6.1 ஐரோப்பியர் காலம்

தமிழ் உரைநடை வரலாற்றில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள காலப்பகுதி ஐரோப்பியர் காலம் எனப்படும். கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஐரோப்பியர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டே மிகப் பெரியதாகும். சமயம் பரப்பும் நோக்கில் தமிழைப் படித்த ஐரோப்பியர், அதன் இனிமையில் மயங்கினர். ஆய்வு நோக்கில் மொழியை வளப்படுத்தினர். தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கினர். பண்டிதரே படித்தறிய முடிந்த உரையாசிரியர்களின் உரைநடையை மாற்றினர். சிறுசிறு வாக்கியங்களில் மக்கள் பேசும் மொழியில் ஐரோப்பியர் எழுத ஆரம்பித்தனர். அதன் பயனாகத் தமிழுக்கு ஒரு புதிய உரைநடை கிடைத்தது.

6.1.1 அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும்

தனிநாயகம் அடிகளார் 1958 சூலையில் வெளியான Tamil Culture (Vo.VII. No.3. July 1958, P.293) என்னும் ஆங்கிலம் முத்திங்கள் இதழில் தமிழில் அச்சேறிய முதல் நூல் என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் போர்த்துக்கீசிலிருந்து வந்த குருக்களே தமிழ் நூல்களை அச்சிடுவதற்குத் தமிழ் அச்சுப் பொறிகளை உருவாக்கிப் பதினாறாம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிட்டனர்’ என்கிறார். அவர் லிஸ்பன் நகரில் 1554இல் அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.

தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல் தம்பிரான் வணக்கம். இது 1577ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் கேரளாவிலுள்ள கொல்லம் என்னும் இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பக்கங்கள் உள்ளன. 1579இல் கொச்சியில் அச்சிடப்பெற்ற கிரிசித்தியானி வணக்கம் என்னும் நூல் மூன்றாவதாக அச்சிடப்பட்ட நூலாகும். இது மொத்தம் 120 பக்கங்களைக் கொண்டது.

6.1.2 தத்துவ போதக சுவாமிகள்

தமிழில் புதிய உரைநடையைத் தொடங்கி வைத்தவராகத் தத்துவ போதக சுவாமிகளைக் குறிப்பிடுவார் வி.செல்வநாயகம் அவர்கள். இத்தாலியிலிருந்து கி.பி.1606ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். மதுரையில் தங்கிக் கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்தார். தமிழ், வடமொழி இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார்.

தத்துவக் கண்ணாடி, இயேசு நாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம் முதலிய பல நூல்களைத் தத்துவ போதகர் எழுதினார். இவை சமயப் பிரச்சார நூல்களாக அமைந்தாலும், ஒரு புதிய உரைநடைப் போக்கைக் கொண்டதாக அமைந்தன.

பேச்சு வழக்கும், வடமொழியும் கலந்த தத்துவ போதகரின் உரைநடைக்குச் சான்றாக ''ஆதி மனுஷனையும் அவனுக்குத் துணையாகக் கற்பித்தருளின ஸ்திரீயையும் பரிபூரண செல்வங்களைப் பொழிந்திருக்கிறவொரு ஸ்தலத்திலே நிறுத்தி.....'' எனவரும் பகுதியைச் சொல்லலாம். வடசொல் கலந்து பேசும் உயர் வகுப்பினர் பாதிப்பில், கிறித்துவப் பாதிரியார்களும் வடசொல் கலப்புடன் உரைநடை எழுதினர்.

6.1.3 வீரமாமுனிவர்

பெஸ்கி அடிகளார் எனப்படும் வீரமாமுனிவர் இத்தாலியைச் சேர்ந்தவர். கி.பி.1710ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அவரது வாழ்க்கை முறையே ‘தமிழர்’ போல மாறியது. சுப்ரதீபக் கவிராயர் போன்ற பெரும் புலவர்களுக்கு உதவி செய்து, தமிழ் கற்றார்.

தமிழின் முதல் அகராதியான சதுரகராதி 1732இல் வீரமாமுனிவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. தமிழ் இலத்தீன் அகராதியையும் படைத்தார்.

தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களை வெளியிட்டார். லூத்தேர் இனத்தார் இயல்பு, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் போன்ற உரைநடை நூல்களையும், பரமார்த்த குருகதை போன்ற கதைகளையும் எழுதினார்.

வீரமாமுனிவர் உரைநடை இரண்டு வகையாக அமைகின்றது. அவை,

(1)

பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டது. இந்நடை வேதியர் ஒழுக்கம் நூலில் அமைகின்றது.

(2)

உரையாசிரியர்கள் கையாண்ட நடையைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதற்குச் சான்றாகத் தொன்னூல் விளக்கம் நடை அமைகின்றது.

இருவகை உரைநடையில் எழுதினாலும் பெரும்பாலும் ஒரு புதிய உரைநடை வகையினை வீரமாமுனிவர் முதன் முதலில் கையாளத் தொடங்கினார். சான்றாகப் பரமார்த்த குருகதை உரைநடையைக் காட்டலாம்.

