படைப்பாளர் இறையன்பு அவர்கள் தம்முடைய
சின்னச்
சின்ன
வெளிச்சங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம்
தத்துவ நெறிகளை வெளிப்படுத்தியுள்ளார். ஐ.ஏ.எஸ்.
அதிகாரியான இவர் தமிழ் இலக்கியப் படைப்பாளியாக மட்டும்
அல்லாமல், இளைஞர்கள்
நலனிலும் அக்கறை கொண்டவராக
விளங்குகிறார். தன்னம்பிக்கை, முயற்சி, பயிற்சி ஆகியவை
ஒருவனை எங்ஙனம் சிறப்பாக உருவாக்க உதவும் என்பதை
இவருடைய சிறுகதைகள் தெளிவுபடுத்துகின்றன. எளிய
அனுபவங்களின் சாரங்களையே சிறுகதைகளாக்கி, நமக்கு
வழிகாட்டுகிறார்.
படைப்பாளரின் தனித்தன்மை
இவர் தம்முடைய படைப்பில் உலக நெறியினைச்
சுட்டும்பொழுது அதில் அனுபவத்தெளிவு வெளிப்படுகிறது.
இவருடைய சிறுகதைகள் சிந்தனைத் தெளிவினை ஏற்படுத்தி,
அறிவினைக் கூர்மையாக்குகின்றன. மரபு சார்ந்த நெறிகளை
இவருடைய சிறுகதைகளில் காணமுடிகிறது. ‘வெற்றியா?
தோல்வியா? என்பதைக் காட்டிலும் ‘கடினமான தோல்வி;
எவ்வளவு இழப்புகளுடன் வெற்றி’ என்ற கேள்வியை
உருவாக்கித் தத்துவ நெறிக்கு இடமளிக்கிறார். இவருடைய
அனுபவத்தில் பெறப்பட்டுள்ள
சிறுகதைகள் அனைத்தும்
தத்துவக் கருத்துகளை உணர்த்துகின்றன.
இவருடைய
சின்னச் சின்ன வெளிச்சங்கள் தொகுப்பில்
52 சிறுகதைகள்
இடம்பெற்றுள்ளன. இவற்றுள் உலக நெறிகளை
உள்ளடக்கியவைகளுள் தலைப்புக்கு மூன்றாக மொத்தம்
9
சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று தலைப்புகளில்
விளக்கப் பெறுகின்றன. இயற்கையின் படைப்பில் உலகில்
தோன்றிய உயிர்கள் உயர்திணைக்கும், அஃறிணைக்கும்
உரியவையாகின்றன.
உயர்திணைக்கு உரியவர்களாக மனிதர்கள்
சிறப்புப் பெறுகின்றனர். அஃறிணைக்கு உரியனவாக
விலங்குகளும், தாவரங்களும் அமைகின்றன. அவை
பகுத்தறிவினைப் பெறாவிட்டாலும்கூட உலக நெறிகளை
உணர்த்தும் உணர்வுகளைப் பெற்றனவாகப் படைப்பாளர்
காட்டுகிறார். உலகில் தோன்றிய அஃறிணை
உயிர்களையும்
தத்துவ நெறிக்கு உட்படுத்தும் அளவில் படைப்பாளர் சிறந்த
உலக நேயத்திற்கு வழிகாட்டுபவராக விளங்குகிறார்.
படைப்பாளர் காட்டும் உலக நெறிக்குரிய சிறுகதைகளைப்
பின்வருமாறு காணலாம்.
5.2.1 விலங்குகள் வழி அறியப்படும் தத்துவங்கள்
இச்சிறுகதைத் தொகுப்பில் விலங்குகள் கூறும்
தத்துவங்களை உரைக்கும் சிறுகதைகளாகப் பல சிறுகதைகள்
இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இருப்பது மட்டுமா வாழ்வு,
பாதுகாப்பு, ஆதாரம் ஆகிய சிறுகதைகள் விலங்குகளுக்கு
மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும்
பாடம் கற்றுத் தரும் அளவில்
சிறப்பிடம் பெறுகின்றன. இக்கதைகளும், கதைகள் உணர்த்தும்
தத்துவக் கருத்துகளும் பின்வருமாறு விளக்கப்படுகின்றன.
