6.1 ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள்

1952இல் நடந்த அகில உலகச் சிறுகதைப்போட்டியில் இராஜம் கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும் என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைகளுக்குரிய பரிசைப் பெற்றது. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் அதன் ஆங்கில வடிவம் இடம்பெற்றது. 1994இல் அவரது அவள் சிறுகதைத் தொகுப்பு சரஸ்வதி பரிசைப் பெற்றது.

இவர் படைத்த பெண்குரல், மலர்கள், வேருக்கு நீர் வளைக்கரம், கரிப்பு மணிகள், சேற்றில் மனிதர்கள், சுழலில் மிதக்கும் தீபங்கள் ஆகிய நாவல்கள் பரிசு பெற்றிருக்கின்றன.

ராஜம் கிருஷ்ணனுக்கு 1991இல் தமிழக அரசின் திரு.வி.க. விருது வழங்கப்பட்டது. 1995இல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதைப் பெற்றார். 1996இல் அக்னியின் அட்சர விருதைப் பெற்றார். ஒரு நாவல் மற்றும் கதை எழுதும்பொழுது இவர் கதைக்குரிய பொருளை முன்னரே திட்டமிட்டு, தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் செய்கிறார். மக்களின் வாழ்க்கையைக் கண்டறிய அங்கேயே தங்கி முழுவதுமாக உணர்ந்த பின்னரே கதை எழுதுகிறார். இதுவே இவரின் தனிச்சிறப்பாகவும் கருத இடமளிக்கிறது.

6.1.1 சிறுகதை - வேலி

இவரது வேலி என்ற சிறுகதை அடுத்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் மனக்குமுறலை, உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. இக்கதையின் மூலம் குடும்பச் சிக்கல்களையும், அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களையும், படைப்பாளரின் சிந்தனையையும் அறிய முடிகிறது. இனி, வேலி கதையின் சுருக்கத்தினைக் காண்போம்.

  • கதைச் சுருக்கம்
  • ''இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்'' என்ற சபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர, நடை துவள வந்த நிலையில் மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமலிருக்கும் பொருட்டு, சுவரைப் பற்றிக் கொண்டு நின்றாள். அப்பொழுது மங்களத்தம்மாளும், அவள் கணவனைப் பெற்றவளும் கூடத்தில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. மாலதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பக்கத்துவீட்டு மங்களத்தம்மாள் நெருப்புக்குச்சியைக் கிழித்துத் தீப்பற்ற வைத்தாள். அந்தத் தீயும் பற்றிக் கொண்டு எரிந்ததை அவர்கள் பேச்சின் மூலம் மாலதியால் அறிய முடிந்தது. மாலதி, கோமதி அம்மாளின் மகனைக் காதல் திருமணம் செய்து கொண்டவள். திருமணத்திற்குப் பின் அவள் கணவன் ஒரு பயிற்சியின் பொருட்டு வெளிநாடு சென்றிருந்தான். மாலதி மட்டும் மாமியார் வீட்டில் ஒதுக்கப்பட்ட ஒரு தனித்த அறையில் இருந்தாள். அவள் கருவுற்றிருந்தாள்.

    ''சீமைகடந்து அவன் போறான்னு தெரிந்திருந்தால் இவளை நான் வீட்டுக்குக் கொண்டான்னு சொல்லியிருக்க மாட்டேன், அதுவும் அவள் குலம் தெரிந்த பிறகு என் மனது குறுகுறுத்து உறுத்துது. ஏதோ உத்தியோகம் சாக்கிலே அவள் வெளியே போகட்டும் வரட்டும்னு ஏன் வச்சிருக்கேன். வீட்டுக்குள்ளே அவளை வச்சுக்கிட்டு உள்ளே தொட்டு ஒத்தாசை செய்யச் சொல்ல முடியுமா'' என்று கோமதி பேசிக்கொண்டே போனாள். அதற்கு மங்களத்தம்மாளும் ''குலமில்ல, சாதியில்லேன்னு சொன்னாலும் அவங்க தொட்டு நீங்க எடுத்துக்க முடியுமான்னு?'' தீக்குச்சியை உரசிப் போட்டாள். ''இவன்தான் ஏடாகூடமாகக் கொண்டு வந்திட்டான்னா, இருக்கிறவங்களுக்கு நல்லவிதமாக் கல்யாணம் ஆக வேண்டாமா? இவ வீட்டுக்கு வந்த பிறகு இந்திரா வீட்டிலிருந்து யாரும் வருவதில்லை. நான் என்ன பண்ணுவேன்? வேலிதாண்ட முடியல. முள்ளிலே சிக்கிக்கிட்டாற் போலிருக்கு'' என்று கோமதி புலம்பினாள்.