''அவிவேக பூரண குருவென்று ஒரு ஆசாரியரிருந்தார். அவர் ஏவிய ஊழியம் செய்யும்படி மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற பெயர் பெற்ற சீஷர்கள் ஐந்துபேர் அவர் மடத்திலிருந்தார்கள்.''

வீரமாமுனிவர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

6.1.4 சீகன்பால்கு

ஜெர்மனியரான சீகன்பால்கு 1706இல் இந்தியா வந்தார். தரங்கம்பாடியில் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். தன் பணிகள் பற்றிய விபரங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். ஐரோப்பியர்கள் தமிழ் மொழியின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ள வித்திட்ட முதல் வித்தகர் சீகன்பால்கு அவர்கள்.

1716இல் தமிழ் மொழி இலக்கணம் என்னும் நூலை சீகன்பால்கு எழுதினார். 128 பக்கங்களையுடைய இந்நூல், தமிழ் மொழியைப் பிற மொழியினர் கற்க உதவியது.

1708இல் தமிழில் உரைநடை, செய்யுள் அகராதியை எழுதி வெளியிட்டார்.

மருத்துவக் குறிப்புகள், சீதோஷ்ண நிலை எனப் பல அறிவியல் குறிப்புகளையும் எழுதி வைத்தார்.

சீகன்பால்குவின் உரைநடை, கல்வெட்டுகளில் அமைந்த உரைநடையைப் பின்பற்றியதாக இருந்தது. இலக்கண நடை தழுவாது மக்கள் பேச்சில் உள்ள மொழியை அப்படியே பின்பற்றினார். மிக நீண்ட வாக்கியங்களை அமைத்து எழுதினார். சான்றாக, ''இதற்கிடையிலெ,  அவரதானெ இந்தப் பிறையாசங்களை யுந, தமது நித்திய சுவசெஷத்தையும் பொதுவாகவும், பிரதானமாகத் தமிடபடுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டின் இந்தப் பொத்தகங்களையும், அதுகளுனக்குச் சீவியத்துக்கான.....'' என அமைகின்றது.

6.1.5 பெப்ரிஷியஸ்

ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் அருட்பணி புரிந்தவர் பெப்ரிஷியஸ். 1740இல் ஜெர்மானியிலிருந்து இந்தியா வந்தார். பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

பெப்ரிஷியஸ் இடையறாது எழுதி வந்தார். அவரது பணிகள் இவ்வாறு அமைகின்றன.

(1)

விவிலிய மொழிபெயர்ப்புப் பணி

(2)

அகராதிப் பணி

(3)

ஞானப்பாட்டுகள் (தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு)

(4)

இலக்கணப் பணி

(5)

அருளுரைகள்
 

பெப்ரிஷியஸ் செய்த மொழிபெயர்ப்பு, நுணுக்கமாகச் செய்யப்பட்ட சொல்வழி மொழிபெயர்ப்பு ஆகும். நடையை விடக் கருத்தே முதன்மையாகக் கொண்டார். ‘இவரது நடையைப் பின்வந்தவர்களும் பின்பற்றியதால், கிறித்தவத் தமிழ் நடை ஒன்று உருவானது. இதற்குக் காரணம் பெப்ரிஷியசே.’ என்பார் சபாபதி குலேந்திரன் என்ற ஆய்வாளர்.

பெப்ரிஷியஸின் அருளுரைகள் என்ற நூலின் உரைநடை மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது என்பார் தி.தயானந்தன் பிரான்சிஸ்.

தமிழ் வசன நடையில் வெளிவந்த மிகப் பெரிய நூல் பெப்ரிஷியஸ் எழுதிய பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு என்பதாகும். பெப்ரிஷியஸ் தமது புதிய ஏற்பாட்டுக்கு எழுதிய முகவுரை, அவரது உரைநடைத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது. ''கர்த்தராகிய பராபரன் மகா இரக்கமாய்ச் சர்வ மனுஷ சாதிக்கும் பரமண்டலத்திலிருந்து அனுப்பின தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்கிற உலக இரட்சகருடைய சுவிசேஷத்தை விளங்கப் பண்ணும் இந்தப் புஸ்தகத்தை வாசிக்கிற யாவருக்கம் பாக்கியம்.....’

6.1.6 பிற ஐரோப்பியர்

ஹென்றி பவர் ஒரு யூரேசியர் ஆவார். இவர் சீவகசிந்தாமணி ‘நாமகள் இலம்பகத்தை’ உரையுடன் வெளியிட்டார். வேத அகராதி உட்பட ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது நடை ஆங்கிலக் கலப்புடன் அமைந்தது. ஐரோப்பிய மொழிகளின் வாக்கிய அமைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் தந்தை எனக் கருதப்படுபவர். இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். இவரது நடை பேச்சு வழக்கிலமைந்த தெளிவான எளிமையான தமிழ் நடையாகும்.

ஜி.யு.போப் தமிழ் செய்யுட் கலம்பகம் என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது நடையும் பேச்சு வழக்கில் அமைந்ததாகும்.