இருப்பது மட்டுமா வாழ்வு - சிறுகதை
ஆமைகள் இரண்டு சந்தித்துக் கொண்டன.
'வர வர
உலகம் மோசமாகி விட்டது.
ஏன்தான் இப்படி அவசரகதியாய்
ஆகிவிட்டார்களோ? இப்படித் தலைதெறிக்க ஓடுகிறார்களே,
எல்லாரும் முட்டி மோதி விழப் போகிறார்கள்' என்றது ஒன்று.
'ஆமாம், இப்படி அவசரப்பட்டு என்ன
சாதிக்கப் போகிறார்கள்.
அல்பாயுசில் போய் விடுவார்கள். நம்மைப் போல் முன்னூறு,
நானூறு
ஆண்டுகள் வாழ முடிகிறதா இவர்களால்? நிதானமாய்
இருந்தால் தானே நீடிக்கும் ஆயுள்!' என்றது
மற்றொன்று
கதை கூறும் தத்துவ நெறிகள்
இன்றைய அவசர உலகம் விலங்குகளின் வாயிலாக
விமர்சிக்கப்படுகிறது. மனிதன் பரபரப்பான வாழ்க்கை
மேற்கொண்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது. நிதானமின்றி
அவசரப்படும் மனிதன், வாழ்க்கையில் சாதனைக்கு இடமின்றி
விரைவில் தன் வாழ்வை இழந்து விடுவதை இக்கதை
புரியவைக்கிறது. வாகனத்தில் வேகம், வாழ்க்கையில் வேகம்
இவையனைத்தும் மனிதனின் உடல் மற்றும் உள்ளத்தைப்
பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆமை போல் நிதானமாய் இருந்தால் பயன் இல்லை
என்ற பழைய கருத்து
இன்றைய சூழலில் புதுவடிவம் பெற்றுச்
சிந்திக்க இடமளிக்கிறது. அவசரப்பட்டு, சாதிக்காமல்
அல்பாயுசில் போய்விடுவதைக் காட்டிலும் நிதானமாய்ச்
செயல்பட்டு ஆமையைப்போல் நீண்ட நாள் வாழ்வதே
சாதனைக்குரியது என்பது அறியப்படுகிறது. வாழ்க்கை
வாழ்வதற்கே என்பது உணர்த்தப்படுகிறது. பதற்றமில்லாமல்
செயல்படுவது அவசியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.
ஆகவே நிதானமான
வாழ்க்கை, ஆரோக்கியமான எண்ணங்கள்
ஆகிய இவைகளே மனிதனை நீண்ட நாளைக்கு வாழவைக்கும்
என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது இச்சிறுகதை.
பாதுகாப்பு - சிறுகதை
நத்தைக்கு வெகுநாளாய் ஒரு வருத்தம், தன்னால்
வேகமாக நடக்க முடியவில்லையே
என்று. முயல் ஒன்று,
துள்ளிக்குதித்து வேகமாய் ஓடுவதைப் பார்த்து நத்தை, ‘எப்படி
நீங்களெல்லாம் வேகமாய் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டது.
‘இதிலென்ன வியப்பு, வெறுமனே இருப்பதால் வேகமாய்
இருக்கிறோம். ஆமையைப் பார்த்தாயா? அதுவும் மிதம். அதன்
முதுகில் ஓடு. உன் முதுகில் கூடு.
அதனால்தான் பாரம் தூக்கிக்
கொண்டு மெதுவாக நடக்கிறீர்கள். பாதுகாப்பு அதிகமாக
அதிகமாக
வேகம் குறைகிறது. நீயும் கூட்டை உதிர்த்து விடு.
வேகமாய் இருக்கலாம்’ என்றது முயல்.