    அதற்கு மங்களத்தம்மாள், ''அது எப்படித் தாண்ட முடியும்? எதோ நல்லா உடுத்தி, சிரித்துப் பேசி, வேலைக்குப் போனாலும் கூட மண்ணு மண்ணுதானே? மண்ணிலிருந்து பூவையும், கிழங்கையும் எடுத்துக் கொண்டாலும் மண்ணைப் பூசிக்கவா முடியும்?'' என்றாள். அதோடு ''மகன் வர ஒரு வருஷம் ஆகும். பேறுகாலம்ன்னா என்ன செய்வீங்க'' என்று விசாரித்தாள். அதற்கு ''கோமதி ஆசுபத்திரி இருக்கிறது, பெத்த பின்னே அவங்க அம்மா அல்லது அக்காவுக்குச் சொல்லி அனுப்பினா வந்து பாத்திட்டுப் போறாங்க. இவளுக்காக அவர்களுடன் நான் என்ன சம்பந்தி உறவா கொண்டாட முடியும்'' என்று பெருமூச்சு விட்டாள்.

    கடைக்குட்டி செண்பகம், அண்ணி நிற்பதைப் பார்த்து அம்மாவிடம் அறிவிக்க அவர்கள் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டனர். அந்தப் பத்து வயதுச் செண்பகத்துக்குக் கூடத் தெரியும் என்னதான் அண்ணி அழகாகவும், மற்ற வீட்டுப்பெண்கள் போல இருந்தாலும், அவள் தங்களுக்குச் சமமானவள் அல்ல என்பது.

    மாலதி எண்ணிப் பார்க்கிறாள். ''காதலின் பாதை கரடு முரடாவதை, கல்யாணம் ஆகும்வரைதான் நாவலிலும், சினிமாவிலும் அந்தப் பாதையை நீட்டிக் காண்பிப்பார்கள். உண்மையிலேயே அந்தப்பாதை கல்யாணத்தில் தொடங்கித்தான் நீள்கிறது என்பது பலபேருக்குத் தெரிவதில்லை'' என்று எண்ணுகிறாள். அவள் எடுத்ததற்கெல்லாம் அழும் பிறவி அல்ல. இருந்தாலும் இதையெல்லாம் கேட்டுவிட்டு அவளுக்கு அழவேண்டும் என்று தோன்றினாலும் அதற்குச் சக்தியில்லாமல் படுக்கையில் விழுந்தாள்.

    ''கீழே வந்து காபி குடித்துவிட்டுப் போ'' என்ற மாமியின் குரல் அவளுக்குக் கேட்டும் தலைசுற்றியதால் எழ முடியாமல் பழைய காதல் நினைவுகளை, பிரச்சினையின் ஆரம்பத்தை எண்ணிப் பார்த்தாள். “ஏன் படுத்திட்டே மாலதி? உடம்புக்கு என்ன? மயக்கமா என்ன?” என்றாள் மாமி. செண்பகத்தை அழைத்து ''அண்ணியைத் தொட்டுப்பார்'' என்றாள். ''களைப்பாயிருக்கு ஒன்றுமில்லை'' என்று மாலதி பதில் கூறினாள். ''லீவு வேணும்னா எடுத்துக்கோ'' என்று மாமி சொல்லிவிட்டுப் பிறகு, ''பிள்ளைகள் ஸ்கூலுக்கும், காலேஜுக்கும் சென்றுவிடுவார்கள். உனக்குப் பொழுது போகாது. மேலும் பேறுகாலத்திற்குப் பிறகுதான் லீவு தேவைப்படும். இப்பப் போட வேண்டாம்'' என்ற பாணியில் மாமி கீழே சென்றுவிட்டாள். மாலதி கீழே இறங்கி வருவதற்குள் வெளியறை மேசை மீது காபி, பலகாரம் கொண்டுவந்து வைத்துவிட்டாள். ''குடும்பத்தில் ஒருத்தியாக உலகுக்கு முன்னே ஏற்றாலும், உள்ளத்துக்கு ஏற்கவில்லையே. வீட்டிற்குள் தாராளமாக வளைய வரச் சுதந்திரம் இல்லையே'' என்று எண்ணிக் கலங்குகிறாள். வாய் திறக்காமல், மாமி செயலில் காட்டும் சாதுர்யம் அவளுக்கு வியப்பினைத் தந்தது.

