5.1 சிறுகதைகளில் தத்துவக் கருத்துகள் மனிதனிடம் இயல்பாக எழுகின்ற ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களுக்கு அவன் விடை காண முயலும்போது அவனுடைய அறிவானது கூர்மை பெறுகிறது. அறிவின் துணையைக்கொண்டு அவன் சிந்திக்கும்பொழுது பகுத்தறிவினைப் பெறுகிறான். இங்ஙனம் அவன் பகுத்தறிவினைப் பெறும் நிலையிலேயே அவன் முழுமைபெற்ற அறிவினை உடையவனாகிறான். முழுமைபெற்ற அறிவினைப் பெற உதவுவதே தத்துவ நெறிகளாக அறியப்படுகின்றன. கற்பித்தலுக்கு இடமளிக்கும் தத்துவ நெறிகளை உள்ளடக்கிய சிறுகதைகளை அறிந்துகொள்வது என்பது அவசியமாகிறது (பகுத்தறிவு - பகுத்து அறியும் அறிவு/ பிரித்து அறிய உதவும் அறிவு). சிறுகதைகள் சிந்தனைக்கு இடமளிக்கும் சிறுகதைகள், வாழ்வின் அர்த்தங்களை உணர்த்தும் சிறுகதைகள், வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறுகதைகள், உலகப் பொது நியதிகளை உரைக்கும் சிறுகதைகள், கடமையை உணர்த்தும் சிறுகதைகள் எனப் பல பிரிவுகளைக் கொண்டு தத்துவ நெறிகளுக்கு இடமளிப்பனவாயுள்ளன. இத்தகைய சிறுகதைகள் கல்விப் பயனுடையனவாகி, அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றன. வாழ்க்கையின் முழுமையை உணரத் துணைநிற்கின்றன. சிறுகதையில் உள்ள தத்துவ நெறிகள் எங்ஙனம் மனிதனை மனிதனாக்கி வாழ்க்கையை வளப்படுத்துகின்றன என்பதை, படைப்பாளர் இறையன்புவின் தத்துவச் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு காணலாம். |