அப்பொழுது அருகிலிருந்த மரத்தடியில் ஏதோ சலசலக்க
முயல் துள்ளி ஓடி மறைந்தது. நத்தை கூட்டுக்குள் புகுந்து
அங்கேயே கிடந்தது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்ற
தத்துவம் இதன் வழி வெளிப்படுகிறது. ஒருவரைப் பார்த்து
மற்றவர் வருந்துவதும், தாழ்வு மனப்பான்மை கொள்வதும்
தேவையில்லை என்பது உரைக்கப்படுகிறது. இறைவன்
படைப்பில் ஒவ்வொரு உயிரும் ஒரு சிறப்புத் தன்மை
கொண்டே உருவாகியுள்ளது. அந்தந்த உயிரும் அதனதன்
சிறப்பினை உணராத
வரையிலும் பிற உயிர்களைக் கண்டு
வருந்தவே செய்யும். அதை உணரும் நிலையில் பிரச்சனைக்கு
இடமில்லாமல் போய்விடும். நத்தைக்குத் துள்ளிக் குதிக்கும்
முயலைப் பார்த்து, தன்னால் வேகமாக ஓடமுடியவில்லையே
என்ற வருத்தம். அதே சமயம் ஆபத்து வரும்போது முயல்
துள்ளிக்குதித்து ஓடித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள
வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் நத்தைக்கு அத்தகைய
அவசியமின்றி இருந்த இடத்திலேயே தன்னைக்
கூட்டுக்குள் நுழைத்துக் கொண்டு காப்பாற்றிக்
கொள்வதைக்
காணமுடிகிறது. ஆகவே வேகம் முயலுக்கும், நிதானம்
நத்தைக்கும் சிறப்பினைத்
தருவதைக் காண முடிகிறது.
மனிதர்களும் இங்ஙனமே அவரவர் சிறப்பினை உணர்ந்து
அதற்கேற்பச் செயல்படுவதன்
மூலம் சிறப்படையலாம் என்பது
உணர்த்தப்படுகிறது. நத்தைக்குச் சுமை இருப்பதால்
ஓடமுடியவில்லை. அதே போல, முயலுக்குச்
சுமை
இல்லாததால் நன்கு ஓட முடிகிறது. மனித வாழ்க்கையும்
இதனை ஒத்ததாகவே
உள்ளது. தவறுகளுக்கு இடமில்லாத,
மடியில் கனமில்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் பாதுகாப்பாக
வாழமுடிகிறது. தவறுகளுக்கு இடம் கொடுப்பவர்களின்
வாழ்க்கையே பாரமாகி, மன உளைச்சலுக்கு ஆளாகித்
துன்பப்படுவதைக் காண முடிகிறது.
ஆதாரம் - சிறுகதை
மண்புழுவும், பூரானும் சந்திக்க நேர்ந்தது. பூரான்
மண்புழுவைப் பார்த்து, ‘எனக்கு எத்தனைக் கால்கள் பார்.
உனக்கு ஒன்று கூட இல்லையே’ என்று கேலி செய்தது.
அவ்வழியாக வந்த மனிதன் இவற்றின் பேச்சைக் கேட்டுவிட்டு,
பூரானைப் பார்த்துச் சொன்னான், ‘உனக்கு இத்தனை கால்கள்
இருந்தென்ன பிரயோஜனம்? கடிப்பதைத் தவிர வேறென்ன
செய்திருக்கிறாய்?
கால்கள் இல்லாவிட்டாலும் இந்த மண்புழு
மண்ணைப் பண்படுத்தி, மகசூலைக் கூட்டுகிறதே’ என்கிறான்.
கதை கூறும் தத்துவ நெறிகள்
பிறருக்குப் பயனில்லா வாழ்வு பாராட்டிற்கு இடமளிக்காது
என்ற கருத்து
இக்கதை மூலம் உணர்த்தப்படுகிறது. பிறருக்குப்
பயன்படாத உள்ளம், செல்வம் இருந்தும் பயனற்றவை என்பது
அறிவுறுத்தப்படுகிறது. பிறருக்கு நன்மை செய்து வாழும்
வாழ்வினை வாழாவிட்டாலும், பிறருக்குத் துன்பம் கொடுத்து
வாழும் வாழ்வு கூடாது என்பது பூரானின் மூலம்
உணர்த்தப்படும்
தத்துவக் கருத்தாகிறது. தன்னிடம் இருப்பதைப்
பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை
உடையவன் மண்புழுவை ஒத்தவனாவான். இதன் மூலம்
மனிதனின் சொல்லும், செயலும் பிறரின் நல்வாழ்வை
நோக்கியதாக அமைந்து, மனிதநேயத்தை வளர்க்க உதவ
வேண்டும் என்பது
கதை வலியுறுத்தும் கருத்தாகிறது.
