3.3 நாடகச் சபாக்களும்
நாடக நூல்களும் |
நாடகம் நடத்துவதற்கென சபாக்கள் நிறுவப்பட்டன.
அவை, மேலைநாட்டு நாடகங்களை மொழிபெயர்த்தும், புதிய நாடக
நூல்களை எழுதியும் நாடகத்தை வளப்படுத்தின. |
|
மன்றம்,
அகாடெமி, சபா, கிளப் போன்ற பெயர்களில்
சபாக்கள் தோன்றின. இத்தகைய சபாக்கள் பெரும்பாலும் இந்திய
விடுதலைக்குப் பின்னரே தோன்றின. இசையும் நடனமுமே
நோக்கமாகக் கொண்டு உருவான சபாக்களின் கவனம்
காலப்போக்கில் நாடகத்தின் பக்கம் பாய்ந்தது. சென்னை
போன்ற பெரிய நகரங்களில் மாலை நேரங்களில் சபாக்கள்,
நாடகங்களை நடத்தின. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்,
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பார்த்தசாரதி சுவாமி சபா,
கலாநிலையம் ரசிக ரஞ்சனி சபா, அன்னை கலை மன்றம்
போன்றவை குறிப்பிடத்தக்க சில சபாக்கள். |
|
எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா,
எஸ்.எஸ்.இராசேந்திரன்,சிவாஜி கணேசன்,
எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.கே.இராதா, ஆர்.எஸ்.மனோகர், காத்தாடி
இராமமூர்த்தி, சந்திரகாந்தா, மேஜர் சுந்தரராஜன் போன்றோரின் நாடகக் குழுக்கள் பெரும்பாலும்
சபாக்களில்
நாடகங்களை நடத்தின. ஒய்.ஜி.மகேந்திரன், சோ.இராமசாமி,
விசு, மௌலி, எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், பாலச்சந்தர் ஆகியோரில் சிலர் முன்பும், தற்போதும் சபாக்களையே நம்பி
நாடகம் படைத்து வருகின்றனர். |
|
நடிப்பதற்காக
இல்லாமல் படிப்பதற்கு என்னும் நோக்கில்
கவிதை நாடகங்களும் படைக்கப்பட்டன. 1876இல் கோபாலாச்சாரி வெனிஸ் வணிகன் என்னும் ஆங்கில
நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். 1891இல் சுந்தரம்
பிள்ளை மனோன்மணீயத்தைத் தழுவலாகப் படைத்தார்.
சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்,
கலாவதி, ரூபாவதி, மானவிஜயம் முதலான நாடக
நூல்களையும் எழுதினார். மறைமலையடிகள் சாகுந்தல
நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். தற்பொழுது
பாடத்திட்டங்களுக்கென ஏராளமான கவிதை நாடகங்கள்
படைக்கப்படுகின்றன. தீரன் சின்னமலை என்ற
தலைப்பிலேயே மூன்று பேர் கவிதை நாடகம் படைத்துள்ளனர்.
|