5.5 உலக வாழ்வில் தத்துவ நெறிகள் பெறும் இடம் இந்த உலக வாழ்வு தத்துவ நெறிகளுக்கு உட்பட்டதாகவே விளங்குகிறது. தத்துவ நெறிகளை உணராத, கடைப்பிடித்து வாழாத மனிதன் கூடத் தன்னுடைய வாழ்வில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் தத்துவ நெறியினை உணர்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறான். ஏனெனில் வாழ்வின் அனுபவங்களும் அவன் அடையும் நன்மை, தீமைகளும் அவனுக்குத் தத்துவ நெறிகளைப் போதிப்பதாயுள்ளன. ஒருவன், தன்னுடைய வாழ்வில் துன்பப்படுவதற்கும், தண்டனையை அடைவதற்கும், தத்துவ நெறியினைப் பற்றிய அறியாமையே காரணமாகிறது. ஆகவே மனிதனின் நல்வாழ்விற்கு வழிகாட்ட, தத்துவ நெறிகள் தேவையானவையாகின்றன. மனிதன் தன்னை முன்னேற்றிக் கொண்டு மனிதத் தன்மை பெற்று விளங்குவதற்கும், துயரமில்லா வாழ்வு வாழ்வதற்கும் தத்துவ நெறிகள் தேவை என்பது உணரப்படுகிறது. இவ்வளவில் உலக வாழ்வில் தத்துவ நெறிகள் பெறுமிடம் சிறப்பிற்கு உரியதாகிறது.
தத்துவ நெறி வாழ்க்கையை உணர்ந்து வாழ வழிகாட்டுகிறது. தத்துவ நெறி வாழ்வின் பேருண்மைகளை உணர்த்தி, எத்தகைய வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதாயுள்ளது. பேருண்மைகள் அறிவின் பயனாக இருப்பதால், சிக்கல்களைத் தவிர்த்து வாழ வழிகாட்டுகிறது. யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழக் கற்றுத் தருகின்றன. எந்தெந்த நெறிகளை மீறும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்து செயல்பட உதவுகின்றன. தவறுகள் உணர்த்தப்பட்டு, மனிதர்கள் திருந்தி வாழப் பேருண்மைகள் துணைநிற்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன்னலம் கருதாது, பொதுநலம் பேணி வாழ வழிவகுக்கின்றன. தத்துவ நெறிகள் உணர்த்தும் பேருண்மைகளை அறிந்து வாழ்வதன் மூலமாகவே இவ்வுலகம் உய்வுபெற இயலும் என்பது சிறுகதைகள் மூலம் அறியப்படும் கருத்தாகிறது. தத்துவ நெறிகள் வாழ்விற்கு எங்ஙனம் வழிகாட்டுகின்றன என்பதைக் காணலாம்.
ஆகவே தத்துவக் கருத்துகளைக் கைக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை எட்ட வேண்டும் என்ற சிறந்த வழிகாட்டுதலைச் சிறுகதைகள் மூலம் நாம் பெற முடிகிறது. |