5.2.2 பறவைகளின் வழி அறியப்படும் தத்துவங்கள்
படைப்பாளர் நல்ல ஏற்புடைய கருத்துகள் எவர் வழிப்
பிறப்பினும் அவற்றை ஏற்றுக்கொள்வதே சிறப்பு என்ற
அடிப்படையில் பறவைகளின் வழி அறியப்படும் தத்துவக்
கருத்துகளைச் சிறுகதையாக்கியுள்ளார். பறவைகள் கூறும்
கருத்துகள் அவற்றின் இனத்திற்கும் மனிதனுக்கும்
பயனளிப்பனவாகவே உள்ளன. இப்பகுதியில் மூன்று
சிறுகதைகள் இடம்பெறுகின்றன. துணிவு, வரம்,
நிறபேதம்
ஆகிய சிறுகதைகள் உணர்த்தும் தத்துவக் கருத்துகளை இனிக்
காண்போம்.
துணிவு - சிறுகதை
வெளியே அசுர மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து
கொண்டிருந்தது. கூட்டிலிருந்து ஒரு குருவி வெளியே பறக்கத்
தயாரானது. தாய்க்குருவி தடுத்தது. ‘இம்மழையில் பறக்கிறாயே,
அடிக்கிற காற்றில் சிறகுகள் பிய்ந்து இறந்துவிடுவாய்.
உனக்கென்ன பைத்தியமா?’ என்றது.
‘இம்மழை தொடர்ந்தால்
வயல்கள் எல்லாம் மூழ்கி உண்ண ஒரு மணியும் கிடைக்காது.
நீங்கள் உயிர்த்திருந்தாலும் பசியில் மரிப்பீர்கள். பசியில்
மரிப்பதிலும், விபத்தில் மரிப்பது தேவலை. முடிந்தால்
தப்பித்துத் தொலைதூரம் செல்வேன்’ எனக் கூறிவிட்டுப்
பறந்தது.
‘எட்டிப் பறக்கிறவர்கள்தானே வெற்றியைத் தட்டிப்
பறிக்க
முடியும்!’ என்பதோடு கதை முடிவடைகிறது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
சிக்கல்களை எதிர்கொண்டு வாழ மனிதன் கற்றுக்கொள்ள
வேண்டும் என்பதை
இச்சிறுகதை வலியுறுத்துகிறது. சிக்கல்களை
எதிர்கொள்ள விரும்பாமல் உயிரை விடுவதைக் காட்டிலும்,
அவற்றை எதிர்கொண்டு உயிர்வாழ்வது சிறந்தது என்பது
உரைக்கப்படுகிறது. வாழ்க்கையில் சிரத்தை
எடுத்துக்கொண்டு
வாழாவிட்டால் வாழ்க்கையே கிடையாது (சிரத்தை - அக்கறை).
வெற்றி என்பது நாம் உட்கார்ந்த இடத்திலேயே வந்து
கிட்டுவது அல்ல. அதை எட்டிப்பிடிக்க உழைப்பு வேண்டும்;
முயற்சி வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது. இக்கதையில்
இடம்பெறும் குருவி, தாய்க்குருவி தடுத்தும் கேளாமல், மழையில் இறந்தாலும் பரவாயில்லை என்ற
நிலையில் உயிர்
வாழும் பொருட்டு வேறு இடம் நோக்கிச் செல்லும் முயற்சி
அதன் வெற்றிக்கு வழிகாட்டுவதாயுள்ளது. ‘வயல்கள் எல்லாம்
நீரில் மூழ்கிய நிலையில் உணவின்றி, நீங்கள் இப்போது
உயிர்த்திருந்தாலும், இறக்க வேண்டித்தான் வரும்’ என்பதன்
மூலம் கஷ்டப்படாமல் வெற்றி கிட்டாது என்பது
அறிவுறுத்தப்படுகிறது. இக்கருத்து குருவிகளுக்கு மட்டுமல்லாமல்
உயிர் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்
தத்துவ நெறியாகிறது.
