6.0 பாட முன்னுரை சங்க காலம் தொடங்கி இன்று வரையிலும் சமுதாயத்தில் பெண்களுக்கென ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. சங்க காலப் பெண்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கினர். சங்க காலத்தைச் சார்ந்த ஒளவையார், நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், நக்கண்ணையார், காவற்பெண்டு, பாரி மகளிர், இளவெயினி, பெருங்கோப்பெண்டு, பூங்கணுத்திரையார், காக்கைபாடினியார், மாசாத்தியார், பொன்முடியார் ஆகியோர்கள் குறிப்பிடத் தகுந்த பெண்பாற் புலவர்களாக விளங்கினர். இவர்கள் வேறுபாடின்றிச் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இந்நிலையானது இடைக்காலத்தில் தடைப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இடைக்காலப் பெண்கள் தாங்கள் வாழ்ந்த அடக்குமுறைச் சமூகத்தில், தங்கள் உரிமைகளை இழந்து, பல கொடுமைகளுக்கு ஆளாயினர். பால்ய விவாகம், வரதட்சணைக் கொடுமை, விதவைக் கொடுமை ஆகியவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். தங்கள் வாழ்வும், நலனும் பாதிக்கப்பட்ட நிலையில் இடைக்காலப் பெண்கள் பலவீனப்பட்டுப் போயிருந்தனர். இக்காலப் பெண்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு இடமின்றி உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் இயற்றுவதுமான பணிகளில் பெண்கள் ஈடுபட்டு ஆண்களுக்கு நிகராக, சுதந்திரம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். பெண்ணடிமை என்பது படிப்பறிவில்லாத கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது. இவ்வகையில் இக்காலகட்டத்திற்கு உரியவர்களாகி, தங்களின் படைப்புப் பணியைத் தொடர்ந்து வரும் பெண் படைப்பாளர்கள் சிலரின் சிறுகதைகள் இங்குப் பாடமாக அமைந்துள்ளன. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, திலகவதி ஆகியோர் குறிப்பிடத்தக்க சிறந்த சிறுகதைப் படைப்பாளர்கள். இப்பாடப் பகுதியில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் வேலி என்ற சிறுகதையும், சிவசங்கரி அவர்களின் விழிப்பு என்ற சிறுகதையும், இந்துமதி அவர்களின் துணி என்ற சிறுகதையும் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. |