்ற ஒரு வேலை. அப்புறம்
தான் எல்லாமும் என்பதை உணருகிறான் ரமேஷ். அதுவரை
காத்திருப்பதில் தவறில்லை என்பதை அறிந்த நிலையில்
அதைப்பற்றி லட்சுமிக்கு எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன்
உறுதியாகப் படிக்க ஆரம்பித்தான்.
கதை காட்டும் சிக்கல்கள்
இச்சிறுகதை தந்தையின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி
உளவியல்
அணுகுமுறைக்கு இடமளிக்கிறது. மூன்று பெண்களைப்
பெற்ற தந்தையின் மனநிலையை இதன் மூலம் காட்டுகிறது.
உழைப்பினால் அவரும், பிறரும் உருவான விதம், தனிமனித
எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் சிக்கலைப்
புலப்படுத்துகிறது. இரண்டு மகன்களின் கூடாத நடத்தைகளினால்
மகளின்
திருமணம் நின்றுவிடக் கூடாதே என்று அவர் கருதுவது
அவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைக் காட்டுவதாக
உள்ளது. அவரது
மன உளைச்சலை மகனிடம் வெளிப்படுத்தி மகனுக்கு நண்பனாக
இருந்து அறிவுரை கூறுவது சிக்கலைக் களைவதற்கான சிறந்த
அணுகுமுறையாகிறது.
தீர்வுகள்
இச்சிறுகதையில் படைப்பாளர் தந்தைப் பாத்திரத்தின்மூலம்
சிக்கலையும், தீர்வுகளையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார்.
மகனுக்கு அறிவுரை கூறுவதன் மூலமும், அவன் அதை
ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலமும் தீர்வுகள்
வழங்கப்படுகின்றன. அறிவுரைகளும், வழிகாட்டுதலும்,
தெளிவுபடுத்தலும் சிக்கல்களைத் தீர்க்க உதவும் சிறந்த உளவியல்
அணுகுமுறைகளாகப் படைப்பாளரால்
வெளிப்படுத்தப்படுகின்றன.
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்தல்
மூலமாகவும்
சிக்கலைத் தீர்க்க முடியும் என்பதும் இக்கதையின்
மூலம் உணர்த்தப்படுகிறது.
|