வரம் - சிறுகதை
வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம்
தட்டான் பூச்சிக்குப் பொறாமை. ‘நானும் பூச்சியினம்தான்.
ஆனால் உனக்கு மட்டும் எப்படி, இப்படிப் பளபளப்பான
இறக்கைகள்? தேன் உண்ணும் காரணத்தினாலா?’ என்று
கேட்கிறது. அதற்கு வண்ணத்துப் பூச்சி சொன்னது: ‘நான்
என்னைக் கூட்டுப்புழுவாகக் குறுக்கி வெளியே வராமல்
எனக்குள்ளே சுயக்கட்டுப்பாடுடன் பல நாட்கள் உணவின்றித்
தியானம் செய்கிறேன். அதனால்தான் எனக்கு வண்ணச்
சிறகுகள் முளைக்கின்றன. தவம் இல்லாமல் வரம் கிடைக்குமா?’
என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
இக்கதை கூறும் கருத்துகள் தட்டான்பூச்சிக்கு மட்டுமன்றி
மனித இனத்திற்கும்
பொருந்துவதாகின்றன. பிறரது
வளர்ச்சியைப் பார்த்துத் தட்டான் பூச்சியைப்போல்
பொறாமைப்படுவதைக்
காட்டிலும், வளர்ச்சிக்கு என்ன காரணம்
என்று அறிந்து செயல்படுதலே நலம் பயப்பதாகும். வண்ணச்
சிறகுகள் வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும்
வண்ணத்துப்பூச்சி சுயகட்டுப்பாடுடன் உணவின்றி, தியானம்
செய்து அதில் வெற்றியும் பெறுகிறது. அதேபோல்தான்
மனிதனும் தான் விரும்பும் ஒன்றினைப் பெற, தன்னை
உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அதிலேயே தன்
கவனத்தைப் பதித்து,
சுயகட்டுப்பாட்டிற்கு இடமளித்து நிலைக்க
வேண்டும். எந்த ஒரு செயலையும் தவம்போல எண்ணி,
சிந்தை
கலையாமல் செயல்படும்போது மட்டுமே அதன் முழுப்பயனாக
வரம் கிட்டும் என்பது கதை
உணர்த்தும் தத்துவ நெறியாகிறது.
நிறபேதம் - சிறுகதை
ஒரு நாள் காகமும் வெண்புறாவும் ஓர் இலுப்பை
மரக்கிளையில் சந்தித்துக் கொண்டன. காகம் கேட்டது
‘ஒற்றுமையை உலகுக்கு உணர்த்துவது எங்கள் இனம். கூடி
வாழ்வதே எங்கள் கொள்கை. அப்படியிருக்கையில்
அமைதிக்குச் சின்னமாய் உங்களை எப்படி
உருவகப்படுத்தினர்?’ புறா சொன்னது: ‘உங்கள் தோற்றத்தில்
கொஞ்சம் வன்மம் உண்டு. எங்கள் உருவத்தில் சாந்தம்
தெரிவதால் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது’
என்றது. ‘உங்களிலும் சாம்பல் நிறப் புறாக்கள் உள்ளன.
ஆனால் வெண்ணிறத்துக்கு அல்லவா முன்னுரிமை. இதுவும்
நிறம் சம்பந்தப்பட்டதா?’ என்று காகம் கேட்டது.
‘எப்படியாயினும் வெள்ளை என்பது நிறமல்ல. நிறங்களின்
தொகுப்பு.
அனைத்து நிறங்களின் சங்கமத்தில்தான் சமாதானம்
அல்லவா’ என்கிறது புறா.