    ''மாலு. . .?'' என்ற குரல் அக்காவும், மாமாவும் வந்திருந்ததை அறிவித்தன. சுட்டிப்பையனை மாலு கொஞ்சினாள். அவர்களின் வருகையை, செண்பகம் கோமதியிடம் தெரிவிக்க, சற்றைக்கெல்லாம் மூச்சிறைக்கப் படியேறி வந்தாள். அவள் அக்காளின் கருப்பு நிறமும், அவளுடைய உடையும், மில்லில் வேலைசெய்யும் அவள் மாமனின் தோற்றமும் அவர்களைச் சமமாக மதிக்க, கோமதிக்கு மனம் வரவில்லை. வெறுப்பை விழுங்கிவிட்டு உபசரித்தாள். அவள் அக்கா ருக்குவும் "அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் அவர்கள் வரவில்லை. பூ முடிப்பு, வளைகாப்புன்னு நீங்க செய்யறது உண்டான்னு அம்மா கேட்டிட்டு வரச் சொன்னாங்க'' என்றாள். ''நாங்கள் பணம் தந்து விடுகிறோம். நீங்கள் ஒரு நாளைக் குறித்துச் செய்யுங்கள்'' என்றாள். மாலு ''இந்த சம்பிரதாயமெல்லாம் எதுக்கு அக்கா?'' என்றாள். இதைக் கேட்ட கோமதி, ''வழக்கத்தை ஏன் குறைக்கணும், பிறக்கும் குழந்தை நன்றாக இருக்க வேண்டாமா?'' என்று கண்டிக்கும் தோரணையில் ருக்மணி கொடுத்த பணத்தை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டாள்.

    ருக்மணி அவர்கள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு டம்ளரைக் கழுவி வைக்க எழுந்தாள். ''இருக்கட்டும் அக்கா, நீ கழுவ வேண்டாம்'' என்று பிடுங்கிக் கீழே வைத்தாள். அத்துடன் அவர்கள் பெரிய கும்பிடு போட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றனர். மாலதிக்குத் தலையைச் சுற்றி வயிற்றைப் புரட்ட மீண்டும் படுக்கையில் விழுந்தாள். மீண்டும் கோமதி அவளை நலம் விசாரித்துவிட்டு, ''சீரக ரசமும், சோறும் கலக்கிக் கொடுத்து அனுப்புகிறேன், குடிச்சிட்டுப் படுத்துக்கோ'' என்று கூறிவிட்டு, ''அஞ்சு தேதியாச்சே, ஆபீசில் இன்னும் சம்பளம் போடலையா?'' என்றாள். ''போட்டுட்டாங்க, சம்பளம் பெட்டியில் இருக்கு'' என்றாள் மாலதி.

    கோமதி அதற்கு, ''உன்னைக் கேட்க வேண்டாம்ன்னுதான் நெனச்சேன். நாளைக்கு சனிக்கிழமை. ஒரு பொழுது மோருக்குக் கூடப் பால் இல்லை. எங்கே வச்சிருக்க சொல்லு?'' என்றாள். மாலதி பெட்டியைத் திறந்து சேலைக்கடியில் இருந்த பர்ஸை எடுத்துக்கொடுத்தாள். ''எந்திரிக்க வேண்டாம். ரசம் சோறு குடிச்சிடு, வாந்தி வந்தாலும் குத்தமில்லை'' என்றபடி சென்றாள். மகளை அழைத்து ''அவர்கள் காபி தம்ளரை கழுவாம வச்சிட்டுப் போயிட்டாங்க; எடுத்துப்போய்க் கழுவு'' என்றாள். மாலதி முழுசாய் ஒரு சம்பளம் கூட அவள் அம்மாவிடம் கொடுத்ததில்லை. படிப்புக்கும் வேலைக்கும் தகுந்த வேஷமிடவே அது அவளுக்குச் சரியாக இருந்தது. வேஷத்துக்கும் தகுந்த பலன் கிடைத்துவிட்டது. ஒரு சம்பளம் கூட இந்த வீட்டில் அவளுக்குத் தங்கவில்லை.

    துயரத்திற்குப் பதிலாக மாலதிக்குச் சிரிப்பு வந்தது. ''வேலியும் இல்லை, முள்ளும் இல்லை, பணத்துக்கு ஒன்றுமே இல்லை'' என்பதோடு கதை முடிவடைகிறது.

    6.1.2 படைப்பாளரின் சிந்தனைகள்

    பெண்களைச் சார்ந்ததாகப் படைப்பாளரின் சமூகச் சிந்தனைகள் இச்சிறுகதையின் மூலம் வெளிப்படுகின்றன. பெண்களுக்குக் குடும்ப அளவிலும், சமூக அளவிலும் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறார் படைப்பாளர். சிக்கல்களுக்கான தீர்வுகள் நேரடியாகப் படைப்பாளரால் கொடுக்கப்படாவிட்டாலும் அவருடைய கருத்துகள் சிந்தனைக்கு இடமளித்து, சிக்கல்களைத் தீர்க்க உதவுவனவாய் உள்ளன. படைப்பாளரின் சிந்தனைகளையும், அவற்றின் வழிப் பெறப்படும் கருத்துகளையும் கீழ்வருமாறு பிரித்துக் காணலாம்.

    • சாதி வேறுபாட்டின் காரணமாகப் பெண்களுக்குக் குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்களும், அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் காட்டப்படுகின்றன.

    • காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூடச் சமூகத்தில் அவை மதிப்பினைப் பெறுவதில்லை என்பது காட்டப்படுகிறது.

    • குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல உறவுமுறைகள் குறைந்து வருவதை, கோமதி, மங்களத்தம்மாள் கதைமாந்தர்கள் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் செயல்கள் மனித நேயமற்ற செயல்களாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

    • சிறுமியாக இருக்கும் செண்பகம் கூட அண்ணி தங்களுக்குச் சமமானவள் இல்லை என்பதை அறிந்திருப்பதன் மூலம் சாதி என்னும் நஞ்சு, பிஞ்சு மனங்களிலும் பாய்ந்து அவர்களையும் சீர்குலைத்திருப்பதைக் காணமுடிகிறது.

    • கணவன் நல்லவனாக இருந்தபோதிலும், அவன் மனைவியுடன் இருந்து குடும்பக்கடன் ஆற்றாத நிலையில், மனைவி மற்றவர் நிழலில் இருக்கும்போது துன்பப்படவே நேரிடும் என்பது காட்டப்படுகிறது.

    • பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார்களிடம் கேவலப்படுவதன் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமூக மதிப்பீடு வேறுபடுவதைக் காணமுடிகிறது.

    • மாலதி எனும் கதைப்பாத்திரம் மூலம் பெண்கள் சமூகத்தில் ஓரளவு மதிக்கப்பெற்று விளங்குவதற்கு அவர்கள் வேலைக்குச் சென்று பொருளீட்டுவதே காரணமாகக் காட்டப்படுகிறது. பொருளாதார பலம் பெறாத பெண்கள் குடும்பத்தில், சமூகத்தில் அல்லலுறுவதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

    • உடம்பு சரியில்லாத மாலதியைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சாதியை ஒரு வேலியாகப் போட்டிருக்கும் சமூக அமைப்பு கோமதி மூலம் வெளிப்படுகிறது.

    நிறத்தாலும், குலத்தாலும், பணத்தாலும் உயர்ந்தவர்கள் கீழ்மட்டத்தில் இருப்பவர்களைக் கேவலப்படுத்தும் சமூக அமைப்பு நெருடலுக்கு உரியதாகிறது.

    காதல் மணம் செய்துகொள்ளும் பெண்கள் தாய் வீட்டிற்குச் செல்ல முடியாமலும், தாய் வீட்டினர் அங்கு வரவும் முடியாமலும், கணவன் வீட்டிலும் இவர்களுக்கு ஆதரவு கிட்டாமலும் தவிப்பதைக் காணமுடிகிறது.

    பிறரின் மன உணர்வுகளுக்கு மதிப்புத் தராமல் பண உணர்வுகள் மட்டுமே மேலோங்கியிருக்கும் சமூக அமைப்பு எடுத்துரைக்கப்படுகிறது.

    ஊர், உலகுக்குச் சந்தேகம் வராதபடி, உள்ளுக்குள் மட்டும் மருமகளைப் புறக்கணிக்கும் மாமியார். ஆனால் மருமகள் சம்பாதித்த பணத்தைப் புறக்கணிக்காமல் அவர் கேட்டுப்பெற்றுக் கொள்வதன் மூலம் ''சாதிக்குத்தான் வேலியும், முள்ளும் போடப்படுகிறதேயன்றிப் பணத்துக்கு இல்லை'' என்பது உணர்த்தப்படுகிறது.

    மேற்கண்ட சிந்தனைகளின் மூலம் படைப்பாளரின் கருத்துகளை அறியமுடிகிறது. எப்பொழுது மாலதியின் சம்பளத்தையும், அவள் அம்மா செய்யும் சீர்ப் பணத்தையும் மாமி ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டாளோ அப்பொழுதே அவள் மாலதியின் சாதியையும், உறவினர்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. அங்ஙனமின்றி மாமி தன்னுடைய தேவைக்கு ஏற்ப மாலதியின் பணத்தை மட்டும் ஏற்பதும், அவளையும், அவளைச் சார்ந்த உறவுகளையும் புறக்கணிப்பதும் தனிமனிதக் குறைபாட்டையே சுட்டுகின்றன. சமூகத்தின் பெயரில் மாமியே போட்டுக் கொள்ளும் வேலியை, தேவையானபோது தாண்டிச்செல்வதும், தேவையில்லாதபோது அதைப்போட்டுக் கொள்வதும் தனிமனிதர்களின் சுயநலத்தையே காட்டுகின்றன. பெண்களுக்குப் பெண்களே எதிரியாவதையும் இதன் மூலம் உணர முடிகிறது.