யாரோ தூக்கியெறிந்த முறுக்குத் துண்டு ஒன்று
கண்ணில்பட, காகம் கரைய, கூட்டம் கூடியது, என்பதோடு
கதை முடிவடைகிறது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
மனிதர்களுக்கு மட்டுமல்ல நிற பேதம், அது
பறவைகளுக்கும் உண்டு என்ற
சிந்தனையின் அடிப்படையில்
எழுந்த சிறுகதையாக உள்ளது. ஒற்றுமைக்கு உதாரணமாகக்
காக்கைக்
கூட்டம் விளங்கிய போதிலும், அதன் தோற்றத்தில்
வன்மம் இருப்பதால் அது அமைதியின்
சின்னமாகத்
தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று புறா கூறுகிறது. இதன் மூலம்
அமைதிக்கான சின்னத்தைத்
தேர்ந்தெடுப்பதில் உள்ள காரண
காரியம் விளக்கம் பெறுகிறது. இதைக் கேட்ட காக்கை,
அமைதியின் சின்னம் புறா என்றால் உங்களுள் இருக்கும்
சாம்பல் நிறப் புறாவை அமைதியின் சின்னமாக
அறிவித்திருக்கலாமே? இதுவும் நிறம் சம்பந்தப்பட்டதா?
என்கிறது. இதிலிருந்து
கருப்பு நிறம் காரணமாகவே காக்கையும்,
சாம்பல் நிறப் புறாவும் புறக்கணிக்கப்படுவதாகக்
கூறப்படுகிறது.
அதற்குப் புறா, வெள்ளை என்பது ஒரு தனிப்பட்ட நிறமல்ல.
அது அனைத்து நிறங்களின்
சங்கமம் என்று கூறுவதிலிருந்து,
வெள்ளை நிறத்துள் சிவப்பு, ஊதா, பச்சை, நீலம், மஞ்சள்
முதலிய ஏழு நிறங்களும் அடங்கியிருப்பது தெரிய
வருகிறது. ஆகவே நிறபேதத்திற்கு இடமளிக்காத
வெண்மை
நிறத் தொகுப்பே சமாதானத்திற்கு இடமளிக்க முடியும் என்பது
அறியப்படுகிறது (சங்கமம்
- ஒன்று சேருதல், கூடுதல்).
ஆகவே நிறபேதம் என்பது பிரித்தறியும் நிலையிலேயே
அது போட்டிக்கும்,
பொறாமைக்கும் இடமளிக்கும். ஒன்று
சேர்த்துப் பார்க்கும் போது அது நிறபேதமின்றி
வெண்மையாகிச்
சமாதானத்திற்கே இடமளிக்கும்.
5.2.3 தாவரங்களின் வழி அறியப்படும் தத்துவங்கள்
உலக உயிர்களைத் தம்முடைய சிறுகதைத் தொகுப்பில்
இடம்பெறச் செய்யும் படைப்பாளர் இவ்வகையில்
தாவரங்களையும் இடம்பெறச் செய்துள்ளார். மனிதன்
தாவரங்கள் மற்றும் விலங்குகளைச் சார்ந்தவனாகவே
தன்னுடைய வாழ்க்கையை நடத்துகிறான். இதன் மூலம்
தாவரங்கள் உரைக்கும் தத்துவங்களையும் அவன் அறிபவன்
ஆகிறான். இப்பகுதியில் தாவரங்கள் உரைக்கும்
தத்துவங்கள்
ஆழமும் அகலமும், வழிபாடு, தவிப்பு
ஆகிய மூன்று
சிறுகதைகளின் வழி அறியப்படுகிறது.
தவிப்பு - சிறுகதை
பூக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த மல்லிகை,
தாமரையைப் பார்த்துப் பகர்ந்தது. ‘உன் அளவிற்கு நான்
பெரிதாக இல்லையே. அளவில் சிறியதாய், நுட்பமாய்ப்
போய்விட்டேனே என்னும் ஏக்கம்தான் என்னை இந்தக்
கொடியிலும் வாட்டுகிறது.’ ‘எனக்கில்லாத மணம்
உனக்கிருக்கிறதே என ஏன் நீ மகிழக் கூடாது? நம்மில்
மகரந்தச்சேர்க்கை நடப்பதற்காகத் தானே நிறமும், மணமும்.
மணம் கொண்டு நீ தேனீக்களை ஆகர்ஷித்து விடுகிறாய்.
மணமற்ற நான் அவற்றை அளவைக் கொண்டே ஈர்க்க முடியும்.
ஒன்றைக் கொடுத்துவிட்டுத்தான்
ஒன்றைப் பறித்துக்கொள்கிறது
இறைமை. கிடைத்ததற்காக நாம் என்றேனும் நன்றி
சொல்லியிருக்கிறோமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்’
என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
இருப்பதை வைத்து நிறைவு அடைந்து வாழும் வாழ்க்கை
நெறியினை இக்கதை
உணர்த்துகிறது. தாவரங்களில், மலர்கள்
அவற்றின் இனப்பெருக்க உறுப்பாக விளங்குகின்றன. பூக்களின்
மணம், மற்றும் நிறத்தின் அடிப்படையில் தேனீக்கள்
கவரப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. தாமரைக்கு
நிறம் உண்டு; மணம் இல்லை. மல்லிகைக்கு மணம் உண்டு;
கவர்ச்சியான
நிறம் இல்லை. ஒன்றிடம் இருப்பது
மற்றொன்றிடம் இல்லையே
ஒழிய, ஒவ்வொன்றிற்கும் என்று
ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆகவே அதை ஒவ்வொருவரும்
உணர்தல் வேண்டும். அதை உணராமல் நம்மிடம் இல்லாத
ஒன்றை எண்ணி ஏங்குவது தேவையற்றது என்பது
உணர்த்தப்படுகிறது. இறைவன்
பாரபட்சமின்றி
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பினைக்
கொடுத்துள்ள
அளவில் அச்சிறப்பினை உணர்ந்து செயல்படுதலே
தேவை என்பது உணர்த்தப்படுகிறது. அதற்காக நாம்
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமே ஒழிய,
இல்லாததை எண்ணி வருந்தக் கூடாது என்னும்
தத்துவ நெறியை இதன் மூலம் உணரலாம்.
ஆழமும் அகலமும் - சிறுகதை
ஒரு தோட்டத்தில் ஓர் ஆலமரத்தையும், வாழையையும்
தோட்டக்காரன் அருகருகில் நட்டான். ஆலமரம் வேர்
பிடிப்பதற்குள் வாழை துளிர் விட்டு வளர ஆரம்பித்தது.
ஒவ்வொரு இலை விரியும் பொழுதும் வாழை
ஆலங்கன்றைப் பார்த்துப் பெருமிதத்துடன் சிரித்துக்
கொண்டேயிருந்தது. ‘நான் எவ்வளவு வேகமாய் வளர்கிறேன்
பார்’ என்பதுபோல் வளர்ந்தது. விரைவில் குலை தள்ளி,
தண்டெடுக்கப்பட்டு, தரையில் விழுந்தது வாழை. ஆலமரம்
சொன்னது: வேகமாய் நீ வளர்ந்தது மடிவதற்காக, நான்
மெதுவாக வளர்கிறேன்.
உன்னைப்போல் மேலோட்டமானதல்ல
என்னுடைய வளர்ச்சி. மேலே வளரும் அளவிற்கு பூமிக்குள்
வேர் செலுத்திக் கீழேயும் என்னை ஸ்திரப்படுத்திக்
கொள்கிறேன். பன்னெடுங்காலமாய்ப் பூமியில் விழுதுக்
கைகளை ஊன்றியும் நான் வாழ்ந்திருப்பேன்’ என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
பிறரின் பெருமையை அறியாமல் அவர்களை
ஏளனப்படுத்துவது நல்ல வளர்ச்சிக்கான
அடையாளம் ஆகாது
என்பது உரைக்கப்படுகிறது. ஆலமரமும், வாழை மரமும்
வெவ்வேறு வகையான வளர்ச்சிப்
பருவங்களைக் கொண்டவை.
ஆலமரம் முழுவளர்ச்சியடைய நாளாகிறது. வாழை மரம்
விரைவில் வளர்வதுடன், தன் வாழ்க்கையையும் விரைவில்
முடித்துக் கொள்கிறது. இதற்குள் ஆலமரத்தை ஏளனம்
செய்வதாலோ, தன் வாழ்க்கையை எண்ணிப் பெருமிதம்
கொள்வதாலோ ஏதாவது பயன் விளைகிறதா? என்றால் ஒன்றும்
இல்லை. மாறாக அவ்விகழ்ச்சியை ஆலமரம் தாங்கிக்கொண்டு,
தன் வளர்ச்சியைப் பூமிக்குக்
கீழே செலுத்தியும் நிலைப்படுத்திக்
கொண்டும் வாழ்கிறது.
இதைப்போலவே மனிதர்கள் தம்மைப் பிறர் ஏளனம்
செய்வதைப் பொறுத்துக்கொண்டு நிலைபெற்ற வளர்ச்சியைப்
பெறவேண்டும். குறுக்கு வழியிலான வளர்ச்சி ஒரு மனிதனுக்கு
நிலைத்து நிற்க உதவாது. ஆகவே மனிதன் தன்னை
நேர்மையாக, நிதானமாக உருவாக்கிக் கொள்வதன் மூலம்
ஆலமரம்போல் பெருகித் தழைக்க முடியும் என்பது
அறியப்படுகிறது.
வழிபாடு - சிறுகதை
அந்தக் கோயில் முன் அமர்ந்து பூமாலை கட்டும் அந்த
வயோதிகரைக்
கண்டவுடன் சற்றேனும் நின்று அவர் விழிகளின்
வெளிச்சத்தைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே செல்லமுடியும்.
உள்ளே அர்ச்சகர் முகத்தில் தெரியாத தீட்சண்யம் இவரிடம்
இருக்கிறதே.
அந்த வயோதிகர் சொன்னார் : ‘நான் இந்தப் பூக்களை
வெறும் வருமானத்திற்காகப் பறித்து வருவதில்லை. இவை
ஒவ்வொன்றையும் கட்டும்போது அவற்றின் கழுத்துகளுக்கு
நோகாமல் கட்டுகிறேன். நானே இறைவனுக்குச் செலுத்துகின்ற
சந்தோஷத்தோடு இதைச் செய்கிறேன். நான் இறைவனை
இதுநாள்வரை உள்ளே சென்று வணங்கியதில்லை. இதுமட்டுமே
நான் அவருக்குச் செய்கின்ற வழிபாடு’ என்பதோடு கதை
முடிவடைந்துள்ளது.
கதை கூறும் தத்துவ நெறிகள்
வழிபாட்டிற்கு உரிய மலர் எங்ஙனம் தூய்மையாக
இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறதோ
அதுபோலவே மனிதர்களும் தங்களின் தூய்மையான
கடமையின் மூலம் இறைவனுக்குத் தம்மை அர்ப்பணித்துக்
கொள்ள வேண்டும் என்பது கூறப்படுகிறது. தாவரங்கள்
மனிதர்களின் மனநலத்தைப் பேணுவனவாயுள்ளன. அதிலும்
மலர்கள் மனத்திற்கு அதிக அளவில் மகிழ்வூட்டக்
கூடியனவாயுள்ளன. அந்தப் பூமாலை கட்டுபவருக்குப் பூக்கள்
உயிருடன் இருக்கும் ஒரு உறவாகவே
அமைந்துவிடுவதை
உணரமுடிகிறது.
அதன் காரணமாகவே அவர் பூக்களின் கழுத்து
நோகாமல் கட்டுகிறார். பூக்கள் பூமாலையாகி இறைவனைச்
சென்றடைவதன் மூலம் தானே இறைவனை நேரில் சென்று
வணங்குவதாகக்
கருதுகிறார். தான் இதுவரை ஆலயத்திற்குள்
சென்றதில்லை. பூக்களின் மூலம் மட்டுமே
இறைவனை அவர் வழிபடுவதாகக் கூறுகிறார். பூக்கள்
அவருக்கு அதிக அளவு மனமகிழ்ச்சியை அளிப்பதன்
மூலமாகவே அவரது முகமும் பொலிவுடன் காணப்படுகிறது.
இதன் மூலம் தாவரங்கள் மனித மனத்திற்கு இதமளித்து
மனநலம் பேணுவனவாக இருப்பது தெரிய வருகிறது. ஆகவே
பசுமை பேணப்பட வேண்டும் என்பதும் மரங்களை
மனிதர்களாகப் போற்ற வேண்டும் என்பதும் தத்துவ
நெறிகளாக அறியப்படுகின்றன.
|